சேர்ந்து வாழ்ந்தாலே அது திருமணம்தானா?





‘சட்டப்படி திருமண வயதை அடைந்த ஒரு ஆணும் பெண்ணும் பாலியல் வாழ்க்கையில் தங்களை இணைத்துக் கொண்டாலே அது திருமணம் என்ற பந்தத்துக்கு சமமானது!’  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு இது. ஒரு இஸ்லாமியப் பெண்ணின் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் அவர் வழங்கிய இந்த தீர்ப்பு, சட்ட வட்டாரங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் ஏகப்பட்ட சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. ‘திருமண முறையை சிறுமைப்படுத்தவோ, எந்த மதத்தினரையும் புண்படுத்தவோ, இந்தியப் பண்பாட்டுக்கு எதிராகவோ நான் இந்தத் தீர்ப்பை வழங்கவில்லை. பெண்ணின் சமூக அந்தஸ்தைக் காக்க வழங்கிய தீர்ப்பு இது’ என அந்த நீதிபதியே மீண்டும் விளக்கம் அளிக்க வேண்டியிருந்தது. அப்படியும் சர்ச்சை ஓயவில்லை.

‘‘இந்த வழக்கைப் பொறுத்தவரை அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடந்திருக்கக்கூடும் என்று தீர்ப்பு சொன்னது சரிதான். ஏனெனில் இருபது வருடங்களுக்கு முன்னரே உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில், ‘ஒரு ஆணும் பெண்ணும் நீண்டகாலம் உறவு வைத்திருந்தாலே அது திருமணத்துக்கு ஒப்பாகும்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது’’ என்றார் தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் சாந்தகுமாரி. (நீதிபதி விளக்கம் அளிப்பதற்கு முன்பாகவே சாந்தகுமாரியிடம் பேசியிருந்தோம்.)

‘‘ஆனால் திருமண வயதை அடைந்த ஒரு பெண்ணும் ஆணும் பாலுறவில் ஈடுபட்டாலே அது திருமணம் போலாகும் என்று சொல்லியிருப்பது சட்டத்துக்கும் சம்பிரதாயத்துக்கும் ஒத்து வராதது. ஒரு திருமணத்துக்கு சடங்குகள் தேவையில்லை என்றுகூட சொல்லலாம். ஆனால் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளாமல் ஒருமுறை உடலுறவு கொண்டாலே அதை திருமணமாக நினைப்பதும், வேறொரு திருமணம் புரிய அவர் கோர்ட் மூலம் விவாகரத்து பெறவேண்டும் என்று சொல்லியிருப்பதும் அபத்தமான ஒன்று. இன்றைய தாராளமயமான பொருளாதார சூழ்நிலையில், ஒரு ஆணும் பெண்ணும் டேட்டிங் வைத்துக்கொள்வதும் பாலுறவுகளில் ஈடுபடுவதுமான செயல்களை பரவலாகப் பார்க்கிறோம். இப்படிப்பட்ட உறவே திருமணம் என்று சொல்லிவிட்டால், மன முதிர்ச்சி இல்லாமலோ, இனக் கவர்ச்சியாலோ, பாலியல் வன்முறையின் பெயராலோ ஏற்படும் உறவுகளிலிருந்து அந்த நபர்கள் பிரிந்து போகிற உரிமை பறிபோய் விடும். இது மேலும் மேலும் உறவுச் சிக்கல்களை உண்டாக்குமே தவிர, அந்தப் பெண்ணுக்கும் ஆணுக்கும் எந்தவிதத்திலும் நன்மை விளைவிக்காது.

இந்த தீர்ப்பை கீழ் கோர்ட்டுகள் தவறான முன்னுதாரணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியங்களும் உள்ளன. ஆனால் உயர் நீதிமன்ற தீர்ப்புகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் முரணாக இருக்கும்பட்சத்தில் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும். இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டமான சிஆர்பிசியின் 125வது பிரிவின்படி சட்டத்துக்கு புறம்பாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஜீவனாம்ச உரிமை உண்டு என்று இருக்கிறது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அந்த இஸ்லாமிய பெண்ணுடன் வாழ்ந்த ஆண் கணவன் என்று ஊர்ஜிதமாவதால், அந்த குழந்தையோடு சேர்த்து பெண்ணுக்கும் ஜீவனாம்சம் வழங்குவதற்கான தீர்ப்பை சொல்லியிருப்பது சரியானதே’’ என்கிறார் சாந்தகுமாரி.

இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக்கி ஒரு ஆணும் பெண்ணும் தெரிந்தோ தெரியாமலோ உறவில் ஈடுபட்டு, பிறகு இருவரில் ஒருவர் பிரிந்து அடுத்த உறவுகளைத் தேடும்போது இந்தத் தீர்ப்பால் சட்டச் சிக்கல்கள் ஏற்படாதா? சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞரான சரவணக்குமாரிடம் கேட்டோம்.

‘‘முதலில் இது ஜீவனாம்சம் தொடர்பான வழக்கு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். எத்தனையோ திருமணங்கள் போலியாக நடக்கின்றன. வெறும் மஞ்சள் கயிற்றை கட்டுவதும், மோதிரங்களை மாற்றுவதும், குங்குமம் இட்டுக்கொள்வதுமாக பல பெண்கள் திருமணம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகிறார்கள். அப்படி ஏமாறும் பெண்களுக்கு சாதகமான தீர்ப்பாகவே இதைப் பார்க்கவேண்டும். சட்டப்படியான திருமணங்களிலுள்ள ஜீவனாம்சம் போன்ற கடமைகளிலிருந்து, இப்படி சேர்ந்து வாழ்ந்த ஆண்கள் தப்பிக்க முடியாது என்றும் இந்த தீர்ப்பு விளக்கம் அளிக்கிறது. இது படிக்காத, ஏழை, கிராமத்துப் பெண்களுக்கு நன்மை தரும் தீர்ப்பு.



ஜீவனாம்சத்துக்காக பெண்கள் இந்தத் தீர்ப்பை தவறாக உபயோகப்படுத்தலாம் என்ற வாதம் கற்பனையானது. சேர்ந்து வாழ்ந்த கணவன் மேல் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி நீதிமன்றங்களில் தகுந்த சாட்சியங்கள், விசாரணைகளுக்குப் பின்பே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. பொதுவாக ஒரு பெண் ஒரு ஆணுடன் பாலியல் ரீதியாக வாழ்ந்து, பிறகு பிரிந்து அடுத்த திருமணம் செய்கிற வரையில் அவள் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற உரிமையுடைவள் ஆகிறாள். ஆனால் ஒழுக்கம் என்பது இந்த ஜீவனாம்ச வழக்குகளில் முக்கிய இடம் வகிக்கும். முதல் ஆணோடு சேர்ந்து வாழ்ந்ததுபோல் வேறு ஆண்களோடும் சேர்ந்து வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் இருப்பின் ஜீவனாம்ச வழக்குகள் பெண்ணுக்கு எதிரானதாக மாறிவிடும்’’ என்றார் அவர்.

‘‘சேர்ந்து வாழ்ந்ததற்கான விளைவுகளுக்கு உரிமை கொண்டாடும் தீர்ப்பாகவே இதைப் பார்க்கவேண்டும்’’ என்கிறார் வழக்குரைஞர் பிரசாத். ‘‘வெறும் பாலுறவு மட்டுமே இந்த தீர்ப்புக்கு சாதகமாகிவிடாது. ஒன்று அந்த உறவால் குழந்தைகள் இருக்கவேண்டும். அல்லது அதற்கான ஆதாரங்கள் இருத்தல் வேண்டும். எதுவும் இல்லாமலிருப்பவரை கணவன்  மனைவியாகக் கருதுவதை இந்தத் தீர்ப்பு ஆதரிக்காது. நிர்க்கதியாக ஒரு பெண்ணை கணவனோ, அவன் குடும்பத்தினரோ தவிக்க விடும்போது, அவள் உரிமையைப் பெற இந்தத் தீர்ப்பு உதவும். கணவனின் சொத்துரிமையில் பெண்களுக்கு பங்கு என்பது சட்டங்களில் இதுவரை இல்லாமல் இருப்பினும், விரைவில் வரவிருக்கும் சட்டம் ஒன்று, கணவனுக்கு சமமான சொத்துரிமைகளை பெண்களுக்கு வழங்க இருக்கிறது. இது வந்தால் திருமணம் என்ற பெயரில் சேர்ந்து வாழ்ந்துவிட்டு பெண்களை ஆண்கள் ஏமாற்ற முடியாது. வரவிருக்கும் புதிய சட்டத்துக்கு அச்சாரமான இந்தத் தீர்ப்பு வரவேற்கப்படவேண்டியது’’ என்கிறார் பிரசாத்.
 டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்