தந்திக்கு குட்பை!




போஸ்ட் மேன் குரல் கேட்டவுடன், ‘‘அய்யய்யோ தந்தியா...’’ என ஊர் கூடி ஒப்பாரி வைத்த காலம் உண்டு. காரணம், அந்தக் காலத்தில் ‘சாப்பிட்டியா? தூங்குனியா? எஸ்.எம்.எஸ்கள்’ இல்லை. உடனுக்குடன் போய்ச் சேர்ந்தாக வேண்டும் எனும் அளவுக்கு அவசரம் என்றால், பெரும்பாலும் அது மரணச் செய்தியாகத்தான் இருக்கும். நம் தாத்தா, அப்பத்தா என எத்தனையோ பேரின் மரணச் செய்தியை அறிவித்த தந்தி சேவைக்கே மரணச் செய்தி அறிவித்துவிட்டார்கள். ஆம், வரும் ஜூலை 15ம் தேதியுடன், 160 ஆண்டுகால தந்தி சேவைக்கு குட்பை சொல்கிறது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.

‘‘தந்தி எப்போதும் துக்கச் செய்தியை மட்டுமே கொண்டு வரும்ங்கிற பயம் எங்கள் காலத்தில் மக்களிடையே அதிகம் இருந்தது. சினிமாவில் கூட தந்தி வந்ததுன்னா கூடவே சோகமான வயலின் இசையும் வந்திரும். சீரியஸ்னு தந்தி வந்தாலே, ஆள் போயாச்சுன்னுதான் அர்த்தம்’’ என்கிறார் மூத்த எழுத்தாளரான அசோகமித்திரன்.

‘‘என் வாழ்க்கையில பெரும்பாலும் துக்க செய்திகளைத்தான் தந்தி வழியா அனுப்பியிருக்கேன். அதேமாதிரி துக்கச் செய்திதான் தந்தி வழியா அதிகம் வந்திருக்கு. வீட்டுக்கு தந்தி வந்திருச்சுன்னா, அதோட உறையைப் பிரிக்கவே பயப்படுவாங்க. அது மகிழ்ச்சியான செய்தி கொண்டு வர்றது குறைச்சல்ங்கிறதுதான் காரணம். ஒருமுறை என் நண்பருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்குன்னு தந்தி வந்தது. உடனே ஆபீஸ்ல உள்ளவங்களுக்கு ஸ்வீட், காபின்னு வாங்கிக் கொடுத்து அமர்க்களப்படுத்திட்டார். அடுத்த அரை மணி நேரத்துல இன்னொரு தந்தி... ‘குழந்தை இறந்திருச்சு’ன்னு தகவலோட வந்தது. ரொம்ப உடைஞ்சுட்டார். சந்தோஷம் துக்கமா மாறிடுச்சு. இதை வச்சு ‘தந்தி’ன்னு ஒரு கதைகூட எழுதினேன். ஆனா அது தொகுப்பாகல. தந்தியில மொய்ப் பணம், வாழ்த்தெல்லாம் அனுப்பியிருக்கேன். அது ஒரு காலம்’’ என நினைவுகளில் மூழ்கினார் அவர்.

‘‘ஆனா இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு விஷயத்துக்கு ஜனாதிபதிக்கு தந்தி அனுப்பலாம்னு போனா, ஆபீஸ் எங்கே இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியல. ஏரியாவுக்கு ஏரியா இருந்த ஆபீஸ்களை சமீபகாலமா ரொம்ப குறைச்சிருந்தாங்கன்னு நினைக்கிறேன்’’ என்றார் வருத்தமாக.

மதுரையைச் சேர்ந்த கவிஞர் சமயவேல், 80களில் தொடங்கி பத்தாண்டுகள் தந்தி அலுவலகத்தில் பணியாற்றியவர். ‘‘நான் முதன்முதலில் வேலைக்குச் சேர்ந்தது சென்னை மத்திய தந்தி அலுவலகத்தில்தான். சுமார் ஐந்நூறு டெலிபிரின்டர்கள் பிரின்டிங், ரிசீவிங் சத்தத்துடன் இருக்கும். உள்ளே போகும்போது ஏதோ ஒரு பிரமாண்ட மலைக்குள் நுழைந்தது மாதிரி உணர்வு ஏற்படும். இந்தியாவின் பெரும்பாலான நகரங்களுக்கு, தமிழகத்திலிருந்து தந்திகள் இங்கு வந்துதான் செல்லும். ஒரு தொழிற்சாலை போல் தந்தி அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கும். நைட் வொர்க் எல்லோருக்கும் எரிச்சலைத் தரும். ஆனால் எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். முந்நூறு பேர் வேலை பார்த்துக் கொண்டிருப்போம். அலுவலகமே கலகலவென இருக்கும்.

தந்தியில் ஜ்ஜ், ஷீs, எக்ஸ்பிரஸ், ஆர்டினரி, அப்புறம் வாழ்த்து என்று சங்கேத மொழி இருக்கும். ஜ்ஜ் என்றால் டெத் என்று அர்த்தம். இதற்குத்தான் முன்னுரிமை தருவார்கள். அடுத்து ஷீs... ஆக்சிடென்ட், சீரியஸ் மாதிரியான தகவல்களை சுமக்கும் தந்திகள். இவற்றுக்குக் கட்டணம் குறைவு. இதில் ‘000’ என்ற சங்கேத மொழி ஒண்ணு இருக்கு. இது அரசுத் துறைகள் அனுப்புகிற மிக அவசர தந்தி. சென்னை மத்திய சிறையில் இருந்த கைதி ஒருவருக்கு மறுநாள் காலை 6 மணிக்கு தூக்கு. இரவு 9 மணிக்கு ‘000’ என ஜனாதிபதியிடமிருந்து தந்தி. அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட்டு வந்திருந்தது. இந்தத் தந்தி வந்தால் அடுத்த 10 நிமிடங்களில் உரியவரின் கையில் சேர்ந்தாக வேண்டும் என்பது விதி. அதனால் நான் ஒரு மெசெஞ்சரை அழைத்து வேகமாகக் கொண்டு போகச் சொன்னேன். அப்போது டூவீலர் கிடையாது. சைக்கிள்தான். சிறை அதிகாரியைச் சந்தித்து தந்தியைக் கொடுத்தோம். தூக்கு தண்டனை நிறுத்தப்பட்டது. அதேபோல் இந்த ‘000’ அலர்ட் பண்ணவும் பயன்படுத்தப்படும். இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் முக்கியமான செய்திகளை இந்தக் கோடில் தந்தியாக அனுப்பினார்கள்.




வானிலை அறிக்கையை ஜ்ஷ் என்ற கோடிலும் புயல் என்றால்   ஜ்ஜ்ஷ் என்ற கோடிலும் அனுப்புவோம். வானிலை மையத்தில் எங்களுடைய டெலிகிராப் மையமும் இருக்கும். இதனால் தினந்தோறும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு வானிலை அறிக்கையை எல்லா மாவட்ட கலெக்டர்களுக்கும் தந்தி வழியே அனுப்பிக் கொண்டே இருப்போம். கணினி இல்லாத காலத்தில் நிருபர்கள் அவசர செய்திகளை தந்தி வழியேதான் அனுப்புவார்கள். அப்போது ஒரு வார்த்தைக்கு 2 பைசாதான் கட்டணம். காலத்திற்குத் தகுந்தாற்போல் எல்லாம் மாறிவிட்டது. மோர்ஸ் கருவி, மெக்கானிக்கல் டெலிபிரின்டர், எலக்ட்ரோ மெக்கானிக்கல் டெலிபிரின்டர், எலக்ட்ரானிக் டெலிபிரின்டர், கம்ப்யூட்டர் என பல மாற்றங்களை தந்தி சந்தித்து விட்டது. இப்போது நவீன சாதனங்கள் வந்தபிறகு அதற்கு விடைகொடுக்கவும் முடிவாகிவிட்டது. மாற்றங்களை மாற்ற முடியாது’’ என்கிறார் சமயவேல் நெகிழ்ச்சியுடன். 

‘‘எங்க கிராமத்துக்கு தந்தி மிகப் பெரிய வரப்பிரசாதம்’’ என்கிறார் எழுத்தாளர் பாரததேவி. ‘‘ஏன்னா எங்க கிராமத்துல பெரும்பாலானவங்க மிலிட்டரிலதான் வேலை பார்க்காங்க. சுற்றுவட்டார கிராமங்கள்லயும் அப்படித்தான். இதனால பெரியவங்களுக்கு அவசர செய்தின்னா அது தந்திலதான் வரும். இப்ப உள்ள பெரியவங்களுக்கு செல்போன் பயன்படுத்தத் தெரியாது. பசங்க மிலிட்டரில இருந்து, ‘அம்மா... பணம் அனுப்பியிருக்கேன். போய் வாங்கிக்கோ’ன்னு தந்தி அனுப்புவாங்க. ஏன்னா மருமகமார்ங்க பணத்தை மாமியார்ங்களுக்கு கொடுக்க மாட்டாங்க. அதனால புள்ளைங்க கரெக்டா பணம் அனுப்பிட்டு, அம்மாவுக்கோ அப்பாவுக்கோ தந்தியில விஷயத்த தெரியப்படுத்திருவாங்க. அப்பறம் தந்தியில சில ஆட்கள் விளையாடியும் இருக்காங்க. ஒரு தடவை மிலிட்டரில இருக்கிற பையன் ஒருத்தன், ‘நாம செத்தா எப்படி அழுவாங்க’ன்னு பார்க்க ஆசைப்பட்டு, தான் செத்துட்டதா பொய் தந்தி அனுப்பிட்டான். எங்க ஊர் கிராமம்தானே! உடனே அவன் பொண்டாட்டிக்கு வெள்ளை சேலை கட்டி மூலையில உட்கார வைச்சிட்டாங்க. எல்லா சொந்தக்காரங்களும் வந்துட்டாங்க. ஊரே ஒப்பாரியில இருக்கு. கடைசில பாத்தா இவன் உயிரோட வந்து நிக்கான். அவன் செத்து எங்க உயிர எடுத்துட்டான். இப்ப அவனுக்கு ஊர்ல ‘செத்துப் பிழச்சவன்’னு பேரு’’ என சிரிக்கும் பாரததேவி, ‘‘தந்தி போச்சுன்னா எங்கள மாதிரி இருக்கிற கிராம மக்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்க’’ என்கிறார் வேதனையுடன்.
 பேராச்சி கண்ணன்