நியூஸ் வே





குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை இழக்கும் முதல் அரசியல்வாதி என்ற ‘பெருமை’யைப் பெறுகிறார் ரஷீத் மசூத். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இவர், காங்கிரஸில் சேர்ந்து 2 ஆண்டுகள்தான் ஆகிறது. வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசில் ஜனதா தளத்தின் அமைச்சராக இருந்து செய்த ஊழலின் ஊழ்வினையே இந்தத் தீர்ப்பு! அதன்பிறகு லோக் தளம், சமாஜ்வாடி என ஒரு ரவுண்டு வந்தவர், காங்கிரஸுக்கு கஷ்டம் கொடுத்துவிட்டார். சரியாக இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்ட் 15ம் தேதி பிறந்தவர் அவர் என்பது பெருமையா? சிறுமையா?

‘யாருக்கும் ஓட்டு இல்லை’ என நிராகரிக்கும் உரிமையான ‘49ளி”  வுக்கு தனி பட்டன் ஏற்காடு இடைத் தேர்தலில் முதன்முறையாக வரப் போகிறது. வேட்பாளர்கள் எல்லோருக்கும் இருக்கும் பட்டன் போல இதற்கும் ஒரு பட்டன் இருக்கும். நிறைய ஓட்டு இதற்கு விழுந்தால் என்ன செய்வது என்பதில்தான் இன்னமும் தெளிவு இல்லை.

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை மிஷ்கின், கமல், இளையராஜா சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். மிஷ்கினை தட்டிக் கொடுத்து பாராட்டி விட்டார் கமல். ஏற்கனவே இரண்டு பேரும் சேர்ந்து படம் செய்வதாக இருந்தது. இப்போது மறுபடியும் அந்த ஐடியா வந்துவிட்டது.

‘மிஸ் வேர்ல்டு’ பட்டம் வென்ற முதல் பிலிப்பைன்ஸ் பெண் ஆகியிருக்கிறார் மேகன் யங். இதைத் தொடர்ந்து, ‘பிலிப்பைன்ஸ் பெண்கள் அழுக்கான வேலைக்காரிகள்’ என சமூக வலைத்தளங்களில் இனவெறி அவதூறு கிளம்ப, ‘‘வீட்டு வேலை செய்வது ஒன்றும் கிரிமினல் குற்றம் இல்லையே?’’ எனக் கேட்ட மேகன், பிலிப்பைன்ஸ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ‘‘கண்ணியமான உயர்வை நாம் வேலைகள் மூலம் பெறுவோம்!’’



படங்கள் சரியாகப் போகாத காரணத்தால் ஜாதகம் பார்த்து பேரை மாற்றிக்கொள்ளலாமா என்ற உத்தேசத்தில் இருக்கிறார் மிர்ச்சி சிவா. நண்பர்களிடமும் ஆலோசனை கேட்கிறார்.

வடிவேலு நான்கைந்து படங்களில் தொடர்ந்து நடிக்க ஏற்பாடான பின்புதான் சென்னை வந்து தங்குவாராம். அதுவரை அம்மாவின் ஆசைக்காக மதுரையில்தான் இருக்கிறார். ஆனாலும் சென்னையில் நடப்பது பற்றி அப்டேட்டில் இருக்கிறார்.

சித்தார்த்துடன் லட்சுமி மேனனுக்கு பதின்மூன்று வருட காதலாம். ‘அச்சச்சோ... அப்போ சமந்தா லவ் அவ்வளவுதானா?’ என உங்கள் ஏழாம் அறிவு யோசிப்பதற்குள் ஒரு தகவல். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது ‘பாய்ஸ்’
படத்தைப் பார்த்த லட்சுமி மேனனுக்கு அப்போதே சித்தார்த் மீது ஈர்ப்பு வந்துவிட்டதாம். இப்போது ‘ஜிகர்தண்டா’வில் அவருக்கு ஜோடியாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பை ‘‘இறைவன் கொடுத்த பரிசு’’ என்கிறார்.



நெட்டில் ரிலீசாகி பரபரப்பு ஏற்படுத்திய ‘அத்தரிண்டிக்கு தாராதி’ படம் பல ரெக்கார்டுகளை முறித்துப் போட்டு விட்டது. அமெரிக்காவில் அதன் வெற்றி முதல் தரமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தெலுங்கில் எல்லா படங்களின் வசூல் ரெக்கார்டுகளையும் முறியடிக்கப் போகும் பவன் கல்யாணின் இந்தப் பட ரீமேக் ரைட்ஸை வாங்க அஜித், சூர்யா, விஜய் மூவருமே போட்டி போடுகிறார்கள். இதனால் ரேட் எகிறிவிட்டது.

சைலன்ஸ்
கேரள நடிகைக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியதையொட்டி, அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. எந்நேரமும் அப்பா, அம்மா, அக்கா என அத்தனை பேரும் அருகில் இருக்கிறார்கள். எல்லோரும் பேசினபிறகுதான் செல்போன் நடிகை வசமே போகும். ‘‘இப்படி எல்லா ஹீரோயினுக்கும் பாதுகாப்பு இருந்தால் பிரச்னையே இல்லாமல் ஷூட்டிங் நடக்கும்’’ என்கிறார்கள்.

எக்கச்சக்கமாக பில் போட்டு சம்பளம் வாங்கும் கேமராமேன் இந்தியில் உச்சமாக இருந்தார். முதல்முறையாக டைரக்டர் செய்யும் தமிழ்ப்படத்தையும் அதே முறையில் எடுக்க, கேள்வியே இல்லாமல் நிறுத்திவிட்டது புரொடக்ஷன் தரப்பு. இப்போது அவர் இறங்கி வந்து செலவைக் குறைப்பதாக சத்தியம் செய்ய, மறுபடி ஷூட்டிங் ஆரம்பித்திருக்கிறது.