ஆதிமனிதனின் பாறைக் கிறுக்கல்கள்!





அந்த ஓவிய மரபுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரியம் உண்டு. கடைசி தலைமுறை ஓவியரோடு அழிய இருந்த அந்தக் கலை, ஒரு திடீர் அக்கறையால் காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதற்கான சாட்சிதான் இந்த ஓவியங்கள்...

மனித குலத்தின் தொன்மத்துக்குச் சான்றாக இருப்பவை பாறை ஓவியங்கள்தான். வார்த்தை பழகாத ஆதி மனிதன், தன் கருத்தை வெளிப்படுத்த கோடுகளையும், கீறல்களையுமே மொழியாகக் கொண்டிருந்தான். அந்த வகையில் ஓவியக்கலையின் மூலகர்த்தாக்கள் பழங்குடிகள்தான். இலைகளையும், கனிகளையும் பிழிந்து வண்ணமெடுத்து வரைந்து வைத்த சித்திரங்கள் பிரளய பேரழிவுகளைக் கடந்து இன்றைக்கும் அவர்களின் அறிவார்ந்த வாழ்க்கைக்குச் சான்றாக விளங்குகின்றன.

இப்போதைய அதிகார வர்க்கத்துக்கு பழங்குடிகள் ‘தேவையற்றவர்கள்’! அவர்களுக்கான உரிமைகளை மறுத்து, அடையாளங் களை அழித்து, பூர்வீக இருப்பிடங்களை சிதைத்து, பண்பாட்டையும் குலைத்துக் கொண்டிருக்கிறது நவீன சமூகம். தங்கள் ஆதி வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, நவீன வாழ்க்கையையும் தரித்துக் கொள்ள முடியாமல் இக்கட்டில் குலைந்து நிற்கின்றன அந்த மூதாதைக் குடிகள். அப்படியான ஒரு பழங்குடி சமூகத்தில் பிறந்தவர்தான் கிருஷ்ணன். தொலைந்து போகும் நிலையில் இருந்த தம் இனத்தின் ஓவியக் கலையை மீட்டு புத்துருவாக்கம் செய்திருக்கிறார்.
நீலகிரி மலைப்பகுதியில் வசிக்கும் குறும்பர்களின் வரைகலை மிகவும் நுணுக்கமானது. குடியிருப்புகளை ஒட்டியுள்ள மலைகளில் தங்கள் வாழ்வியலை உள்ளடக்கி ஏராளமான ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார்கள் மூதாதைக் கலைஞர்கள். இன்றைக்கு அந்த ஓவிய மரபே இல்லாமல் போய்விட்டது.

‘‘திருவிழா, பண்டிகை நாட்கள்ல பாறைகள்லயும், வீட்டுச் சுவர்கள்லயும் ஓவியங்கள் வரையுறது எங்க மரபு. எங்க ஊரான தாழைக்கொம்புல 4000 வருஷத்துக்கு முந்தி எங்க மூதாதைகள் வரைஞ்ச ஓவியங்கள் அழியாம இருக்கு. எங்க தாத்தா மாதன், அந்த மரபுல கடைசி ஆள். ரொம்ப சிறப்பா வரைவார். ஒவ்வொரு ஓவியமும் எங்க வாழ்க்கையையும், சடங்குகளையும், வழிபாட்டையும் சொல்லும். ‘இந்த மலை இருக்கிற வரைக்கும் நம்ம அடையாளம் மறையாது’ம்பார். ஆனா எங்களுக்கெல்லாம் அதுல பெரிசா ஆர்வம் வரலே. அன்னன்னிக்கு காடு, மலையின்னு சுத்தி, தேன் எடுத்தாத்தான் ரெண்டு வேளையாவது சாப்பிட முடியும். வாழ்க்கை நெருக்கடியில அந்த ஓவியத்தோட அருமை தெரியல.

சென்னையில இருக்கிற சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன்ல இருந்து பாலாஜின்னு ஒரு சார் அந்த ஓவியங்களை ஆய்வு பண்ண வந்தாரு. எங்க தாத்தா அவருக்கு ஓவியங்களை வரைஞ்சு காமிச்சாரு. அதைப் பாத்து ஆச்சரியப்பட்ட பாலாஜி, ‘இந்த அரிய கலை அழியக்கூடாது. அதுலதான் உங்க பழமையும், பெருமையும் அடங்கியிருக்கு’ன்னு சொல்லி, என்னையும் கத்துக்க வச்சார். அதுக்குப் பிறகுதான் எனக்கு இதோட பெருமை புரிஞ்சுச்சு’’ என்கிறார் கிருஷ்ணன்.



கிருஷ்ணன் தனது பெரியப்பா மகன் பாலசுப்பிரமணிக்கும் அவரது மகள் கல்பனாவுக்கும் இந்த வரைகலையைக் கற்றுத் தந்தார். மூவரும் சேர்ந்து சென்னையில் ஒரு கண்காட்சியை நடத்தியுள்ளார்கள். முகமற்ற ஆதி மனிதர்களும் இயற்கையும் இணைந்து உயிர் பெற்று உலவிய அந்தக் கண்காட்சி பரவலான கவனத்தைப் பெற்றது.

இவர்கள் வரைகிற ஒவ்வொரு ஓவியமும் ஒவ்வொரு கதையைச் சொல்கிறது. தேன் எடுக்கும் சம்பவத்தைக் காட்சிப்படுத்துகிறது ஒரு ஓவியம். ‘‘தேன்ல பலவகை இருக்கு. ஆனா மலைத்தேன்ல இருக்கிற சுவையும், மருத்துவ குணமும் வேறெதிலயும் இல்லை. ஆனா அதை அவ்வளவு எளிதா எடுக்க முடியாது. ஏழெட்டுப் பேரு கூட்டுச் சேந்து போவோம். முதல்ல கொடிகளைப் பிய்ச்சு ஒரு ஏணி கட்டுவோம் அதை உச்சியில ஒரு மரத்துல கட்டிடுவோம். அதை ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு நிப்பாங்க. யார் இறங்கறாங்களோ, அவங்களுக்கு பெண் கொடுத்த வகையறா ஆட்கள்தான் மேலே நிப்பாங்க. ஏன்னா, அவங்களுக்குத்தான் கீழே இறங்கிறவரோட உயிர் முக்கியம். ரெண்டு பேர் கீழே இறங்க, இன்னொருத்தர் மேலயிருந்து ஒரு கயிறை விடுவார். அதோட முனையில ஒரு கூடை வச்சு அதுல புகைமூட்டம் போட்டிருப்பார். அந்தப் புகையை வச்சு தேனீக்களை விரட்டி தேனை எடுப்போம்’’ என்கிறார் கிருஷ்ணன். ஓவியம் அந்த அவஸ்தையைச் சொல்கிறது.

இன்னொரு ஓவியம் திருமணக் காட்சியாக விரிகிறது. ‘‘எங்க சமூகத்தில வரதட்சணை பழக்கமெல்லாம் இல்லை. ஆனா, சீர் இருக்கு. கல்யாணத்தன்னிக்கு ரெண்டு சீர் கொடுப்பாங்க. ஒண்ணு கல்யாணத்துக்கு. இன்னொண்ணு சாவுக்கு. ஒரு திண்ணையில உக்கார வச்சு கருகமணி, காசு கோர்த்த மாலையை பொண்ணுக்கு கட்டுவார் மாப்பிள்ளை’’ என்று தம் சமூக வழக்கங்களைச் சொல்கிறார் கல்பனா.

இப்படி காட்டு தெய்வ வழிபாடு, வெள்ளாமை, திருவிழா என அத்தனை கூறுகளையும் ஓவியங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். சிறு சிறு கோடுகளில் கூட உயிர்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துகிறார்கள். ‘‘கண்காட்சியில எங்க ஓவியங்களுக்குக் கிடைச்ச வரவேற்பும், மரியாதையும் பெருமிதமாயிருக்கு. எங்களோட இந்தக்கலை அழியக்கூடாது. நீலகிரி மலையில எங்க மக்கள் வசிக்கிற 32 கிராமங்கள்லயும் சி.பி.ராமசாமி ஐயர் ஃபவுண்டேஷன் உதவியோட ஓவியப் பயிற்சி முகாம்களை நடத்தப் போறோம். எங்கள் அடையாளத்தை அழியவிடமாட்டோம்...’’ - மூவரும் உறுதியான குரலில் சொல்கிறார்கள்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.கோபால்,தமிழ்வாணன்