கடைசி பக்கம் : நிதர்ஸனா





புதுமழை பெய்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் ஏராளமான மீன்கள் துள்ளி விளையாடுவதாக தெருவில் சொன்னார்கள். ‘‘பக்கத்து வீட்டுக்காரர் நேத்து தூண்டில் எடுத்துக்கிட்டுப் போய் நிறைய மீன் பிடிச்சாராம். அவங்க வீட்ல மீன் குழம்பு, மீன் வறுவல். வாசனையே ஊரைக் கூட்டிச்சு. இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. சும்மாதானே இருக்கீங்க... போய் மீன் பிடிங்களேன்’’ என்று மனைவி தூண்டிவிட்டதில், தூண்டிலோடு கிளம்பினான் அவன். அது அவனுக்கு புது அனுபவம்.

ஊரைத் தாண்டி ஆற்றங்கரைக்கு வந்தபோது ஏராளமான கூட்டம். தூண்டிலோடு கரையில் உட்கார்ந்திருந்த பலரும் இவனைப் பார்த்து புன்னகைத்தார்கள். ‘எல்லோரும் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு வந்திருப்பானுங்க போல’ என நினைத்தபடி, கிடைத்த ஒரு இடைவெளியில் உட்கார்ந்து தூண்டில் போட்டான் அவன்.

நீண்ட நேரமாகியும் தக்கை அசையவில்லை. அக்கம்பக்கத்தில் கவனித்தால் எல்லோருமே மீன் கிடைக்காத ஏமாற்றத்தில் இருப்பது புரிந்தது. ‘வேலை மெனக்கெட்டு ஒரு விடுமுறை நாளில், புது தூண்டிலை விலைக்கு வாங்கி வந்து இப்படி வெயிலில் உட்கார்ந்திருக்கிறோமே... இதற்கான பலன் துளியாவது இருக்குமா’ எனக் கவலை வந்தது.

பல மணி நேரமாகியும், தூண்டிலில் மாட்டிய புழுவை விட சற்றே பெரிய சைஸில் சில மீன்கள் மட்டுமே சிக்கின. வீட்டுக்குப் போனதும் மனைவி கடுப்பாகி, ‘‘இதையெல்லாம் போட்டு குழம்பு வைக்க முடியாது. நம்ம பூனைக்குப் போடுங்க’’ என்றாள். பூனையின் முன் போட்டால், அது ரீயாக்ஷனே இல்லாமல் உட்கார்ந்திருந்தது. வழக்கமாக ஒரு டப்பாவிலிருந்து மீன் உணவை பூனைக்குப் போடுவான். அந்த டப்பாவில் இந்த மீனைப் போட்டு, அதன்பின் எடுத்துவந்து பூனைக்குப் போட்டதும்தான் சாப்பிட்டது. அப்போதுதான் அவனுக்கு உண்மை புரிந்தது.
பழக்கமில்லாத வேலையில் பலன் இருக்காது!