சாயி ஷீரடி பாபாவின் புனித சரிதம்





உங்கள் கடமையைச் செய்யுங்கள்; சிறிதும் அஞ்சாதீர்கள். என் மொழிகளின்மீது நம்பிக்கை வையுங்கள். நான் உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்வேன்.
 பாபா மொழி

மோஹித்தீன் ஒரு வெற்றிலை வியாபாரி. ஆனால் அந்த வேலையில் அவனுக்கு விருப்பமில்லை. நன்றாகச் சாப்பிட்டு, சும்மா காலம் கழிக்க விரும்பினான். காலையில் எழுந்ததும் இரண்டு மணி நேரம் செம்மண்ணில் புரண்டு, வியர்வை வழிய உடற்பயிற்சிகள் செய்வான். களைத்தவுடன், நிறைய பாலைக் குடிப்பான். பிறகு நாள் முழுவதும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவான். இதனால் அவன் உடல் வஜ்ஜிரம் போல் இறுகிப் பளபளப்பானது. நடுநடுவே சக்தி ஸ்தோத்திரங்களையும் முணுமுணுப்பான். அவனுடைய ஆஜானுபாகுவான உடலைப் பார்த்து எல்லோரும் பிரமிப்பார்கள். அதோடு பயப்படுவார்கள். அவன் ஒரு பயில்வான். கிட்டே போனால், உருட்டிப் பந்தாடி விடுவான் என்று பயம்.

இதனால் மோஹித்தீனுக்கு மிகுந்த கர்வம். மமதை பொங்கும் அவனைக் கண்டாலே மற்றவர்கள் தூர விலகிவிடுவார்கள். இல்லையெனில், அனாவசியமாக சண்டைக்கு இழுத்து, அடித்து நொறுக்குவான். இவனால் மக்கள் துன்பப்பட்டார்கள். இவனுடைய தொல்லை நாளுக்கு நாள் வளர்ந்தது.

சாயி மசூதியில் அமர்ந்திருந்தார். மகல்சாபதி, தாத்யா கோதே பாடீல் எல்லோரும் அவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பத்துப் பதினைந்து பேர் கவலையுடன் அங்கு வந்தார்கள். சாயி அவர்கள் முகத்தைப் பார்த்தார். ‘‘ஏதோ விபரீதம் நடந்திருப்பதுபோல் தெரிகிறது. என்னப்பா, முகமெல்லாம் கறுத்திருக்கு?’’  வழக்கம்போல புன்முறுவலுடன் கேட்டார் சாயி.
‘‘அந்த பயில்வான் மோஹித்தீன்...’’  ஒருவன் வாயைத் திறந்தான்.
‘‘அவனுக்கு என்ன? யாரை அடித்தான்? சமீபகாலமாக அவனுடைய திமிர் ஜாஸ்தியாகிக் கொண்டிருக்கிறது.’’
‘‘ஆமாம்... அவன் எங்கள் இருவரையும் அடித்தான்.’’
‘‘எதற்காக?’’
‘‘நாங்கள் குறுக்கே போனோம் என்பதற்காக. இதோ பாருங்கள் காயம்.’’

இருவரும் வந்து காண்பித்தார்கள். ஒருவனுக்கு கண் வீங்கியிருந்தது. இன்னொருவனுக்கு கையிலும் முதுகிலும் காயம் தெரிந்தது. கம்பால் அவர்களை மோஹித்தீன் விளாசியிருந்தான். சொல்லும்போதே இருவருடைய உடலும் நடுங்கின.

சிறிது நேரம் யோசனை செய்த சாயி, ‘‘அவன் ஒருத்தன்தானே இருந்தான்?’’ என வினவினார்.
‘‘ஆமாம்.’’
‘‘நீங்கள்?’’
‘‘இரண்டு பேர். கூட மூன்று பேர் இருந்தார்கள்...’’
‘‘ஐந்து பேர் இருந்தும் பயந்தீர்கள்! நீங்கள் ஒன்று சேர்ந்து அவனை ஏன் அடிக்கவில்லை?’’
‘‘அவன் பயில்வானாச்சே...’’
‘‘அதனால் என்ன? ஒண்டி ஆள்தானே! அவனுக்கு எவ்வளவு பலமிருந்தாலும் நீங்கள் ஐந்து பேர் சேர்ந்தால், ஒன்றும் செய்ய முடியாது. இப்படி எவ்வளவு நாளுக்கு பயந்து, அடிவாங்கிச் சாவீர்கள்?’’
அவர்கள் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்தார்கள்.



‘‘எங்கிருக்கிறான் அந்த மோஹித்தீன்?’’
‘‘நான் இங்குதான் இருக்கிறேன்...’’  உறுமும் கர்ஜனைக் குரலைக் கேட்டு எல்லோரும் திரும்பிப் பார்த்தால், அங்கு ராட்சஸன் போல மோஹித்தீன் வந்து மமதையுடன் நின்றான்.
‘‘டேய் பக்கீர்... உன்னிடம் முறையிட்டதும் நான் பயப்படுவேன் என்று நினைத்தாயா? ரொட்டித் துண்டுகளை நாய் போல சாப்பிட்டு வாழ்பவன் நீ. உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?’’ என்று கர்ஜித்தான்.

‘‘மோஹித்தீன்’’  உச்சஸ்தாயியில் அவனைக் கூப்பிட்டார் சாயி. ‘‘ரொம்பவும் மமதை கொண்டு துள்ளாதே. உன் உடம்பில் இருக்கும் பலத்தைக் கொடுத்தது அல்லா. அதை வீணாக உபயோகித்து அல்லாவை அவமானப்படுத்தாதே... மீறினால் தண்டிக்கப்படுவாய்!’’

‘‘நீ யார் எனக்குச் சொல்ல? யாருடைய உபதேசமும் வேண்டாம். உனக்கு தைரியமிருந்தால் என் எதிரில் வா. எல்லோரும் உன்னை யோகி, கடவுள் என்கின்றனர். நான் இப்பொழுது பார்த்துவிடுகிறேன், உன்னில் கடவுள் இருக்கிறாரா அல்லது சைத்தான் இருக்கிறாரா என்று!’’  அவன் கர்ஜித்தபடி அங்கும் இங்கும் நிலைகொள்ளாமல் அலைந்து, சாயிக்கு சவால் விட்டான்.

சாயி சிரித்தார். பின்பு சொன்னார், ‘‘நான் சொல்வதைக் கேள். உன் உடம்பில் இருக்கும் பலத்தை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்து. காட்டிற்குப் போ. உழை. நல்ல பூச்செடிகளை நட்டு, தண்ணீர் பாய்ச்சி அவ்விடத்தைப் பசுமையாக்கு. வயலுக்குப் போய், வியர்வை சொட்டச் சொட்ட உழுது, பயிர் விளைவி. நிறைய விளைச்சல் வரும். அதை சந்தோஷமாக நாலு பேருக்குக் கொடுத்து, நீயும் சாப்பிடு. பலவீனமானவர்களை அடிப்பதால் உனக்கு என்ன லாபம்? நீ இப்படிப் பிறரைத் துன்புறுத்துவதை அல்லா ஏற்கமாட்டார். மோஹித்தீன், நீ குரான் படித்திருக்கிறாய் அல்லவா? கடவுள் என்ன செய்கிறார் என்று உனக்குத் தெரியாதா? கடவுள்தான் விதையிலிருக்கும் முளையைப் பிரித்து மரமாக வளரச் செய்கிறார். அவர்தான் அறிவாளியையும், அவனுடைய அறியாமையிலிருந்து வெளிக் கொணர்கிறார். முட்டாளையும் அறிவுள்ளவன் ஆக்குகிறார். இதுதான் கடவுளின் செயல். இது புரியாமல் ஏன் அனாவசியமாக அலைகிறாய்? கடவுள்தான் இரவில் இருட்டையும் பகலில் வெளிச்சத்தையும் கொடுக்கிறார். இரவு நேரத்தை ஓய்வுக்காகவும், பகலை உழைப்பதற்கும் நிர்மாணித்திருக்கிறார். இதுதான் கடவுளின் படைப்பாகும். மோஹித்தீன், இப்பொழுது சாந்தமாகு. இல்லையென்றால் உனக்கும் பிசாசுகளின் நிலைதான் வரும்.’’

குரான் தத்துவத்தை சாயி எடுத்துச் சொன்னவுடன், மகல்சாபதி முதலானோர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மோஹித்தீனும் முதலில் ஆச்சரியப்பட்டான். ஆனால் அவனுடைய பிறவிக் குணமான அசுரத்தன்மை பொங்கி வந்தது. அவன் உரத்த குரலில் கத்தினான், ‘‘உனக்கு தைரியமிருந்தால் சண்டைக்கு வா. இல்லையென்றால் போ! கடவுளின் பெயரை இழுக்காதே! நீ தயாரா?’’ என்றபடி தன்னுடைய தடியைத் தரையில் ஓங்கித் தட்ட ஆரம்பித்தான். அதன் சத்தம் எங்கும் ரீங்காரமிட்டது.

சாயி எழுந்து அவனெதிரில் தயாராகி நின்றார். அவருடைய தோரணையும் உருவமும், பார்ப்பதற்கு ஒரு பெரிய பயில்வானைப் போல இருந்தது. இதற்குள் ஜனங்கள் கூடிவிட்டார்கள். அவர்களுக்கு இக்காட்சி மிகவும் பயம் உண்டாக்கியது.

‘‘மோஹித்தீன்... உனக்கு உபதேசம் செய்வதைவிட, இம்மக்களுக்கு தைரியத்துடன் இருக்கச் சொல்லிக் கொடுப்பதுதான் மிகவும் அவசியமாகிறது. இவர்களுக்கு ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வேலையை நானே செய்கிறேன், வா!’’ என்ற சாயி, உடனே தன்னுடைய தடியால் தரையில் ஓங்கி அடித்தார். அதன் சத்தமும் மக்களை அதிர வைத்தது.

மோஹித்தீன் ஒரு கணம் திகைத்தான். மறுகணம் அவனுடைய திமிர் விழித்தெழுந்தது. இருவரும் எதிரெதிரே வந்து நின்றார்கள். மக்கள் அவ்விருவரையும் வளையம் போல் சுற்றி நின்றார்கள்.

இருவரும் நல்ல உயரம், பலசாலிகள் வேறு! சாயியை பந்தாடி விடலாம் என்று நினைத்து சண்டையில் இறங்கினான் மோஹித்தீன். பிறகு சாயியின் உடல் வலிமையை உணர்ந்துகொண்டான். இருவரும் ஆக்ரோஷமாக ஒருவருக்கொருவர் விடாமல், தங்கள் புஜபலத்தைக் காட்டிச் சண்டை இட்டனர். மோஹித்தீன் தன் பலங்கொண்ட மட்டும் சாயியை அடித்து, தரையில் விழ வைத்து, அவர் மேல் ஏறி உட்கார்ந்து, ‘‘உன்னை என்ன செய்கிறேன் பார்’’ என்று கருவினான். சாயி என்ன மாயம் செய்தாரோ தெரியாது... மோஹித்தீன் தூக்கி எறியப்பட்டான்.



இருவரும் ஆக்ரோஷமாக சண்டை போட்டனர். ஆனால் முடிவதாகக் காணோம். சிறிது நேரம் கழித்து, சாயியைக் கீழே தள்ளி அவர் மேல் உட்கார்ந்து, ‘‘சாயி! உன்னை இனி உயிருடன் விடப் போவதில்லை. நீ யோகிதானா என்பதைப் பார்த்து விடுகிறேன்!’’ என்றவாறே தன் பலத்தையெல்லாம் திரட்டி அவருடைய கழுத்தையும் தலையையும் மண்ணில் புரட்ட ஆரம்பித்தான்.

‘‘உன்னை உயிருடன் விடமாட்டேன்’’ என்ற மோஹித்தீனின் வார்த்தை அங்கு கூடியிருந்த எல்லோரையும் விழித்தெழ வைத்தது. ‘ஒன்று சேர்ந்து போராடணும்’ என்கிற சாயியின் வாக்கியம் நினைவிற்கு வந்ததும் தாத்யா கத்தினான். ‘‘டேய், சாயி சண்டையிடுவது நமக்காகத்தான். நம்முடைய கடவுளைக் கொலை செய்கிறேன் என்கிறான் இந்த மோஹித்தீன். இதை நாம் விடக்கூடாது. கிளம்புங்கள், வாருங்கள் முன்னே. இந்தக் காட்டுப் பன்றியின் திமிரை அடக்கலாம்.’’

அங்கு ஓர் அதிசயம் நடந்தது. மோஹித்தீனை எல்லோரும் பிடித்துத் தள்ளினார்கள். சாயியை அவனிடமிருந்து விடுவித்தார்கள். அவருடைய உதட்டில் புன்னகை. எல்லோருக்கும் சமாதானமாயிற்று. அவர் எதை நினைத்தாரோ அது நடந்தேறியது.

‘‘எல்லோரும் நகருங்கள். இல்லாவிட்டால் சாகடித்து விடுவேன்!’’  கோபமடைந்த மோஹித்தீன் கத்தினான்.
‘‘எவ்வளவு பேரை சாகடிப்பாய், பிசாசே!’’ என்றவாறே, ஓங்கி ஓர் அறை விட்டார் தாத்யா. அறையும் சத்தம் கேட்டதும் எல்லோரும் சூழ்ந்துகொண்டனர். மோஹித்தீனை இஷ்டப்படி அடித்து நொறுக்கினார்கள். ஐந்து நிமிடம் அங்கு அமளிதுமளிப்பட்டது.

‘‘ஐயோ, என்னைச் சாகடிக்கிறார்களே... காப்பாற்றுங்கள் சாயீ!’’ என்று மோஹித்தீன் அலறினான். அவனுக்கு அடித்துத்தான் பழக்கம்... அடிவாங்கிப் பழக்கமில்லை. சிறிது நேரத்தில் அவன் மயங்கி விழுந்தான்.

‘‘தாத்யா, நிறுத்துங்கள் அடிப்பதை. அவன் மயக்கமாகி விட்டான். பின்னால் நகருங்கள்’’ என்றார் சாயி. அனைவரும் நகர்ந்தனர். இதுதான் சாக்கு என்று மோஹித்தீன் சடாரென்று எழுந்து, வேகமாக ஓடினான்.

‘‘நான் அப்பொழுதே நினைத்தேன், மயக்கமடைந்தவன் போல் நடித்து ஏமாற்றுவான் என்று. சந்தர்ப்பம் கிடைத்ததும் ஓடிவிட்டான்!’’ என்றார் மகல்சாபதி.

‘‘ஓடட்டும். நாம் ஒன்றும் அவனைத் தீர்க்கப் போவதில்லை. ஜனங்களின் பயம் நீங்க, மோஹித்தீன் ஒரு காரணமாக இருந்தான். ஒன்று சேர்ந்தால் போராடி ஜெயிக்கலாம். மக்களே, பயத்தை விட்டொழியுங்கள். கவலையானது மனிதனை சிதைக்குள் அழைத்துச் செல்கிறது. எனவே மனதை திடமாக்குங்கள்... சண்டை போடக் கற்றுக் கொள்ளுங்கள்! நினைவில் கொள்ளுங்கள்... மரணம் ஒருநாள் சம்பவித்தே தீரும். அதனை எந்த வழியினாலும் தவிர்க்க முடியாது. மரணம், சமயம் வந்தால்தான் நிகழும். வாழ்வதும் சாவதும் நம் கையில் இல்லை. இது ஈஸ்வரனின் செயல். எனவே பயப்படாதீர்கள். ஒற்றுமையுடன், துணிச்சலுடன் இருங்கள். அநியாயம் நிகழ்ந்தால் தட்டிக் கேளுங்கள். புத்தியைத் தீட்டுங்கள். அதைப் பொருத்தமான இடத்தில் தகுந்த காரணத்திற்காக உபயோகியுங்கள்’’ என்றார் சாயி.

ஒரு கணம் மௌனமாகி, பிறகு எல்லோரையும் பார்த்துச் சொன்னார்...
‘‘நாம் எதைச் செய்யணுமோ, அதைச் செய்வதில்லை. எதைச் செய்ய வேண்டாமோ அதை யார் தடுத்தாலும் செய்யாமல் விடுவதில்லை. எப்படி வாழணும் என்பதை ஆழமாக யோசியுங்கள். நீங்கள் வாழ்வதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. அந்த மூர்க்கனைப் போல நீங்களும் வாழாதீர்கள். வேதம் என்ன சொல்கிறது? அபி அபி! ‘அபி’ என்றால் பயப்படாதே. துன்பம் நேர்கையில் அதைத் துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். அதன் பலனை அடைய, அல்லாவை நம்புங்கள்.

நீங்கள் எல்லோரும் நல்லவர்கள். ஆனால், பலமில்லாதவர்கள். பலமில்லாதவன் நல்லவனாக இருந்து என்ன பயன்? ஒற்றுமையாக இருங்கள். காட்டில் கூட்டமாக நாய்கள் வந்ததும், சிங்கம், புலி போன்றவை கூட பயந்து ஓடுகின்றன. இந்த ஒற்றுமைக் குணம்தான் மனிதனுக்கும் வரணும்!’’

எல்லாவற்றையும் மக்கள் கவனமாகக் கேட்டார்கள். தெளிவு பெற்றார்கள். மோஹித்தீனின் அடாவடித்தனத்திலிருந்து சாயி அவர்களை விடுவித்தார். அனைவரும் வணங்கிக் கலைந்தனர்.
(தொடரும்)
படங்கள்:பேச்சிகுமார்


தமிழகத்தில் சாயி : பாபா பாதம் தொட்ட பாம்பு!
கோவை, மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகாமையிலுள்ள சாயி கோயிலின் பின்னணி இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. நரசிம்ம சுவாமிஜி, ஏ.வி.கே சாரி, வரதராஜ ஐயா என்ற மூவர் இணைந்து கோவையில் 1939ம் ஆண்டில் சாயி இயக்கத்தை உருவாக்கி, கோவையில் சாயியின் உன்னதத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். வரதராஜ ஐயா தன்னுடைய நிலத்தைக் கோயில் கட்டுவதற்காக வழங்கினார். ஆரம்பத்தில் சிறிய ஷெட் போட்டு, பாபாவின் படத்தை மட்டுமே வைத்து வணங்கி வந்தனர். பக்தர்கள் ஒரு நாள் பஜனையோடு வணங்கியபோது, பாபாவின் படம் அருகே வந்த ஒரு நாகப் பாம்பு, பஜனைப் பாடலில் மெய்மறந்து ஆடியது. கிட்டத்தட்ட 36 மணி நேரம் அவர் பாதங்களில் ஏறியபடி படமெடுத்து நின்றதாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து அதிசயித்த இந்த சம்பவம் மட்டுமே, இந்தக் கோயிலை இன்று ஒரு ஆச்சரியக் கோயிலாக மாற்றியிருக்கிறது.

இப்போது அழகிய மார்பிள் பாபா, கான்க்ரீட் கோயில், பிராகாரம் என்று விரிந்திருக்கும் கோயிலில் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம், இலவச ஹோமியோபதி சிகிச்சை மையம் என்று எல்லாம் இருக்கிறது. ஷீரடியில் பாபா பயன்படுத்திய சிறு கொம்பு ஒன்றும், இங்கே பக்தர்களை ஆசீர்வதித்து வளம் சேர்க்கிறது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
 ஆலயத் தொடர்புக்கு: 04222440688, 97906 74601