மதிப்பு குறையும் ரூபாய்... இனி என்ன ஆகும்?





வெங்காயம் முதல் பெட்ரோல் வரை எல்லா விலையும் ஏறிக் கொண்டிருக்க, ரூபாயின் மதிப்பு தாறுமாறாக சரிந்துகொண்டிருக்கிறது. ‘‘யாரும் பீதி அடையத் தேவையில்லை. ரூபாய் அதன் மதிப்பை விரைவில் சென்றடையும்’’ என வழக்கம்போல நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னாலும், தேசமே அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு டாலரின் மதிப்பு, 58.77 ரூபாய். எந்தக் கணத்திலும் இது 60 ரூபாயைத் தாண்டிவிடும் என்கிறார்கள். இதுவரை எப்போதும் இவ்வளவு மோசமாக மதிப்பிழந்ததில்லை ரூபாய்!

இந்த நிதியாண்டு துவங்கும்போது ஒரு டாலரின் மதிப்பு 54.28 ரூபாய். பத்து வாரங்களாக பாதாளத்தை நோக்கி சரிகிறது. இதற்கு மூன்று காரணங்களைச் சொல்கிறார்கள் நிபுணர்கள்.
முதல் காரணம், அமெரிக்கா. அந்த தேசத்தின் பொருளாதாரம் மீண்டும் நிமிர்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம் எழவே, உலக முதலீட்டாளர்களின் கவனம் அந்தப் பக்கம் திரும்பிவிட்டது. இதனால் டாலருக்கு தேவை ஏற்பட்டது. தேவை அதிகரிக்கும்போது, ஒரு பொருளின் மதிப்பு உயரும் அல்லவா? அப்படி டாலரின் மதிப்பு உயர, ரூபாயின் மதிப்பு தாழ்ந்தது. உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தி அதிக எண்ணெயை வாங்க, எல்லா நாட்டு எண்ணெய் நிறுவனங்களும் முயல்கின்றன. கச்சா எண்ணெய் பிசினஸ் டாலரில்தானே நடக்கிறது. எல்லோரும் டாலரைத் தேட, அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு மதிப்பு கூடியது. இப்படி டாலர் இரட்டை பலம் பெற்று ரூபாயை வீழ்த்தியது.

இரண்டாவது காரணம், நமது பொருளாதாரம். பொதுவாக ஒரு நாட்டின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகமானால்... அங்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை இருப்பதாகச் சொல்வார்கள். கிட்டத்தட்ட வரவுக்கு மிஞ்சிய செலவைச் செய்யும் ஊதாரிக் குடும்பம் போலத்தான். இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெயும் தங்கமும் இறக்குமதி செய்கிறது. ஆனால், நமது ஏற்றுமதி கொஞ்சம்தான். கடந்த ஆண்டில் இந்தியாவின் இறக்குமதி மதிப்பு, 420 பில்லியன் டாலர். ஆனால் ஏற்றுமதி வெறும் 242 பில்லியன் டாலர். இந்த சமனற்ற நிலையை ரூபாய் எப்படித் தாங்கும்?

மூன்றாவது காரணம், அந்நிய முதலீட்டு நிறுவனங்கள். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை அந்நிய நிதி நிறுவனங்கள் 3.6 பில்லியன் டாலரை இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்தன. மே மாதம் ரூபாயின் மதிப்பு லேசாக சரிய ஆரம்பித்ததும் பீதியடைந்து, ஒரே மாதத்தில் 3.5 பில்லியன் டாலர் முதலீட்டை விலக்கிக் கொண்டன. ரூபாயை வேகமாக சரியச் செய்தது இதுதான்.



ரூபாய் மதிப்பிழப்பதன் சங்கிலித் தொடர் விளைவுகள் அபாயகரமானவை. ‘இது ஏதோ பொருளாதார மேதைகள் சம்பந்தப்பட்ட விவகாரம்’ என நாம் சும்மா இருந்துவிட முடியாது. ரூபாய் மதிப்பிழந்ததால் ஏற்கனவே பெட்ரோல் விலை இரண்டு ரூபாய் ஏறிவிட்டது. அதன்பிறகும் மதிப்பு குறைவதால், அடுத்த வாரமே பெட்ரோலும் டீசலும் விலையேறக் கூடும். இதன் உடனடி விளைவாக எல்லாப் பொருட்களின் விலையும் உயரும். அதனால் பணவீக்கம் அதிகரிக்கும். உடனே, யாருக்கும் புரியாத சில முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கும். அது திரும்பவும் ரூபாயின் மதிப்பைக் குறைக்கும். எனவே ரூபாய் மீண்டும் நிலைபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதே பல நிபுணர்களின் கருத்து.

சுருக்கமாகச் சொல்வதானால், நம் மாதாந்திர பட்ஜெட்டில் சற்றே பெரிய சைஸில் ஒரு துண்டு விழும்!
 அகஸ்டஸ்    

மேதைகளால் வீழ்ந்தது!

*  இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் ஒரு டாலரும் ஒரு ரூபாயும் கிட்டத்தட்ட சம மதிப்பு கொண்டதாக இருந்தது.

*  கடந்த 73ம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. உலகெங்கும் பொருளாதார தேக்கநிலை நேர்ந்தது. இந்தியாவில் பணவீக்கம் இரட்டை இலக்க எண்ணிக்கைக்கு வந்தது. அப்போதுகூட ஒரு டாலர் 7.8 ரூபாய்தான்.

*  பொருளாதாரப் புலிகள் நிதியமைச்சர்களாக இருந்த அந்தக் காலத்தில் ‘நாட்டில் பொருளாதார வளர்ச்சி இல்லை’ என நிபுணர்கள் குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக இருந்தது. 91ம் ஆண்டு பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங் நிதியமைச்சர் ஆகி, பொருளாதார சீர்திருத்தங்களைத் துவக்கிய பிறகுதான் ரூபாய் மதிப்பிழக்க ஆரம்பித்தது. 91ம் ஆண்டு ஜூலை 1 மற்றும் 3ம் தேதியில் இரண்டு கட்டங்களாக ரூபாயின் மதிப்பைக் குறைத்தனர். ஒரு டாலர் 23.10 ரூபாயாக ஆனது. அன்று ஆரம்பித்த இறங்குமுகம் இன்றளவும் தொடர்கிறது.

*  ரூபாய்க்கு மதிப்பு இருந்த காலத்தில் 100 ரூபாய் நோட்டுகளே ஆதிக்கம் செலுத்தின. கடந்த 90ம் ஆண்டுவரை இந்திய கரன்சி புழக்கத்தில் 50 சதவீதம் இருந்தது 100 ரூபாய் நோட்டுகள்தான். அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு ஆதிக்கம் செலுத்தத் துவங்கியது.

*  200708ம் ஆண்டில் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகமானது. ஆனாலும் இன்றளவும் 500 ரூபாய் நோட்டுகள்தான் அதிகம் புழங்குகின்றன. 100 ரூபாய் நோட்டுகளின் ஆதிக்கம் குறைந்தது. ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயைத் தாண்டி விற்கும்போது 100 ரூபாய் நோட்டு எப்படி அதிகம் புழங்கும்?