தப்பு : தங்க.நாகேந்திரன்





‘‘ஹலோ, மாலினி... எப்ப வர்றே?’’  ஆர்வமாய் கேட்டேன்.
‘‘உங்க அம்மா ஊருக்குப் போன பிறகு சொல்லுங்க... வர்றேன்!’’
‘‘இன்னிக்கே அனுப்ப ஏற்பாடு பண்றேன். நீ உடனே வரப் பாரு!’’  போனை துண்டித்தேன்.
அம்மாவுக்கு எதையும் சுறுசுறுப்பாகச் செய்ய வேண்டும். திருத்தம் இருக்க வேண்டும். கிராமத்தில் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்க மாட்டார். உழைப்பாளி. அவரது நேர்த்தியை மாலினியிடமும் எதிர்பார்த்ததுதான் தப்பாய் போனது.
மாலினியிடம் எப்போதும் ‘‘இப்படிச் செய்... அப்படிச் செய்...’’ என்று சொல்லிக்கொண்டிருந்ததால் அவள் கிளம்பி விட்டாள். வேறு வழியில்லை! அம்மாவை இன்றே ஊருக்கு அனுப்பிவிட
வேண்டும்.
லேசாகத் தலையை வலிப்பது போல் இருந்தது.
‘‘காமாட்சி... டீ கொண்டு வா!’’ என்றேன்.
டீயுடன் வந்தாள் காமாட்சி.
அம்மா பக்கத்தில் இல்லை. காமாட்சியை ஓரக்கண்ணால் குறும்பு காட்டி அழைத்தேன். வெட்கத்தோடு உள்ளே ஓடினாள்.
அம்மாவை மதியமே பஸ் ஏற்றிவிட்டேன். வீட்டில் காமாட்சி மட்டும்! ஆபீசுக்கு அரை நாள் லீவ் போட்டுவிட்டு வந்தேன். கதவைத் திறந்த காமாட்சியை ஹாலிலேயே இறுக்கினேன்.
பெட்ரூமுக்கு அலேக்காகத் தூக்கிப் போனேன்... களைத்து எழுந்து பாத்ரூம் போய்விட்டுத் திரும்பினேன்.
‘‘அந்த சனியன் போயிடுச்சி... நீ கிளம்பி வா!’’ என்று வேலைக்காரி
மாலினியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் என் மனைவி காமாட்சி.