விபத்துகள் எனப்படும் படுகொலைகள்! துயரம்





புதுக்கோட்டை அருகே விபத்தில் இறந்த ஏழு மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிப்பவர்கள். நடந்துபோகும் வழியில் வந்த பால் வண்டியில் ‘லிப்ட்’ கேட்டு ஏறி, பேருந்து மோதி இறந்திருக்கிறார்கள். இந்த நிலையில்...

*  விபத்தின் காரணமாக அரசு வழக்கம்போல் விழித்துக்கொண்டு (!) இதைக் ‘கடுமையாக’ தடுக்கும் வண்ணம், இப்படி வண்டிகளில் ஏற்றிச் செல்வது கடும் தண்டனைக்குரியது என எச்சரிக்கை விடலாம்.

*  இலவச பஸ் பாஸ் வைத்துக்கொண்டு, அந்த வழித்தடத்தில் வரும் ஒரே ஒரு பேருந்தில், மற்ற பயணிகளோடு கசங்கி, படியில் தொங்கிக்கொண்டு நடத்துனரிடமும், ஓட்டுனரிடமும் திட்டு வாங்கிக்கொண்டு செல்லும் மாணவர்களின் புலம்பல் அரசின் செவிகளில் விழாமல் போகலாம்.

*  அரசுப்பள்ளி மாணவர்களுக்காக எல்லா வழித்தடங்களிலும் பயணிக்க பேருந்து வாய்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறோமா என்பதை அலச வழக்கம்போலவே மறந்து போகலாம்.

*  வேகமாக இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் சிலவற்றை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்து, செய்தித்தாள்களில் படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம்.

*  மூன்று, நான்கு மடங்காக பேருந்து நிறுத்தங்கள் கூடிவிட்ட நிலையிலும், போக்கு வரத்து நெரிசல் பல மடங்கு மிகுந்துவிட்ட சூழலிலும், 30 வருடங்களுக்கு முன்பு பேருந்துகளுக்கு அளித்திருந்த அதே பயண நேரத்தை, தொடர்ந்து வைத்திருப்பது குறித்து கள்ள மௌனம் சாதிக்கலாம்.

*  ஓட்டுனர்கள் செல்போன் பேசுவதை பயணிகள்கூட எவரும் குறைந்தபட்சம் கண்டிக்காதது போலவே, போக்குவரத்துக் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் விட்டு, செல்போன் பேசும் இரு சக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே மடக்கி அபராதம் விதிக்கலாம்.

*  குடித்துவிட்டு ஓட்டுவதில் 99% இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமே சிக்கும் நிலையும் தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.

*  மரணக் காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்ப்பவர்கள் உடனடியாகவும், செய்தித்தாளில் பார்ப்பவர்கள் தாமதமாகவும் பதைபதைக்கலாம்.

*  இழந்தது ஒரு உயிர் மட்டுமில்லை... ஒரு தலைமுறையின் வேர் வீழ்த்தப்பட்டதாக அந்தக் குடும்பங்கள் வாழ்நாள் முழுதும் சோகத்தைச் சுமக்கலாம்.

*  அரசு இழப்பென்று ஒரு தொகையை காசோலையாக நீட்டி விட்டு கடந்துபோகலாம்.

*  40 வரி எழுதத் தெரிந்தவர்கள் இதோ என்னைப் போல் கிறுக்கிக் கொண்டிருக்கலாம். நாலு வரியில் மடக்கி சுருக்கமாக எழுதத் தெரிந்தவர்கள், கவிதையாக்கலாம். ‘வண்டி அப்பளமாய் நொறுங்கியது’ என பத்திரிகைகள் தலைப்புச்செய்தி எழுதிவிட்டு, மதியம் ரசச் சோற்றில் அப்பளத்தை நொறுக்கிப்போட்டு உண்ணலாம்.

விபத்துகள் என்பவை கட்டுப்பாட்டை மீறி கண நேரத்தில் நிகழ்பவை. தடுக்க முடிவதில்லைதான்; பல நேரங்களில் தவிர்க்க முடிவதில்லைதான். ஆனால், விபத்துக்கு ஏதுவான எல்லாக் காரணிகளையும் நாமே தயாராக உருவாக்கி வைத்துக்கொண்டு, படுகொலைகளை, தற்கொலைகளை விபத்துதானே என நாளைய பரபரப்பில் மறந்துபோகும் கொடுமையும் வாடிக்கையாகிப் போகலாம்.
வல்லரசுக் கனவு மட்டும் வளர்ந்து கொண்டேயிருக்கலாம்!