ராஜா ராணி





திருமணம் முடிந்த பின் ஈகோவும், வெறுப்பும் கொண்டு உரசிக்கொள்ளும் ஆர்யா - நயன்தாராவின் முன்கதைச் சுருக்கம்தான் இந்த ‘ராஜா ராணி’!
பார்த்து, கேட்டு, பழகிய கதை என்றாலும் சின்னச்சின்ன கலகல வசனங்களால் படத்தை ரசிக்க வைத்ததில் ரொம்பவும் கெட்டி இந்த அட்லி! புது வாழ்க்கையில் சேரும் ஜோடிப் புறாக்கள் பழையதை மறந்தார்களா, புது வாழ்க்கையில் புகுந்தார்களா என்பது மீதி!

காதலில் தோல்வி அடைந்த ஆர்யாவும், நயன்தாராவும் புது வாழ்க்கையை மோதலில் தொடங்குவது நல்ல விறுவிறுப்பு. ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுங்கும்போது, ஆர்யாவுக்கு கிடைக்கும் நயன்தாராவின் ஃப்ளாஷ்பேக்கில் ஆரம்பிக்கிறது கதை.

இரண்டே இரண்டு ஜோடிகளை வைத்துக்கொண்டு ராஜ ஆட்டம் ஆடியிருக்கிறார் அட்லி. ஜெய் - நயன்தாரா காம்பினேஷன், வெடிச்சிரிப்பில் ஆரம்பித்து கண்ணீரில் முடிகிறது. ஜெய் தோற்றத்தில் நயன்தாராவுக்கு தம்பி மாதிரி இருந்தாலும், காலேஜ், ஆபீஸ் என எல்லா இடத்திலும் திட்டித் தொடரும் காதல், எல்லாவற்றையும் மறக்கடிக்கிறது. கஸ்டமர் கேர் வேலையும், அது தொடர்பான காமெடியும் தமிழுக்கு புது அயிட்டம். நயன்தாரா ஆபீஸுக்கே வந்து திட்டுவதும், அதைத் தாங்க முடியாமல் ஜெய் அழுது தவிப்பதும் படத்தின் ரசனை அத்தியாயங்கள். படம் முழுக்கவே ஜெய் செம க்யூட்!
கலகல கூட்டணிக்கு ஜெய் - சத்யன், ஆர்யா - சந்தானம். படம் முழுக்க சிரிப்பு மேளாவை தலைமையேற்று நடத்துகிறார் சந்தானம். என்ன... அப்பப்போ ‘ஏ’ ஜோக்குகளும் எட்டிப் பார்ப்பதை வெட்டியிருக்கலாம்.

ஆர்யாவும், நயன்தாராவும் படத்தில் வெறுப்பில் இருந்தாலும் நமக்கென்னவோ விருப்பில் இருப்பது மாதிரிதான் தெரிகிறது. ஆர்யாவை இனியும் அடிக்கடி பாலா பக்கம் அனுப்பி டிரில் வாங்கணும்போல. பல வேளைகளில் சோகம் காட்டாமல் ‘சும்மா’ நிற்கிறார். இவ்வளவு நாள் நடிப்பு பழகி, சிரிப்பு தவிர இன்னும் சீரியஸ் கற்றுக்கொண்டிருக்கலாம்! நயன்தாரா அடிக்கடி சொல்கிற ‘பொத்திக்கிட்டு போ’... அடப்பாவிகளா, அதையும் நல்ல வார்த்தையா புழக்கத்தில் விட்டுட்டீங்களா?

நயன் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கிறார். திருமணத்துக்காக பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்து ஏமாந்து திரும்ப, அப்பாவின் காரில் உட்கார்ந்து அவர் துடித்து வெடித்து அழுவது அக்மார்க் நடிப்பு. ‘இனிமே நடிப்புதான்’ என அவர் வாளைச் சுழற்றியிருப்பது கண்கூடு. என்னதான் சொல்லுங்க... ஆர்யாவும் நயன்தாராவும் செம ஜோடி!
இளைஞர்களுக்கு பிடிக்கிற நஸ்ரியா அறிமுகமாகும் ‘பின்னணி’ பாடல் காட்சி படு சலசலப்பு... கலகலப்பு. ‘‘பிரதர்’’ எனக் கூப்பிட்டு எக்ஸ்பிரஷன் தருவதும், ஆர்யாவைக் கலாய்த்து கதற விடுவதும் நல்ல காமெடி கெமிஸ்ட்ரி! மகள் பீர் வாங்கிக் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்கிற அளவுக்கு செல்ல அப்பா சத்யராஜ். எப்படியெல்லாம் வெரைட்டி காட்டுறாங்க!
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் இனிக்கின்றன. படுக்கையறையும், பாத்ரூமும் மட்டுமே இருக்கிற ஆர்யாவின் பெரிய வீட்டிலும் சரி, நஸ்ரியா வீட்டிலும் சரி... கேமரா துள்ளி விளையாடுகிறது. பாடல்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.
‘ஒரே காதல் ஊரில் இல்லையடா’ என முழங்கும் ‘ராஜாராணி’ ஆட்டம் ஜாலி!
- குங்குமம் விமர்சனக் குழு