சாயி : ஷீரடி பாபாவின் புனித சரிதம்





வெளிப்புறமாக நீங்கள் செய்யும் ஆராதனை, உங்களுக்குள் இருக்கும் என்னை அடைகிறது. அப்போது நான் சக்தி உடையவனாகி, உங்களைக் காப்பாற்றுகிறேன்.
- பாபா மொழி

ஐந்து வீடுகளில் மட்டும்தான் பாபா யாசகம் பெற்றுத் திரும்புவார். கிடைத்த சாதம், ரொட்டி, போளி இவற்றைத் தட்டில் வைத்து, நன்றாக ருசித்துச் சாப்பிடுவார். உண்மையில் மகாயோகிகளுக்கு ருசியெல்லாம் இருக்கக் கூடாது. ஆனால், மக்களுக்கு அவர் மேல் அளவற்ற அன்பு. அவர்கள் பிரியத்துடன் கொடுத்த உணவாதலால், எல்லாமே அவருக்கு அமிர்தமாக இருந்தது! எல்லாவற்றையும் அவரே சாப்பிடுவதில்லை. கூடியிருக்கும் மக்களுக்கும், காக்கை, குருவி, நாய் போன்றவற்றுக்கும் பகிர்ந்தளிப்பார். மசூதியைக் கூட்டிப் பெருக்கும் பெண்கள்கூட தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களின் குழந்தைகள், சாயியின் பிரசாதமாக இதைச் சாப்பிட்டு திருப்தி அடைவார்கள்.

பாபா யாசகம் பெறும் முறையும் வித்தியாசமாக இருந்தது. பகலில் ஒரு வேளைதான் யாசகம் கேட்பார். சில சமயம், ஒரு நாளைக்கு நாலைந்து வேளையும் யாசகம் வாங்கப் போவார். திடீரென்று ஒரு நாள் பன்னிரண்டு வேளை யாசகம் கேட்கப் போய், நிறைய உணவு சேகரித்து வருவார். ஆச்சரியம் என்னவென்றால், அன்றைக்கு அவரைப் பார்க்க நிறைய விருந்தினர்கள் வருவார்கள். எல்லாம் காலியாகிவிடும்! இவ்வளவு பேர் வரப் போவது பாபாவுக்கு முன்கூட்டியே எப்படித் தெரியும் என்று மக்கள் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள்.
அன்றைக்கு யாசகமாய் கொண்டு வந்த எல்லா உணவையும் தட்டில் போட்டு சிறுசிறு உருண்டைகளாக்கி, காக்கை, குருவிகளுக்குப் போட்டார். தானும் இரண்டு கவளம் எடுத்துக்கொண்டார். எல்லா பட்சிகளும் பறந்து வந்தன. சில பறவைகள் பாபாவின் தலையிலும் கையிலும் உட்கார்ந்து சாப்பிட்டன. எல்லாம் முடிந்ததும் தண்ணீர் அருந்திவிட்டு படுத்தார். இதை மாதவராவ் தேஷ்பாண்டே, மகல்சாபதி, காசிராம் வெளியில் நின்று பார்த்தனர்.

‘‘இந்த பட்சிகள் எல்லாம் எப்படி உங்கள் தலையிலும் கையிலும் பயப்படாமல் உட்காருகின்றன?’’ என வினவினார் மாதவராவ்.
‘‘என் மனம் சுத்தமானது. யாருடைய மனம் நிச்சலனமாக இருக்கிறதோ, அவர்கள் அருகில் பட்சி என்ன, பிராணிகள்கூட வந்து விளையாடும். முதலில் மனதை சுத்தமாக்கு, பிறகு பார்’’ என்றார் பாபா.
‘‘ஒரு கேள்வி கேட்கலாமா?’’ என்றான் காசிராம்.
‘‘தாராளமாக!’’
‘‘நீங்களோ மகாயோகி. சாட்சாத் கடவுள். உங்களுடைய மனோதிடம், பலம், திறமை என்ன! நீங்கள் சற்றே புருவம் அசைத்தால் பிச்சைக்காரன்கூட பணக்காரனாவான். பணக்காரன் பிச்சைக்காரன் ஆவான். நீங்கள் ஒரு கற்பாறையைத் தொட்டால்கூட, அது அடுத்த வினாடி தங்கம், வெள்ளியாக மாறிவிடும்! இப்படி இருக்க, நீங்கள் ஏன் நாலு வீட்டிற்குப் போய்த் தட்டை ஏந்தி யாசகம் கேட்கிறீர்கள்?’’
‘‘காசிராம், நீ பெரிய பயில்வான். சொல்கிறேன் கேள். நான் கடவுளின் தொண்டன். கடவுளை ஞாபகப்படுத்தும் ஒரு பைத்தியக்கார பக்கீர். அருமை நண்பர்களே, சும்மா சும்மா என்னைக் கடவுள் ஆக்காதீர்கள். எனக்காகவும் இந்த ஜீவராசிகளுக்காகவும் இரண்டு பருக்கை யாசகம் செய்கிறேன், அவ்வளவுதான்!’’

‘‘அப்படியானால் அதை நாங்களே இங்கு கொண்டு வருவோமே! பாய்ஜாபாய் வேறு தினமும் தங்களுக்கு உணவு கொண்டுவருகிறார்...’’

‘‘ஆமாம். ஆனால் ஒன்றை நினைவில் வை. இப்படி யாசகம் பெறுவதால் எல்லா அகங்காரமும் அகன்றுவிடுகிறது. பக்கீருக்கும் பிச்சைக்காரனுக்கும் என்ன ஆடம்பரம், தற்பெருமை வேண்டியிருக்கு? அங்கே இங்கே போய் வரும் அலைச்சல்தான் கஷ்டம். இஷ்டப்பட்டு உழைத்துச் சாப்பிட்டால், அதன் ருசியே தனி. எல்லா உணவையும் நான் கலந்துவிடுவதால், ருசிக்கு இடமில்லை. யார் நாக்கை அடக்குகிறார்களோ, அவர்கள் வாழ்க்கையை வென்றவர்கள். உலகை வென்றவர்கள்! சோற்றுக்கு ருசி இல்லை என்று என்றாவது நாய் சொன்னதுண்டா? இவையெல்லாம் மனிதர்கள் உண்டாக்கியது. அன்னம் என்பது பரப்பிரம்மம். அதற்குப் பெயர் வைக்கக்கூடாது. அதைக் கொடுக்கும்போதும், பரிமாறும்போதும், அன்புடன், பவித்திரமான மனத்துடன் பரிமாற வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளும்போதும் சுத்த மனத்துடன் இருக்க வேண்டும். அதில் குற்றம், குறைகள் சொல்லக் கூடாது. இது மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஜீவராசிகளுக்கு இது தெரிந்திருக்கிறது. சாப்பாடு போடுவது என்பது ஒரு மங்களகரமான தியாகம். எனவே யாசகம் எடுப்பதும் அந்தத் தத்துவத்தின் ஒரு புனிதமான பாகமாகும்.’’



‘‘என் தெய்வமே! நீ யார் வீட்டிற்குப் போய் யாசகம் கேட்கிறாயோ, அந்த வீட்டில் எல்லா நலன்களும் உண்டாக ஆசீர்வதிக்கிறாய். எனவே, பிச்சை எடுப்பது உன்னுடைய நாடகம். கேட்பது கால்பங்கு ரொட்டிதான். ஆனால், நீ கொடுப்பதோ பூரணமான சுகம். நீ வாங்கிக்கொள்வது கொடுப்பதற்குத்தான்!’’ என்றான் ஷாமா.

‘‘நான் எங்கேப்பா கொடுக்கிறேன்? பூத்துக் குலுங்கும் பழங்கள் கொண்ட மரத்தின் மீது ஒரு கல்லை எறிந்தால்கூட, நான்கு பழங்களைக் கொடுக்கிறது. அது, என்னை விட உன்னதமானது! குரோதம், மோகம், பேராசை, கர்வம் இவையெல்லாம் மனிதனின் விரோதிகள். இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும், மனிதனின் வாழ்க்கை சுகமாக இருக்காது. முடிந்தவரை நாம் இவை எல்லாவற்றிலிருந்தும் விலகி இருப்பதுதான் நலம். சிலர் புகழ் விரும்பியும், சிலர் பணத்தின் பின்னாலும், சிலர் அதிகாரத்தைத் தேடியும் அலைகிறார்கள். இவையெல்லாம் புத்தியை பேதலிக்கச் செய்வன. நாம் எளிமையாக இருக்க வேண்டும். தேவைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏழ்மையில்தான் உண்மையான அரச சுகத்தைக் காணலாம். இதுதான் நிலையானது. பணக்காரனைப் பார்... பணத்தினால் கண நேரத்தில் நாசமடைகிறான். எனவே பணத்தாசை என்கிற மோகம் கூடாது. இதுதான் யாசகத்தின் தாத்பரியம்’’ என்றார் சாயி சிரித்துக்கொண்டே.

சாயிபாபாவின் அருளால் குழந்தைகள் பிறந்ததற்கு நாநா சாகேப் டேங்ளே மிகவும் சந்தோஷப்பட்டார். இதற்கு பிரதியுபகாரமாக பாபாவிற்கு ஏதாவது செய்ய நினைத்தார். கடைசியில் ஒரு கட்டில் செய்து தன் காணிக்கையாகக் கொடுக்கத் தீர்மானித்து, பாபாவைச் சென்று பார்த்தார்.



‘‘பாபா, நீங்கள் இந்த மசூதியில்தானே தூங்குகிறீர்கள்?’’
‘‘ஆமாம்!’’
‘‘எதற்குக் கேட்டேன் என்றால், மசூதியின் சுவரிலிருந்து மண் விழுகிறது. நீங்கள் தூசியிலே தூங்குகிறீர்களே! நான் ஒரு கட்டிலைக் கொணர்ந்து கொடுக்கிறேன். அதன்மேல் படுத்துத் தூங்குங்கள். தூசி, மண் இல்லாமல் தூங்கலாம்!’’
‘‘நாநா, மண் எல்லோருக்கும் சொந்தமானது. இந்த மண்ணிலிருந்துதான் நாம் பிறந்தோம், கடைசியில் அதனுடன்தான் சேரப்போகிறோம். மண் என்றால் மோட்சம். மண் எங்கும் இருக்கும். அது நம் உடம்பில் ஒட்டிக்கொண்டால் உதறிவிடுவது சரியல்ல. மண் நம் தாயின் தாயாகும். தாயின் ஸ்பரிசம் நாற்றமடிக்கிறது என்று சொல்வாயா? எனக்குக் கட்டில், தொட்டில் ஒன்றும் வேண்டாம். இந்த மண் எனக்குப் பிடிக்கிறது. மனிதனைத் தவிர எல்லா ஜீவராசிகளும் மண்ணில்தானே இருக்கின்றன. ஆனால் அவை எப்படி சுத்தமாக இருக்கின்றன! மனிதன் தினமும் குளித்தாலும் நாற்றமடிக்கிறது. மண்ணுடன் சிநேகம் கொண்டாடுங்கள், அதன் மேல் அன்பு வையுங்கள். அதன் மகத்துவத்தையும் பவித்திரத் தன்மையையும் உணருங்கள். அப்படி இருந்தால், உங்கள் வாழ்க்கை ஒளிகொண்டதாக இருக்கும்!’’

‘‘ஆனால் உங்களுக்கு நான் கைமாறு ஏதாவது செய்ய வேண்டாமா? இந்த விஷயத்தில் நீங்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை. என் பிடிவாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்!’’
‘‘சரிப்பா, கட்டிலைக் கொண்டா. இவ்வளவு கண்டிப்புடன் நீ சொல்லும்போது, நான் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் எப்படி?’’
‘‘ரொம்ப நன்றி பாபா!’’
நாநா மறுநாள் கட்டிலுடன் துவாரகமாயிக்கு வந்தான்.
‘‘பாபா, கட்டிலைக் கொண்டு வந்திருக்கிறேன்...’’
‘‘நன்றாக இருக்கிறது. எடுத்து உள்ளே வை!’’
‘‘இன்று முதல் நீங்கள் இதன் மீதுதான் படுக்கவேண்டும்!’’
பாபா கட்டிலையே பார்த்துக்கொண்டிருந்தார். மதியம் கிழிந்த துணிகளைக் கட்டிலின் நாலு பக்கமும் முடிச்சுப் போட்டு, இன்னும் சிலரின் உதவியோடு மசூதியின் நடுவில் கட்டிலைக் கட்டித் தொங்கவிட்டார்.

‘‘பாபா’’ என்றார் மகல்சாபதி.
‘‘என்ன மகல்சாபதி?’’
“இந்தக் கட்டில் நல்ல கனமாக இருக்கிறது. கிழிந்த துணியால் கட்டித் தொங்கவிட்டிருக்கிறீர்களே, அது கனம் தாங்காமல் அறுந்து கீழே விழுந்துவிடுமே!’’
‘‘ஒண்ணும் ஆகாது. உனக்குக் கிழிசல்களின் மகத்துவம் தெரியாது. அடேய், இப்படிக் கிழிந்த ஆடைகளினாலேதானே கிருஷ்ணர் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார். இந்தக் கிழிசல்கள், கிருஷ்ணர் கொடுத்த மிச்சம் மீதித் துணிகள். அவை நல்ல கெட்டி. கிழியாது!’’ - பாபா சிரித்தார். அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்.
‘‘பாபா?’’

‘‘என்ன ஷாமா?’’
‘‘இவ்வளவு உயரத்தில் கட்டிலைக் கட்டியிருக்கிறீர்களே, இதில் நீங்கள் தூங்கவில்லையா?’’
‘‘இதில்தான் தூங்குவேன்...’’
‘‘எப்படி இவ்வளவு உயரத்தில் ஏறுவீர்கள்?’’
‘‘எப்படி என்பதை மேலேயிருக்கும் அல்லா சொல்வார். அந்தக் கவலை அவருக்கு. அதைப் பற்றி நாம் நினைக்க வேண்டாம்!’’
‘‘பாபா, நீங்கள் ஒரு புதிர். எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் கிளம்புகிறேன்’’ என்று ஷாமா பாபாவை வணங்கிச் சென்றான்.
இரவு எல்லோரும் மசூதிக்கு வந்து ஆச்சரியப்பட்டார்கள். பாபா கட்டிலில் படுத்திருந்தார். கட்டிலின் நாலு பக்கத்திலும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அக்காட்சி கனவில் பார்ப்பது போல இருந்தது. பாபா எப்படி ஏறிப்போனார்? எப்படி மெழுகுவர்த்தி விழாமல் இருக்கிறது? பாபா ஏதோ அற்புதம் செய்திருக்கிறார் என்று நினைத்த மகல்சாபதி மவுனமானார்.
மற்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
‘‘பாபா என்றால் அற்புதம் நிகழ்த்துபவர்!’’
‘‘ஆமாம்’’
‘‘நான் சொல்கிறேன், இந்தக் கிழிசல்கள் அறுந்து, கட்டில் நிச்சயமாகக் கீழே விழும்.’’
‘‘அப்படியெல்லாம் அறுந்து விழாது. டேய், நம்மைப் போன்ற சாமானியர்களுடன் பாபாவை ஒப்பிடாதே! அவர் கடவுள்... சாட்சாத் கடவுள்’’ - இன்னொருவன் பாபாவைப் பார்த்துக் கை கூப்பிச் சொன்னான்.
அவன் சொன்னதை எல்லோரும் ஆமோதித்தார்கள். இரவு பாபா மேலே தூங்கினார். கீழே மகல்சாபதி மற்றும் தாத்யா தூங்கினார்கள், காலையில் எப்படி இறங்குகிறார் என்பதைப் பார்க்கும் ஆவலுடன்! ஆனால் காலையில் பாபா அவர்களை எழுப்பினார்.

‘‘எழுந்திருங்கப்பா... விடிந்துவிட்டது!’’
அன்றைய இரவு பாபா கட்டிலின்மேல் எப்படி ஏறுகிறார் என்பதைக் காண ஆவலுடன் நின்றிருந்தார்கள். ஆனால், பாபா மேலே ஏறினார். கீழேயும் இறங்கினார். கட்டிலும் அறுந்து விழவில்லை. மெழுகு வர்த்தியும் காலை வரை எரிந்தது. மேலும், பாபா கட்டிலின் மீது மேலே ஏறினாலும் இறங்கினாலும் அவர்களின் கண்களுக்குத் தெரியமாட்டார்.
இந்தச் செய்கை எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. தூரத்து ஊர்களில் இருந்தெல்லாம் இந்த அற்புதத்தைக் காண மக்கள் வந்தார்கள். கடைசியில் பாபா கேட்டார். ‘‘மகல்சாபதி, எங்கெங்கிருந்தோ மக்கள் வருகிறார்கள். இரவு முழுக்க தூங்காமலும் இருக்கிறார்கள்...’’
‘‘ஆமாம். நீங்கள் கட்டிலின் மேல் ஏறுவதையும் இறங்குவதையும் காண ஆவலாக இருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் தெரியவில்லை. பகலிரவு நான் உங்கள் அருகிலேயே இருக்கிறேன். ஆனால், எனக்கே தெரியவில்லை, மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?’’
‘‘மகல்சாபதி, நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன்...’’
‘‘என்ன பாபா?’’

‘‘இனி நான் கட்டிலில் தூங்கப்போவதில்லை. என்னால் இந்த மக்களுக்குக் கஷ்டம். வெறுமனே இரவு முழுக்க விழித்திருக்கிறார்கள். அவர்கள் அவஸ்தைப்படுவதால் நீயும் சரியாகத் தூங்குவதில்லை. போதும் இந்த விளையாட்டு!’’
பாபா அமைதியாக கட்டிலை விட்டுக் கீழே இறங்கினார்.
(தொடரும்...)