நிழல்களோடு பேசுவோம்





கொஞ்சம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருங்கள்

இந்த நாட்களில் எல்லோரும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப் பற்றியே பேசுகிறார்கள். சமீபத்தில் கூகுள் கண்ணாடி மூலம் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை பற்றி பத்திரிகைகள் விரிவாக எழுதின. ஆபரேஷன் செய்யும் டாக்டரின் மூக்குக் கண்ணாடியில் இணையத் தொடர்புடன் கூடிய ஒரு மைக்ரோ கம்யூட்டரைப் பொருத்தி அதன் வழியே ஒரு அறுவை சிகிச்சையை எந்த மூலையில் இருக்கும் டாக்டரும் மேற்பார்வையிட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள். இந்தப் பத்தாண்டுகளில் இப்படி என்னவெல்லாம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன!

இன்னும் சில வருடங்களில் வாகனத்தை இடையில் நிறுத்தி ‘இந்த அட்ரஸ் எங்கே இருக்கிறது’ என்று கேட்பவர்களிடம், ‘‘நேரா போனீங்கன்னா ஒரு பிள்ளையார் கோயில் வரும், அங்கிருந்து மூணாவது லெஃப்ட், அதுல நீங்க திரும்பவும் அஞ்சாவது ரைட்டுல திரும்பி லெஃப்ட் எடுத்தீங்கன்னா ஒரு ரவுண்டானா வரும். அதுல இருந்து ரெண்டாவது ரைட் கட்டிங் போனீங்கன்னா...’’ என்று நீங்கள் யாரையும் குழப்ப முடியாது. கைக்கடிகாரத்தில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தினால், அவை உங்களை எந்த மூலைக்கும் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிடும். இப்போதே தொலைபேசியில் நான் சொல்கிற தோராயமான முகவரிகளை யார் உதவியும் இல்லாமல் துல்லியமாகக் கண்டுபிடித்து வந்துவிடுகிறார்கள்.

மனிதகுல பரிணாம வளர்ச்சியில் செல்போனும் இணையத் தொடர்பும் புதிதாக உருவான இரண்டு உறுப்புகள் அல்லது இரண்டு புலன்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. இந்த உறுப்புகளும் புலன்களும் இல்லாதவர்கள் அருகி வருகிறார்கள். மனிதர்கள் இந்த இரண்டோடும் அதிவேகமாக இணைக்கப்பட்டு வருகிறார்கள். இந்த உறுப்புகளின் வழியாகத்தான் மனிதர்கள் பார்க்கிறார்கள், கேட்கிறார்கள். சிந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். யாராவது பணம் இல்லையென்று இதற்கு வெளியே இருந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அரசாங்கம் எல்லோருக்கும் இலவச செல்போன்களை இலவச டாக் டைமுடன் கொடுக்க முயற்சித்து வருகிறது. விவசாயிகள் மழை வருமா என இனி வானத்தை அண்ணாந்து பார்க்க மாட்டார்கள்; அல்லது டி.வியில் ரமணன் சொல்லும் ஜோசியங்களை நம்ப மாட்டார்கள். ஸ்மார்ட் போனில் துல்லியமான விவரங்களைத் தெரிந்து கொள்வார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே செல்போன் மூலம் விபசாரம் என்ற செய்திகள் பரபரப்பாக அடிபட்டபோதுதான் அதன் முக்கியத்துவம் பலருக்கும் தெரிய ஆரம்பித்தது.



நீங்கள் எங்கோ ஒரு திருமண வீட்டில் இருக்கிறீர்கள் அல்லது சாவு வீட்டில் இருக்கிறீர்கள். போனை பயன்படுத்த முடியாத வேறு ஏதோ இடத்திலோ அல்லது சந்தர்ப்பத்திலோ இருக்கிறீர்கள். உங்கள் செல்போன் சைலன்ட் மோடில் இருக்கிறது அல்லது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. வெளியே வந்ததும் போனை பதற்றமாக எடுத்துப் பார்க்கிறீர்கள். ஒரு மிஸ்டு கால் அல்லது ஒரு மெசேஜ்கூட இல்லாவிட்டால் உங்கள் மனம் ஆழ்ந்த ஏமாற்ற உணர்வை அடைகிறது. மிகவும் தனிமையாக உணர்கிறீர்கள். உடனே யாரையாவது தொடர்புகொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. அதாவது உங்களுடைய ஒரு புலன் வேலை செய்யாவிட்டால், ஒரு உறுப்பு இயங்காவிட்டால் வரும் பதற்றம் அது.

பயணங்களில் நாம் கிளம்பும் இடத்திற்கும் போய்ச் சேரும் இடத்திற்கும் இடையே ஒரு உலகம் இருக்கிறது. அதில் எண்ணற்ற காட்சிகளும் பிம்பங்களும் மனத் திரையில் பட்டு விலகுகின்றன. எனக்குக் கிளம்பும் இடமும் போய்ச் சேரும் இடமும் முக்கியமே அல்ல. பிரயாணத்திற்காகவே பயணத்தை பெரிதும் விரும்பியிருக்கிறேன். சும்மா பராக்கு பார்த்துக்கொண்டே வருவேன். எத்தனையோ வினோதமான குரல்கள், முகங்கள், வாசனைகள், எழுத்துகள்... ஒருமுறை பேருந்துப் பயணத்தில் ஒரு கணம் ஒரு வாசகம் கண்ணில் பட்டு விலகியது. ‘ஒருவனை அவனது தாய் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன்’! ஓடும் பேருந்தில் வாய் விட்டு அழுதேன்.

ரயிலில் யாரோ ஒரு மனிதன் அருகில் வந்து அமர்கிறான். உலகத்தில் யாரிடமும் சொல்ல முடியாத ஒரு அந்தரங்கமான கதையை அன்னியனான என்னிடம் கூறிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிப் போய்விடுகிறான். இப்போது மனிதர்கள் பேருந்துகளிலோ, ரயிலிலோ யாரையும் எதையும் கவனிப்பதில்லை. அவர்கள் ஏறுகிற இடத்திலிருந்து இறங்குகிற இடம்வரை யாருடனாவது போனில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்; அல்லது தூங்கிவிடுகிறார்கள். தூங்கி எழுந்து மறுபடி போனை எடுத்து பேசத் தொடங்குகிறார்கள். ஒரு பையன் பைக் ஓட்டிக்கொண்டு போகிறான். அவன் புளூடூத்தில் தனது செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டே ஓட்டுகிறான். அவனுக்குப் பின்னே ஒரு பெண் அமர்ந்து பயணம் செய்கிறாள். அவள் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டே இருக்கிறாள். நிறைய நேரம் உணவகங்களிலோ, கடற்கரையிலோ ஜோடியாக அமர்ந்திருப்பவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதைவிட அதிகமாக வேறு யாருடனோ தொடர்பில் இருப்பதைக் காணலாம். இது ஒரு வினோதமான காட்சி. ஒரு பிரமாண்டமான கடற்கரையில் அலைகள் வேகமாக மோதிக்கொண்டிருக்கின்றன. அருகில் ஒரு குழந்தை பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறது. நடைப் பயிற்சி செய்பவர்கள் போனில் பேசிக்கொண்டோ அல்லது காதில் இசை கேட்டுக்கொண்டோ அலட்சியமாக எல்லாவற்றையும் திரும்பிப் பார்க்காமல் கடந்து போகிறார்கள். புணர்ச்சியின் நடுவே செல்போனை எடுத்துப் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.

எனது சிநேகிதி ஒருத்தியின் பிறந்த நாள் எனக்கு இரண்டு தினங்கள் கழித்தே தெரிய வந்தது. ஏன் சொல்லவில்லை என்று கோபித்துக்கொண்டேன். ‘‘அதான் ஃபேஸ்புக்கில் இருந்ததே...’’ என்றாள். ஃபேஸ்புக்கிற்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு எந்த நல்லது கெட்டதும் தெரியக் கூடாதா? நாம் ஏன் இதனோடு இவ்வளவு ஆழமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம்?
எனது நண்பன் ஒருவன் ஒருமுறை குறிப்பிட்டான், ‘‘நமது செல்போனை நாம் உபயோகிப்பதைவிட மற்றவர்கள் உபயோகிப்பதுதான் அதிகம்’’ என்று. நீங்கள் உங்களுக்கு நெருக்கமான அல்லது உங்கள்மேல் அதிகாரமுள்ள ஒருவரின் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் அவரிடமிருந்து ஆயிரம் கேள்விகள் காத்திருக்கின்றன. அந்த நேரத்தில் எங்கே இருந்தீர்கள், என்ன செய்தீர்கள், போனை எடுப்பதைவிட முக்கியமான காரியங்கள் உங்களுக்கு என்ன இருந்தன, அவருக்குத் தெரியாமல் ஏதாவது ரகசிய வேலைகளில் ஈடுபட்டிருந்தீர்களா என்று எண்ணற்ற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். ஒருவர் போனை எடுக்கவில்லை என்றால் நமக்கு ஏன் கோபம் வருகிறது? ஏன் சந்தேகம் வருகிறது? ஏன் பதற்றம் வருகிறது? ஏன் பயம் வருகிறது? அவர் அந்தக் கருவியின் மூலமாக உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்புகிறீர்கள். அவர் உங்கள் அழைப்பை ஏற்காவிட்டால் அந்தக் கட்டுப்பாடு குலைகிறது. ஒரு இடத்தில் இருப்பவர் எந்த இடத்தில் இருப்பவரையும் கூப்பிட்ட குரலுக்கு திரும்பிப் பார்க்கச் செய்யும் அதிகாரம் இது. மனிதன் இதுவரை கண்டுபிடித்த அதிகாரக் கருவிகளிலேயே மோசமானது இந்த செல்போன்தான் என்று தோன்றுகிறது.

தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கும் மனிதன் சந்தேகத்திற்கு உரியவனாகி விடுகிறான். உண்மையில் இந்த தொடர்பியல் புரட்சி நம்மை இந்த உலகத்தோடு எந்த அளவிற்கு பிணைத்திருக்கிறதோ, அந்த அளவிற்கு நம்மை இந்த உலகத்திலிருந்து துண்டித்துமிருக்கிறது. இந்தத் தொடர்பு சாதனங்கள் ஒரு தொடர்பியல் வட்டத்தை உருவாக்குகின்றன. அந்த வட்டத்திற்கு வெளியே இருக்கும் எதையும் அது பார்க்க விடுவதில்லை; கேட்க விடுவதில்லை; நுகர விடுவதில்லை. அந்த வட்டத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை எந்த நேரமும் கண்காணிக்கிறார்கள். பொறுப்பேற்கச் செய்கிறார்கள். உடனுக்குடன் பதிலளிக்க கடமைப்பட்டவர்கள் ஆக்குகிறார்கள். இது உண்மையில் கண்ணாடி அறைகளாலான ஒரு மாளிகையில் நிர்வாணமாக நடமாடுவது போல் இருக்கிறது.

நான் வாரத்தில் எப்போதாவது சில மணி நேரம் என் தொலைபேசியை அணைத்துவிடுகிறேன். அது, என்னைத் தொடர்புகொள்ள முயன்ற ஒவ்வொருவருக்கும் பதற்றத்தை உண்டாக்குகிறது. ஆனால் இன்று ஒருவர் கொஞ்ச நேரமாவது தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பது என்பது ஒரு தியானம் போன்றது. மிஞ்சியிருக்கும் நமது சுதந்திரத்தின் ஒரு துளியை மீட்டுக்கொள்ளும் கடைசி முயற்சி அது. இந்தத் தொடர்பு சாதனங்களிலிருந்தும் கொஞ்சம் வெளியேறுவது இந்த உலகத்துடன் வேறு தொடர்புகளை மேற்கொள்ள மிகவும் அவசியம். ஒரு காலிங் பெல்லிற்கு முன் நிற்கும் ஏவலாள் போல நமது மொத்த உலகமும் மொத்த வாழ்க்கையும் மாறத்தான் வேண்டும்.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்



எம்.ஜி.ஆர் இறக்காமல் இருந்திருந்தால்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
எம்.ஜி.ஆர் இறந்துவிட்டாரா என்ன?
உலகளவில் முதல் 200 இடங்களில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றுகூட இல்லை என்று ஜனாதிபதி வேதனைப்பட்டிருக்கிறாரே...
- மல்லிகா அன்பழகன், சென்னை-78.
அதற்குத்தான் கல்லூரிகளில் ஜீன்ஸ், டி-ஷர்ட் போடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறோம். இனி பாருங்கள், கல்வித் தரத்தில் எப்படி உலகத் தரத்தைப் பிடிக்கிறோம் என்று!
‘‘தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களையும் படைகளையும் அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களையும் ஆசிரியர்களையும் அனுப்புங்கள்’’ என்று பாகிஸ்தான் சிறுமி மலாலா ஐ.நா சபையில் கூறியுள்ளது பற்றி...
- மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்.
மலாலா போன்ற குழந்தைகள் உருவாகும் நாட்டில் எதிர்
காலத்தில் தீவிரவாதமே உருவாகாது.
அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மனநிலை சரியாக இருக்காது என்கிறார்களே... உண்மையா?
- கி.ரவிக்குமார், நெய்வேலி.
ஏற்கனவே மனநிலை சரியாக இல்லாதவர்களுக்கு சரியாக இருக்காது.

நெஞ்சில் நின்ற வரிகள்
நவீன சினிமா பாடல்கள் நினைவில் நிற்பதில்லை என்கிற அவச்சொல்லை துடைக்கும் பாடல்கள் பல கடந்த பத்தாண்டுகளில் வந்திருக்கின்றன. ‘மின்னலே’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அதன் புதுமை அழிவதே இல்லை. ‘வசீகரா...’ என்ற அந்த அழைப்பில் இந்த உலகில் ஒரு ஆணை காதலின் எல்லையற்ற பிரகாசத்தில் ஆழ்த்தும் ஒரு வசீகரம் இருக்கிறது.
‘வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்’
என்ற வரிகளின் தவிப்பை இதைவிட எப்படிச் சொல்வது?
‘யாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே...’
என்ற வரிகளில் முடிவிலி என்ற தாமரையின் சொல்லை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்திருக்கிறேன். தமிழ் சினிமா பாடல் ஒன்றில் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஆழமான சொல் அது.

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
மிக முக்கியமான நவீன எழுத்தாளரான வா.மு.கோமுவின் ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து...
ஸ்டாம்பு சேகரிப்பு என்றொரு பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது! 70களில் ஒரு குயர் நோட்டில் சேகரித்து ஒட்டி ஆல்பம் போல வைக்கும் பழக்கத்தை தந்தையார் எனக்கு பரம்பரை வியாதி ஒன்றை ஒட்ட வைப்பது போல் தள்ளிவிட்டார். அச்சமயத்தில் அவருக்கு தமிழ்நாட்டிலிருந்தும், இலங்கையிலிருந்தும் சிற்றிதழ்கள் வந்து வாசலில் விழுந்து கொண்டேயிருந்தன! ‘சிரித்திரன்’, ‘அலை’, ‘தேன்மழை’ போன்ற இலங்கை இதழ்களுக்கு ஒட்டப்பட்டுவரும் ஸ்டாம்புகள் புதுமையாக இருக்கும்! என் சேகரிப்புகள் பழைய புராதன வீட்டின் இடுக்கில் ஒளிந்து சிலகாலம் கண்ணாமூச்சி விளையாடின!

என் பையன் இப்போது எதையும் சேகரிக்கும் பழக்கம் இல்லாமல் இருக்கிறான். ஆனால் பலவகையான ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்டிவரும்படி பள்ளியிலேயே கண்டிஷன் போட்டு விடுகிறார்கள். பழவகை, காடு, புலவர், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் என்று கடையில் காசு நீட்டினால் பேக் செய்து நீட்டுகிறார்கள். ‘ஏண்டா இப்படி?’ என்றால், ‘10 மார்க்குப்பா!’ என்கிறான். https://www.facebook.com/vaamukomu?fref=ts