மரணமும் கடந்து போகும்





எம்.ஓ.பி வைஷ்ணவாவில் ஃபைனல் இயர் விஸ்காம் படிக்கும் சௌம்யாவின் புகைப்படங்களில் உயிர் ததும்புகிறது. ‘ஸ்டூடியோ போர்ட்ரெய்ட் போட்டோகிராபி’யில் கவனிக்கத்தக்க கலைஞரான சாய் ரகுநாத்தின் மகள். டாகுமெண்டேஷன் போட்டோகிராபியில் துடிப்போடு இயங்குகிறார். ஜான் ஐசக், சரத் ஹக்சர் போன்ற ஆளுமைகளிடம் தொழில்நுட்பம் பயின்றுள்ள சௌம்யா, காசி நகரைப் பற்றி உருவாக்கியுள்ள புகைப்படத் தொகுப்பு ஈர்க்கிறது. 

‘மணிகர்னிகா காட்’டில் கிளர்ந்தெழுந்து தெறிக்கும் ஜீவ நெருப்பு, பிணத்தீயின் வெம்மையில் ஆங்காரமாக அமர்ந்திருக்கும் அகோரி, இறந்த குழந்தையை கலங்காத முகத்தோடு இறுதியூருக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர், ஏகப்பட்ட ரகசியங்களை புதைத்தபடி அமைதியாக நகரும் கங்கையின் அமானுஷ்யம் என ஒவ்வொரு புகைப்படமும் விழிகளுக்கு நெருக்கமாகிறது.

‘‘பள்ளிக் காலங்களிலேயே காசியின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு. அந்த ஆதி நகரத்தை மனதில் கற்பனையாக வடிவமைத்து வைத்திருந்தேன். வளர வளர... அந்த நகரத்தைப் பற்றிய கனவும் வளர்ந்தது. அப்பாவின் கை பிடித்துக்கொண்டு ஒருநாள் கிளம்பி விட்டேன். காசிக்குள் நுழைந்ததுமே என் கற்பனை நகரம் சரிந்து விழுந்துவிட்டது. இனந்தெரியாத, இயல்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் நுழைந்ததைப் போல இருந்தது. மனிதர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற மரணம் அங்கே கொண்டாடப்படுகிறது. இரண்டு மூங்கில் கம்புகளுக்கு இடையே பிணத்தை வைத்துக் கொண்டு ‘ராம் ராம் சப்தஹே’ என்று ஆக்ரோஷமாக கோஷமிட்டுக் கொண்டு வந்த கூட்டம், அடுத்த வினாடியே ஒரு டீக்கடையோரம் அந்தப் பிணத்தை வைத்துவிட்டு ரிலாக்ஸாக டீ சாப்பிட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தேன். மரணம் அவர்களுக்கு எவ்வளவு சாதாரணமானது!



யார் சாமியார், யார் பிச்சைக்காரர் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு காவியுடை பரவிக் கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் கூட்டம்... எதிலும் அழுக்கு... ஆனால் இவற்றைத் தாண்டி ஒரு பேரழகு காசியை சூடியிருக்கிறது. தினமும் மாலையில் நடக்கும் ‘கங்கா ஆரத்தி’க்கு அப்படியொரு சக்தி. கேமராவை ஓரமாக வைத்துவிட்டு அந்த சக்தியில் கரைந்து போனோம்.

காசியைப் பற்றி 5 விஷயங்கள் சொல்வார்கள். நான் அதை நம்பியதில்லை. காசியில் பூக்கும் பூ மணக்காது; அங்கிருக்கும் மாடுகள் முட்டாது; பல்லிகள் கத்தாது; பிண வாடை அடிக்காது: கழுகு பறக்காது. இவை அனைத்தையுமே அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.

சென்னையில் நெருங்கிய உறவினர்கள் இறந்தால் கூட வீட்டு முகப்பிலேயே பெண்களைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள். சுடுகாட்டை எட்டிப் பார்க்க முடியாது. காசியின் 64 படித்துறைகளில் அரிச்சந்திரா காட், மணிகர்னிகா காட் இரண்டு இடத்திலும் பிணங்கள் எரிக்கப்படும். சுற்றிலும் பிணங்கள் எரிய, எம்பிக் குதிக்கிற வெற்றுடம்பின் இறுதி எழுச்சியை கேமராவுக்குள் சிறைபிடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் என்னை அனுமதிக்கவில்லை. கெஞ்சிக் கேட்டு உள்ளே இறங்கி படம் எடுத்தேன். வெம்மையில் தகிக்கும் உடல், தீயை விட்டு எழும்போது மூங்கில் தடியால் ஓங்கி அடித்து நெருப்போடு சமன்படுத்துவதைப் பார்க்கும்போது உள்ளம் நடுங்கியது.

எங்கேயும் ஒரு துளி அழுகை இல்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒரு பிணம் வந்தபடி இருக்கிறது. உயிர் மிக சாதாரணமாகக் கடந்து செல்கிறது. எவரின் முகத்திலும் கலக்கம் இல்லை. பிறந்த குழந்தை, கர்ப்பிணிகள், சாமியார்கள் இறந்தால் எரிக்க மாட்டார்கள். பட்டுத்துணி சுற்றி படகில் எடுத்துச்சென்று கங்கையின் நடுவில் போட்டு விடுகிறார்கள். காசியில் நடக்கும் ஒவ்வொரு செயலும் கடவுளோடு தொடர்புடைய செயலாகவே இருக்கிறது. ஒரு இறுதிச்சடங்கை தொடக்கம் முதல் இறுதிவரை முழுவதுமாகக் காட்சியாக்கினேன். 

காசி பலவிதமான மனிதர்களை அறிமுகப்படுத்தியது. நல்ல சாமியார்கள், போலி சாமியார்கள்... வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். நாங்கள் சந்தித்த ஒரு சாமியார் ஃபேஸ்புக்கில் ‘ஸ்டேட்டஸ்’ போட்டுக் கொண்டிருந்தார். வெளிநாட்டுப் பெண்களோடு கைகோர்த்து நிற்கிற படங்களை எல்லாம் ஃபேஸ்புக்கில் போட்டிருந்தார். இவர்களைப் போன்றவர்கள் காசியை கமர்ஷியல் ஆக்கிவிட்டதால், உண்மையான அகோரிகள் எல்லாம் தொலைதூரம் நகர்ந்து காட்டுப் பகுதிக்குச் சென்று விட்டார்கள்’’ என்று விழி விரிய அனுபவங்களை விவரிக்கிற சௌம்யா, சர்வதேச அளவிலான புகைப்படப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

‘‘கலை சார்ந்த வாழ்க்கை என்பது சிறு வயதுக் கனவு. ‘யாருடைய வழியையும் தொடராமல் சுயமாக செயல்படு’ என்று அறிவுரை சொன்னார் அப்பா. ஓரளவுக்கு தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டேன். டாகுமெண்டேஷன் போட்டோகிராபியின் முக்கியத்துவத்தை ஒர்க்ஷாப்புகள் போதித்தன. முதலில் சென்னையைப் பற்றி ஒரு புகைப்படத் தொகுப்பு உருவாக்கினேன். தேனி, காஞ்சிபுரம், கோவா போன்ற பகுதிகளையும் டாகுமெண்ட் செய்தேன். காசி எனக்கு பல புதிய அனுபவங்களைக் கொடுத்தது. நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது’’ என்கிறார் சௌம்யா.
 வெ.நீலகண்டன்