தில்லுமுல்லு : சினிமா விமர்சனம்





சின்னச் சின்ன 420 வேலைகள் பண்ணிக் கொண்டிருக்கும் சிவாவுக்கு நல்ல சம்பளத்தில் நிலையான வேலை வேண்டும். மினரல் வாட்டர் கம்பெனி ஓனரான பிரகாஷ்ராஜ் தீவிர முருக பக்தர். சிவா அவர் மனசில் இடம் பிடித்து, பின் மடம் பிடித்து மாப்பிள்ளையாவதும்... அதற்காக செய்யும் தில்லுமுல்லு வேலைகளுமே கதை.

முப்பது வருடங்களுக்கு முன் ரஜினி போட்டுக் கழட்டிய வேஷம்தான். அசலுக்குக் கொஞ்சமும் குறை வைக்காத அளவுக்கு சிவாவை காமெடி ஆட்டம் போட வைத்து கலக்கியிருக்கிறார் இயக்குனர் பத்ரி.

‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற டைட்டில் கார்டோடும், காமெடி ஹீரோ என்ற பெக்குலியர் இமேஜோடும் வலம் வந்தாலும் அதற்கேற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, சக்ஸஸ் கொடுக்கும் சிவாவுக்கு முதல் சபாஷ்! அண்ணன் கேரக்டருக்கு கதர், தம்பி கேரக்டருக்கு கான்டாக்ட் லென்ஸ் + கராத்தே என அவரின் கெட்டப் சேஞ்சையே காமெடியாக்கியிருப்பது ஸ்மார்ட் மூவ்.

‘‘நீங்க என்னை சந்தேகப்பட்டதுக்கே எங்கம்மா என்னை வேலைக்குப் போக வேணாம்னு சொல்லிட்டாங்க. இப்ப அவங்களை சந்தேகப்பட்டீங்கன்னு தெரிஞ்சா, உங்களையே வேலைக்குப் போக வேணாம்னு சொல்லிடுவாங்க’’ என்று முதலாளியையே குழந்தை போல மிரட்டி வைக்கும் இடத்தில் சிவா அடிப்பது கெயில் சிக்ஸர்.

தேங்காய் சீனிவாசன் நினைவு கொஞ்சமும் வராமல் தனக்கே தனக்கான தனி பாணியில் கலக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். சிவாவுக்கு, ‘‘குவாட்டர் ரெடி’’ என்று கால் வர, ‘‘முருகன் கோயிலில் இருந்துதானே பேசினாங்க? அந்தப் பிரசாதத்தை சாப்பிடப் போற சந்தோஷம் உன் முகத்தில் தெரிஞ்சது!’’ என்று அவர் வாலன்டியராய் ஏமாறுவது வயிற்றைப் பதம் பார்க்கிறது.

பிளாக் மார்க்கெட்டில் சரக்கு விற்கும் கோவை சரளா, சிவாவின் திடீர் அம்மாவாவதும்... அவரின் மெட்ராஸ் பாஷையை மறைக்க நாக்கில் அலகு குத்தி முருகனுக்கு விரதமிருப்பதாகச் சொல்வதும் செம கலாட்டா. ஒரிஜினல் ‘தில்லுமுல்லு’வில் கண்ணழகால் கவர்ந்திழுத்த மாதவியுடன் ஒப்பிடும்போது இஷா தல்வார் கொஞ்சம் குறைவுதான்!

சிவாவின் தங்கையை லவ்வும் சூரி, பிரகாஷ்ராஜின் உதவியாளராக வரும் மனோபாலா, நடிகராகவே வரும் சத்யன், தாய் மாமனாக வரும் இளவரசு என சின்னச் சின்ன கேரக்டர்களும் காமெடி பஃபே நடத்தியிருக்கிறது. எம்.எஸ்.வி  யுவன் கூட்டணி என்றாலும் ஸாரி... பாடல்களில் பழைய ‘ராகங்கள் பதினாறு...’தான் மீண்டும் ஹிட்!

கடைசி 10 நிமிடம் என்றாலும் சந்தானம் வந்த பிறகு, சிரிப்பு டபுள் டோஸ்! ஒரே கோயிலில் இரண்டு கல்யாணம்... இரண்டு மணப்பெண்ணுக்கும் ஒரே பெயர்... இது போதாதா? வணக்கம் போடும் வரை சந்தானம் அண்டு கோவின் சிரிப்புத் தாண்டவம்தான்.

ரஜினி  பாலசந்தர் என்ற மிகப் பெரும் கூட்டணிக்கு ஈடு கொடுத்து, முடிந்தவரை அதில் ஜெயித்தும் காட்டியிருப்பதில் செம ‘தில்லு’முல்லு!
 குங்குமம்
விமர்சனக்குழு