இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா





பொழுது விடிந்தால் டாஸ்மாக்கே கதி என்றிருக்கும் விஜய் சேதுபதிக்கு, எதிர்வீட்டுக் கல்லூரி மாணவி நந்திதா மேல் இருக்கிற ஒன்சைட் லவ்... ஆபீஸ் மேனேஜர், காதலி இரண்டு பேரையும் சமாளிக்க பாடுபடும் அஸ்வின் காதல்... இந்த இரண்டும் என்னவானது என்பதே இ.ஆ.பா படத்தின் ர.சுருக்கக் கதை. அதற்குள் இன்னும் கிளைக்கதைகளைச் சுற்றி, டாஸ்மாக், காமெடி கலந்து ரெடி பண்ணியிருக்கிறார் டைரக்டர் கோகுல்.

பெரும்பாலும் கலாய், காமெடி, டயலாக் டெலிவரிதான் படமே. மெட்ராஸ் பாஷை உறுத்தாமல் பொருந்திப் போவதில் அள்ளுகிறது விஜய் சேதுபதியின் நடிப்பு. எந்த உதறலும் இல்லாமல், அசால்ட்டாக நடித்து, எல்லோரையும் கலாய்த்து, ‘குமுதா ரொம்ப ஹேப்பி’ என நம்மையும் சொல்ல வைக்கும் ஸ்டைலில், ‘ஒன் மேன் ஷோ’ ஆக்குகிறார் சேதுபதி. இருக்கிற வேஷத்தையெல்லாம் நாமே போட்டுவிடலாமா என நினைக்கும் ஹீரோக்களைப் பார்த்துத்தான் நமக்குப் பழக்கம். ஆனால், எல்லோரும் நடிக்க இடம் கொடுத்து, அதில் தன்னையும் தனியாக நிரூபிக்கும் சேதுபதி, நடிப்பில் புது சரித்திரம்.

படத்தின் இன்னொரு கதாநாயகன் அஸ்வின். சாருக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார். மேனேஜர் எம்.எஸ்.பாஸ்கரிடம் மாட்டிக்கொண்டு விழித்து, காதலி சுவாதியிடம் அல்லாடுவது சூப்பர். டாஸ்மாக் அயிட்டங்களோடு காதலியிடம் அவர் பிடிபடும் தருணங்கள் எல்லாம் சிரிப்பு ரவுசு.
கட்டப்பஞ்சாயத்து அண்ணாச்சி பசுபதியின் காமெடி இன்னும் உச்சம். உலுக்கிப் போடும் குரலில் மிரட்டும் பசுபதியின் அடங்கிய காமெடி நமக்கே புதுசு.
மாடிக்கு வந்து நிற்பதோடு நந்திதா போர்ஷன் முடிந்துவிட்டாலும், அவரைச் சுற்றிலும் காட்சியமைப்பை வைத்திருப்பது ஆச்சரியம். சின்னச்சின்ன சேட்டைகள் செய்து கலக்கும் சேதுபதிக்கு முன்னால் நிற்க முடியாமல் தடுமாறுகிறார் நந்திதா. நந்திதா மேலிருக்கிற பிரியத்தை சொல்லிச் சொல்லி காதலனாக சேதுபதி சவட்டி எடுக்கும்போது, வெறுப்பாக ஒதுங்கிப் போவதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது.

டாஸ்மாக்கில் ஒரு கொலையை செய்துவிட்டு வெளியேறும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனிடம் இவ்வளவு காமெடியை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. சூரி கால் மணி நேரம் மொத்த ஏரியாவையும் கலக்கிவிட்டு போகிறார். குவார்ட்டர் சரக்குக்காக சேதுபதி, டேனியல் அலையும் அலைச்சலில் வயிறு கிழிபடுகிறது. இவ்வளவு அல்லுசில்லு கலாட்டாக்களையும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது மகேஷ் முத்துசுவாமியின் கேமரா. டைமிங் டயலாக்குகள் தரும் படார் பட்டாசுகளுக்கு கார்க்கியும் டைரக்டரும் பொறுப்பு. இசையமைப்பாளர் சித்தார்த் விபீனின் இரண்டு குத்துப் பாடல்கள்... இந்த வருஷத்தின் மீதியை ஆக்கிரமிக்கப் போகிறது. இனி இளைஞர் பிரதேசத்தில், ‘ப்ரே பண்ணுவோம்’தான் தேசிய கீதம்.
எல்லாம் சரி, தெருவில் திரிகிற ஒரு ஹீரோ எல்லா விதமான டார்ச்சரையும் பொறுக்கித்தனத்தையும் செய்து ஹீரோயினை கைப்பிடிக்கிற கதைகளை எப்பப்பா விடப்போறீங்க?
முன் பாதியில் அடுத்து என்ன செய்வது என தவித்தாலும், பின் பகுதி சுவாரஸ்யம், படு சுறுசுறுப்பு. காமெடியை வைத்தே... அதுவும் பின்னும் வசனங்களை வைத்தே அதன் டோன் மாற்றியிருக்கிறார்கள்.
இதற்குத்தான் ஆசைப்பட்டு இருந்தால், நோக்கம் நிறைவேறி இருக்கிறது!
- குங்குமம் விமர்சனக் குழு