குட்டிச்சுவர் சிந்தனைகள் : நையாண்டி





வீட்டுல நடக்கிற சந்தோஷமான விசேஷங்களின்போது பின்னால நின்னுட்டு, சோகமான நிகழ்வுகளின்போது முன்னால நிற்பவன். அதனாலதான்
நண்பேன்டா!

பணக்கஷ்டம்னு அவசரத்துக்கு போனா, பணக்கஷ்டம் தீர்க்க முடியாட்டியும் நம்ம மனக்கஷ்டம் தீர்த்து அனுப்புவான் பாருங்க... அதனாலதான்
நண்பேன்டா!

சைட்டடிக்க கூட வராட்டியும், சைட்டோட அண்ணன் நம்மள அடிக்கிறப்ப எங்கிருந்தோ வந்து நமக்காக முதல் அடிய வாங்குவான் பாருங்க... அதனாலதான்
நண்பேன்டா!

‘மச்சான், உனக்கேத்த ஃபிகர்டா’ன்னும் சொல்வான், லவ்வு புட்டுக்கிட்டா ‘விடு மச்சான், அவ உனக்கு மேட்சே இல்ல’ன்னும் சொல்வான் பாருங்க... அதனாலதான்  # நண்பேன்டா!

நம்ம வீட்டுல அவன கேவலமா திட்டுறதையும் கண்டுக்க மாட்டான்; அவங்க வீட்டுல நம்மளை கேவலமா திட்டுறதையும் கண்டுக்க மாட்டான். அதனாலதான்
 நண்பேன்டா!

சரக்கடிக்க சொல்லாம போனாலும், மூணாவது ரவுண்டுல போனைப் போட்டா, அவனா தேடி வருவான். கொஞ்சம் ஃபீலிங் விட்டா பில்ல கூட அவனே கட்டுவான். அதனாலதான் நண்பேன்டா!

பத்துக்கு பத்து ரூம்ல பாய் கூட இல்லாட்டியும், பத்தோட பதினொண்ணா படுத்துக்கிறதுக்கும் கூச்சப்படாதவன். அதனாலதான் # நண்பேன்டா!

முன்னால எல்லாம் படம் பார்க்கிறப்போ, பாட்டு போட்டா தம்மடிக்கப் போவாங்க. சில சமயம் படம் ரொம்ப மொக்கையா இருக்கும், பாடல்கள் நல்லா இருக்கும், அப்போ படம் போட்டா தம்மடிக்க போயிட்டு, பாட்டு போட்டா உள்ளார வந்திடுவாங்க.
ஆனா, இப்போ இந்த ‘நுரையீரல் பஞ்சு போல மென்மையானது’  விளம்பரத்தப் போட்டாவே பல பேரு தம்மடிக்க வெளிய போயிடுறான். அதுவும் அத சொல்ற குரல், அவனவன் மாமியார் குரல விட ரொம்ப பயமுறுத்துற மாதிரி இருக்கு. அந்த புகையிலை விளம்பரத்துல பஞ்சை புழிஞ்சு காட்டினதுக்கு பதிலா சுட்டெடுத்த பஜ்ஜிய புழிஞ்சு காட்டி இருந்தா கூட, நம்மாளுங்களுக்கு மேட்டர் புரிஞ்சு இருக்கும்.
அய்யா தியேட்டர் ஆப்ரேட்டர் அவர்களே, ‘அய்ய்யா’ன்னு ஒரு வார்த்தைய ஒன்னரை கிலோமீட்டருக்கு இழுத்துப் பேசுற சிவகுமார் வர்ற டெங்கு விளம்பரத்தை விட, முகேஷ் ஹாரனேவின் விளம்பரம் பயங்கர மொக்கையா இருக்கய்யா! இந்த விளம்பரத்த போடுறதுக்கு யானைகள் சிறப்பு முகாம் விளம்பரத்தக் கூட நாலு தடவ போட்டுக்கங்கய்யா. ‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ங்கற மாதிரி, தம்மடிக்கிறவனா பார்த்து திருந்தாட்டி அதையும் ஒழிக்க முடியாதுங்கய்யா!

தமிழ்நாட்டின் தற்போதைய சுதந்திரப் போராட்டத் தியாகியும், சென்னை சே குவேராவும், வாழும் வள்ளலும், வருங்கால அமெரிக்க ஜனாதிபதியுமான அண்ணன் பூமான் போன வாரம் கொட்டிய வார்த்தைகள்... தஞ்சாவூர் பெரிய கோயில்ல கல்வெட்டா செதுக்கி, மாசச் சம்பளத்துக்கு வாட்ச் மேன் போட்டு பாதுகாக்க வேண்டியவை.



அண்ணன் சொன்னதில் முதல் முக்கிய விஷயம், அவரு முதல்வர் ஆகத்தான் கட்சி தொடங்கினாராம். விடுங்கண்ணே, நாட்டுல பல பேரு காதலிக்கிற அதே பொண்ணத்தான் கல்யாணம் பண்ணணும்னு நினைக்கிறான்... பல பேரு கல்யாணம் பண்ணினா வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு நினைச்சுத்தான் கல்யாணம் பண்றான்... இந்த சில்வண்டுங்க அதுங்க படிச்ச கேள்விதான் பரீட்சைல வரும்னு நினைச்சுக்கிட்டுத்தான் போகுதுங்க... இப்படி நாட்டுல எல்லாருக்கும் நினைக்கிறதெல்லாம் நடக்கவா செய்யுது? அதுக்காக வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தா தொழில் பண்ண முடியுமா பாஸ்?

அடுத்து அண்ணன் சொன்னதுதான், ‘லாரி டமாலு, டிரைவர் பணாலு’ ரேஞ்சு. அடுத்த பத்து வருடத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போறாராம் அவரு. அண்ணனுக்கு இன்னைக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு கிடையாது. நாக்கும் வாக்கும் சுத்தம். இன்னமும் பத்து வருஷம் கழிச்சு கேளுங்க... அப்பவும் இதையேதான் சொல்வாரு. அண்ணே, இப்படி அறிக்கை விடுறது, பேட்டி கொடுக்கிறதெல்லாம் ஓகே... அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்னே, ஆனா அரசியல் சாதாரணம் இல்லண்ணே!

அகத்தின் அழகு முகத்தில் தெரியுதோ இல்லையோ... உண்மையான அன்பு தோசையில தெரிஞ்சிடும்.

‘‘தோசை ஊத்துறேன் சாப்பிட்டுட்டு போடா’’ன்னு சொல்றது அம்மா.

‘‘சாப்பிட்டுட்டு போறீங்களா... தோசைதான் ஊத்தணும்’’னு சொல்றது வீட்டுக்காரம்மா.

நாலு தோசை ஊத்தச் சொன்னா அஞ்சு தோசை ஊத்துறது அம்மா.

நாலு தோசை ஊத்தச் சொன்னா மூணு தோசையோட முற்றுப்புள்ளி வைக்கிறது வீட்டுக்காரம்மா.

3 தோசை போதும்னா, 3 கரண்டி மாவுல 3 சென்டிமீட்டர் தடிமனுக்கு 1 தோசை ஊத்தறது அம்மா. 1 கரண்டி மாவுல 3 மில்லி மீட்டர் தடிமன்ல 3 தோசை ஊத்தறது வீட்டுக்காரம்மா. ‘‘இன்னொரு தோசை வேணுமா?’’ன்னு கேட்டதுக்கு அப்புறம் கேஸ் ஸ்டவை அணைக்கிறது அம்மா. கேஸ் ஸ்டவை அணைச்சதுக்கு அப்புறம், ‘‘இன்னொரு தோசை வேணுமா?’’ங்கறது வீட்டுக்காரம்மா. அம்மாவுக்கு நம்ம மனநலம் மேல அக்கறை. வீட்டுக்காரம்மாவுக்கு நம்ம உடல்நலம் மேல அக்கறை.           

டாடி, எனக்கொரு டவுட்டு?!


தான் லவ் பண்ற அதே பொண்ணை லவ்வுகிற சக க்ளாஸ்மேட், எப்பவுமே அட்வைஸ் மழை பொழியும் அப்பா, அதுக்கேத்த மாதிரி அப்பப்போ போட்டு கொடுக்கிற அண்ணன் / தம்பி / அக்கா / தங்கச்சி, நல்லா படிக்கிற பக்கத்து வீட்டு பையன்கள், டாவடிக்கிற பொண்ணோட ரத்த பந்தம் மற்றும் சொந்தம், பேப்பர் திருத்துற வாத்தியார், எப்போ வந்தாலும் மார்க் எவ்வளவுன்னு விசாரிக்கிற அத்தை/ மாமா/ சித்தப்பாக்கள், கொஸ்டீன் பேப்பர், டோட்டல் மார்க், புதுசா ரிலீசாகும் படங்கள், கிரிக்கெட் மேட்சுகள், பத்தாத பாக்கெட் மணிகள்... இப்படி ஆயிரமாயிரம் அசையும், அசையாத எதிரிகள் இருந்தால் ஒரு மாணவன் எப்படித்தான் படிப்பான்? சொல்லுங்கள் டாடி, சொல்லுங்கள்... சொல்லுங்கள் டாடி, சொல்லுங்கள்!