உபசரிப்பு : கு,அருணாசலம்





காலை பத்து மணிக்கெல்லாம் பயங்கர வெயில். தெருவில் காய்கறி வண்டிக்காரன் சென்றான். தன் வீட்டு முன் வசந்தா அவனை நிறுத்தினாள்.
‘‘உனக்கு ஏம்பா இப்படி வேர்க்குது?’’ என்றாள்.

‘‘நான் என்ன ஏ.சியிலயாம்மா இருக்கேன். வேகாத வெயில்ல அலைஞ்சு திரியுறேன். என் தலையெழுத்து அப்படி. சரி... உங்களுக்கு என்னென்ன காய் வேணும்னு பார்த்து எடுங்க!’’
‘‘கொஞ்சம் பொறுப்பா... உனக்கு முதல்ல குடிக்க தண்ணி எடுத்துட்டு வர்றேன். அதைக் குடி. அப்புறம் நான் காய்கறி எடுத்துக்கறேன்’’ என்ற வசந்தா, உடனடியாக தண்ணீர் பாட்டிலோடு வந்தாள்.

அவன் குடிக்கும் வரை காத்திருந்து, வேண்டிய காய்கறிகளை எடுத்துத் தரச் சொல்லி பணமும் கொடுத்தனுப்பினாள்.
‘‘காய்கறி வாங்கும்போதும் உன்னோட சமூக சேவை, இளகிய மனசு அசரடிக்குது வசந்தா’’  கணவன் கணேசன் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, கைகாட்டி நிறுத்தினாள் வசந்தா.

‘‘இதெல்லாம் ஒரு சூட்சுமம்ங்க... தண்ணி கொடுத்து அவன்கிட்ட நல்ல பேர் வாங்கிட்டா, நமக்கு வாடினது, வதங்கினதையெல்லாம் போடாம நல்ல காய்கறிகளா போடுவான். நாம இறங்கிப் போய் வெயில்ல நின்னு காய்கறி வாங்க வேண்டிய அவசியமும் இல்ல. கூடவே அவனுக்கு உதவின புண்ணியமும் சேர்ந்துக்குதே!’’
உபசரிப்பின் பின்னணியை உணர்ந்து வாயடைத்துப் போனான் கணேசன்.