இது மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு!




மூன்று ஆண்டுகள் சாப்பிடும் உணவை, மூன்றே நாட்களில் உங்கள் வயிற்றுக்குள் திணித்தால் என்ன ஆவீர்கள்? அப்படித்தான் இயற்கை கோர தாண்டவம் ஆடியிருக்கிறது உத்தரகாண்டில். ஒரு சீஸனில் பெய்யும் பருவமழையை விட மூன்று மடங்கு அதிகமான மழை மூன்றே நாட்களில் கொட்டித் தீர்க்க, இந்த இமயமலை மாநிலம் சிதைந்துவிட்டது. கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி என புனித யாத்திரை போனவர்கள் தவிக்கிறார்கள். எல்லோரும் இயற்கையை குற்றம் சொல்ல, ‘‘இல்லை... இல்லை... இது மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

‘கிளவுட்பர்ஸ்ட்’ எனப்படும் மேகக்குமுறலால்தான் இப்படி சில மணி நேரங்களில் பெரும் மழை கொட்டுகிறது. இமயமலைப் பகுதிகளில் இது அபூர்வமாக நிகழ்வதுண்டு. உயர்வானில் இடி, மின்னலோடு மழைமேகங்கள் திரண்டு நகரும்போது, மலைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டு அப்படியே நின்றுவிடும். இப்படி திகைத்து நிற்கும் மேகத்திரளுக்குள் அழுத்தம் கூடிக்கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அந்த அழுத்தம் தாங்கமுடியாமல் வெடிக்கும்போது, குற்றால அருவியில் கொட்டுவது மாதிரி கடும் வேகத்தில் பெரும் மழை ஓரிடத்தில் கொட்டும். இப்படித்தான் இங்கு மழை பெய்தது.

ஆனால் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த பேரழிவுகளுக்கு அலட்சியமே பெரும் காரணம். மலைப் பிரதேசங்களில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும்போது இயற்கையை சிதைக்கக் கூடாது. ஆனால் உத்தரகாண்டில் மட்டுமே 14 ஆறுகளில் 220 நீர்மின் திட்டங்கள் செயல்படுகின்றன. இன்னும் ஏராளம் இப்போது கட்டுமானத்தில் இருக்கின்றன. ஒவ்வொரு அணை கட்டும்போதும் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. ‘மீண்டும் மரம் நடுவோம்’ எனத் தரப்படும் உறுதிமொழியை நம்பி இவற்றை அனுமதிக்கிறார்கள். ஆனால் ஒற்றை செடியைக் கூட நடாமல் ஏமாற்றுகிறார்கள். இதனால் மழை நாட்களில் நிலச்சரிவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. ‘‘இது பெரும் பேரழிவில் கொண்டு போய் நிறுத்தும்’’ என மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தணிக்கைக்குழு எச்சரித்தது. ஆனால் அந்த எச்சரிக்கை காற்றில் பறக்க விடப்பட்டது.

உத்தரகாசி நகரை ஒட்டி பாகீரதி நதியில் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்ட கடந்த மார்ச் மாதமே நிதி ஒதுக்கி விட்டார்கள். ஆனால் அலட்சியம் காட்டி, அந்தத் தடுப்புச்சுவரைக் கட்டவே இல்லை. விளைவு... வெள்ளத்தில் அந்த நகரமே மூழ்கியது.



‘துயரங்கள் நடப்பதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திட்டம் ஒன்றை வகுத்தது. அந்தத் திட்டம் இன்னமும் காகிதத்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

‘‘நம் ஆட்சியாளர்களைவிட பிரிட்டிஷ்காரர்கள் எவ்வளவோ பரவாயில்லை. இயற்கையாக வெள்ளம் வடிவதற்கு அவர்கள் திட்டமிட்டு வாய்க்கால்கள் கட்டினார்கள். நகரங்களை அழகுபடுத்தவும், சாலைகளை அகலமாக்கவும் அதையெல்லாம் சிதைத்துவிட்டார்கள். அதன் விளைவே இந்தத் துயரம்’’ என்கிறார் இமயமலை சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் அனில் ஜோஷி.
நாம் சுவரை விற்றே சித்திரம் வாங்குகிறோம்.
 அகஸ்டஸ்

எப்போ மழை பெய்யும்?
‘வட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை. கேரளாவில் பருவமழை தீவிரம். கர்நாடகாவில் வெளுத்து வாங்குகிறது’ என பத்திரிகைகளைத் திறந்தாலே தலைப்புகளில் மழை செய்திகள்தான். ஆனால் சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் செஞ்சுரியைத் தாண்டி கொளுத்துகிறது. இரண்டாவது கோடைக்காலம் துவங்கிவிட்டதா? சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணனிடம் பேசினோம். ‘‘ஏப்ரல், மே மட்டுமல்ல... முன்பு ஜூன் மாதத்திலும் இங்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்திருக்கு. இது புதுசு இல்ல. தென்மேற்குப் பருவக் காற்று வேகமாக வீசுவதால், இங்கே வானம் தெளிவாகி வெயிலின் தாக்கம் அதிகமா இருக்கு. இப்போ அங்கே அதிகமா மழை பெய்யுது. அங்கே காற்று குறையும்போது நமக்கு மழை வாய்ப்பு அதிகரிக்கும். அதுவரை காத்திருக்கணும். இன்னும் சில நாட்களில் வெயிலின் தாக்கமும் குறைந்துவிடும்’’ என்றார் அவர் நம்பிக்கையோடு!
 பேராச்சி கண்ணன்