கவிதைக்காரர்கள் வீதி





மறைவு
பழுத்த இலை
உதிர்ந்த சிறகு
வாடிய மலர்...
இயற்கை,
தோன்றும்போது
மகிழாது
மறையும்போது
வருந்தாது

ஜாக்கிரதை
கதவைத் திறக்க பயம்
காவல் நாய்க்கு
மாமிசம் தேவைப்படலாம்.

சூறைக்காற்று
நேற்று வரை
கம்பீரமாய் நின்ற
கொல்லை பொம்மை
இன்று சூறைக்காற்றில்
வானம் பார்த்தபடி

க்யூ
தினமும் ஒரு பொம்மையை
உடைத்து விளையாடுகிறது
குழந்தை
பொம்மைகளுடன் காத்திருந்த
கடவுள்
குழந்தையின் கைபட
வரிசையில் நின்றிருந்தார்

சாளரம்
முன்பனிக் காலம்
ஜன்னல் வழியே
ஒரு பழைய பாடல்

இதம்
காற்றின் சீற்றம்
தடதடக்கும் மழை
ஜன்னல் அருகே சாரல்

பிணைப்பு
கடைசி இலை
மரத்தின் பிணைப்பை
விடுவதாய் இல்லை
பனிக்காற்று
பற்கள் கிடுகிடுக்க.

குடை
காற்று ஓய்ந்துவிட்டது
தூறல் நின்றுவிட்டது
நிலவு தோன்றிவிட்டது
என்றாலும் குடையையே
கைகள் துழாவுகிறது.