விளைநிலத்தில் அனல் மின் நிலையம்?





கூடங்குளத்தில் ஒரு பக்கம் மக்கள் போராட்டங்கள் தொடர, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப ரீதியாகவும் தொடரும் தாமதங்களால் இன்னமும் அங்கிருந்து மின்சாரம் தமிழகத்தை எட்டிப் பார்க்கவில்லை. ‘‘இன்னும் பதினைந்து நாட்களில்...’’ என்ற மத்திய அமைச்சர் நாராயண சாமியின் வழக்கமான பேட்டிகளில் வரும் அந்தப் பதினைந்தாவது நாள் இன்னும் வரவே இல்லை. இன்னொரு பக்கம் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் அமைய இருக்கும் அனல் மின் நிலையத்துக்கு ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டது எதிர்ப்பு. பொன்னான விளைநிலங்களை தரிசு எனச் சொல்லி பறிக்க முயற்சி நடப்பதாக கண்ணீர் விடுகிறார்கள் விவசாயிகள்.    

‘‘எங்க வாழ்க்கையே இந்த நிலம்தாங்க. கிணத்துப் பாசனம்தான். ஆனா, பொன்னி அரிசி, தினை, கேழ்வரகு, வேர்க்கடலைன்னு எது போட்டாலும் நல்லா விளைச்சல தர்ற பூமிங்க இது. இதைப் போயி தரிசுன்னு சொல்லி பிடுங்கப் பார்க்கறாங்களே!’’ - கண்ணீரும் கொதிப்புமாகப் பேசும் சுப்பராயன், தண்ணீர்ப்பந்தல் என்கிற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கிராமத்தின் அருகேதான் நாலாயிரம் மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட அல்ட்ரா அனல் மின் நிலையத்தை அமைக்க இருக்கிறது மத்திய அரசு. இதற்காக சித்தார்காடு, வெடால், விளங்காடு, கங்கதேவன்குப்பம், பனையூர் உள்ளிட்ட 24 கிராமங்களில் உள்ள சுமார் 1050 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்த ஆய்வு நடத்தி வருகிறார்கள் அதிகாரிகள். ‘‘உயிரே போனாலும் நிலத்தைத் தர மாட்டோம்’’ என மருகுகிறார்கள் விவசாயிகள்.

‘‘இது முப்போகம் விளையிற பூமிங்க. நான் முப்பது வருஷமா விவசாயம் செய்றேன். என் ரெண்டு பொண்ணுங்களையும் இந்த நிலம் கொடுத்த வருமானத்துலதான் கட்டிக் கொடுத்திருக்கேன். பையனைப் படிக்கவும் வைக்கிறேன். இனி, என்ன செய்யப் போறேனோ!’’ - எனக் கலங்குகிறார் அதே தண்ணீர்ப்பந்தலைச் சேர்ந்த செங்கேணி.



‘‘எங்க நிலத்தை நாங்க தர்றதா இல்லைங்க. தொடர்ந்து போராடுவோம்’’ என்கிறார் சித்தார்காடு முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான மதுரை வீரன். ‘‘இதுவரைக்கும் எங்ககிட்ட எந்தக் கருத்தையும் அதிகாரிகள் கேட்கல. ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய் வரை விலை கொடுக்க இருக்கறதா பேசிக்கறாங்க. இ.சி.ஆர்ல இருக்குற எங்க நிலங்களுக்கு அது அடிமாட்டு விலை. இங்கே மார்க்கெட் மதிப்பு ஏக்கருக்கு 50 முதல் 80 லட்சம் ரூபாய். ஆனா, அதெல்லாம் எங்க நோக்கமில்ல... எங்களுக்கு சோறு போடுற நிலம்... இதை வித்துட்டு நாங்க காசையா கறி சமைக்க முடியும்?’’ என்கிறார் அவர் ஆதங்கத்தோடு.

நிவாரணம் தருவதில், கூடக்குறைய பேச்சுவார்த்தை நடத்தினால் கூடப் பரவாயில்லை. இந்தப் பகுதியில் எல்லாம் தரிசு நிலம். நீர்நிலை, இயற்கை வளம் என எதுவுமே இங்கே இல்லை என அரசுத் தரப்பில் வாதம் செய்வதைத்தான் இங்குள்ள மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

‘‘அரசுத் தரப்பில் சொல்லப்படுகிற எதுவும் உண்மையில்லை’’ என்கிறார் சமூக ஆர்வலரான சரவணன். ‘‘கடந்த 2007ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை மத்திய அரசின் மின்சக்தித் துறை, பொதுத்துறை நிறுவனமான ‘பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன’த்திடம் ஒப்படைத்தது. அவர்கள் புதுடெல்லியை மையமாகக் கொண்டு இயங்கும் ‘கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்கள் தவறான தகவல்களையே அரசுக்குஅளித்து வருகின்றனர். இங்குள்ளவற்றில் 82 சதவீதம் விளைநிலங்கள். அவற்றில் 27 சதவீதம் நீர்நிலைகள் இருக்கின்றன. செய்யூர் தாலுகாவில் மட்டும் 82 ஏரிகள் உள்ளன. இதன் மூலம் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 



செய்யூரில் உள்ள கடல் சார்ந்த உப்பு நீர் ஏரிக்கு பறவைகள் வரத்து மிகச் சொற்பம் என்கிறது அரசுக் குறிப்பு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளாக 22 ஆயிரம் நீர்ப்பறவைகள் இப்பகுதிக்கு வந்து சென்றுள்ளன. இப்படிப் பல்வேறு குளறுபடிகள் செய்து இந்தத் திட்டத்தைக் கொண்டு வரத் துடிக்கின்றனர் அதிகாரிகள்’’ என்கிறார் அவர்.

இந்தத் திட்ட அறிவிப்பு வெளியான பிறகு கடந்த ஐந்து வருடங்களாக நிலத்திற்கான வரிகளை வசூலிக்கவில்லையாம் அரசு. அதனால் அரசு இந்த நிலங்களை கட்டாயம் கையகப்படுத்திவிடும் என பயப்படுகிறார்கள் விவசாயிகள்.

‘‘சுற்றுச்சூழல் கண்ணோட்டத்திலும் இந்த அனல் மின் நிலையம் எதிர்க்கப்பட வேண்டியது’’ என்கிறார் ‘சமூகச் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு’ என்கிற அமைப்பின் ஆலோசகரான நித்யானந்த் ஜெயராமன். ‘‘அனல் மின் நிலையம் அமைக்க 1050 ஏக்கர் விளைநிலங்களை எடுக்கும் அரசு, அதன் கழிவுகளைக் கொட்ட 220 ஏக்கர் நிலத்தை மற்றொரு புறம் எடுக்கிறது. இந்த அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 45 ஆயிரம் டன் நிலக்கரியை எரிப்பார்கள். இதிலிருந்து சாம்பல் கழிவுகள் வருடத்துக்கு 19.4 லட்சம் டன் வெளிவரும். இந்தக் கழிவுகளில் கந்தகம், ஈயம், குரோமியம், பாதரசம் எனப் பல வேதிப்பொருட்கள் உண்டு. ஒரு கிராம் பாதரசம், 25 ஏக்கர் ஏரியை விஷமாக்கக் கூடியது.



இந்தக் கழிவுகள் காற்றில் கலப்பதால் சுவாசக் கேளாறு அதிகம் வரும். இந்தக் காற்று மாசு கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சியையே பாதிக்கும். சரும நோய்களும் பெருகும். ஏற்கனவே அனல்மின் நிலையத்தால் இந்தத் தொல்லைகளை அனுபவிக்கும் எண்ணூர் மக்களே இதற்கு உதாரணம். இந்த அனல்மின் நிலையம், அதைவிட பத்து மடங்கு பெரியது. இதன் மூலம் ஏழு மாநிலங்கள் பயன் பெறலாம்... தமிழகத்திற்கு 1500 மெகாவாட் கிடைக்கலாம். ஆனால், அந்த மின்சாரத்தை அனுபவிக்க மனிதர்கள் தேவையில்லையா?’’ - வருத்தத்தோடு முடிக்கிறார் அவர்.

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சி.எஸ்., கங்காதரன்