ஓவி... எனக்கொரு டவுட்டு!





மோடியின் ‘குர்தா ரகசியம்’ பற்றிய தகவல்கள் அவர் இமேஜை இன்னும் உயர்த்திவிட்டன. மோடி பிரதமரானால் நிச்சயம் குர்தா தயாரிப்பாளர்களுக்கு ‘செம ஜாக்பாட்’தாங்க!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

பார்வையற்றவர்களைத் தாக்கிப் பந்தாடிய சம்பவம் நெஞ்சை உலுக்கியது. பார்வையற்றோர் என்ற கருணை கூட இல்லாத காவல்துறைக்குத்தான் பார்வை இல்லை என்று எண்ணத் தோன்றியது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

வட்டியில்லா தவணைக்கு தடை வரவேற்கத்தக்கது. ‘தவணை முறைதானே’ என்று சக்திக்கு மீறி வாங்கிக் குவிக்கும் மக்களுக்கு இது தற்காலிக ஏமாற்றம் தந்தாலும், நெடுங்கால நிம்மதியைத் தரும்!
- பி.ஜெ.மஞ்சுளா, மானம்புச்சாவடி.

கிரிக்கெட், நீச்சல் வீராங்கனையாகத் திகழ்ந்த பிரீத்தி ஸ்ரீநிவாசனை ஒரே நிமிடத்தில் முடக்கிப் போட்ட கடல் அலையைப் பார்த்து, ‘உனக்கு இரக்கமே இல்லையா?’ என்று கேட்கத் தோன்றுகிறது. அவர் கலங்காமல் தன்னைப் போல தண்டுவட பாதிப்பால் முடங்கியவர்களுக்கு சேவை செய்வது பிரமிப்பு.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

அமலாபாலின் பேட்டி, பால் போல சுத்தம்! அதுவும், ‘கிராஸ் பண்ணும் காதல் எல்லாமே கல்யாணத்தில் முடிந்தும் விடாது...’ என்று அவர் சொன்னது... ஆகா! எந்தா வல்லிய தத்துவம்!
- அ.சுகுமார், காட்பாடி.

ஓவியா, ‘மொக்கை’, ‘சப்பை’ போன்ற ‘இலக்கியத்தரமான’ தமிழ் வார்த்தைகளைப் பேசுகிறாரா? ஓவி, எனக்கொரு டவுட்டு... உங்களைப் பார்த்து யாரும் இந்த வார்த்தைகளைப் பேசவே முடியாது. அதனால்தான் நீங்களே பேசிடறீங்களோ?
- எஸ்.சந்தோஷ்குமார், கோயமுத்தூர்.

போட்டோ எடுத்த அந்த நொடியில் தான் கண் மூடியிருந்ததை எம்.ஜி.ஆர் சரியாகக் கணித்து இன்னொரு போட்டோ எடுக்கச் சொன்னது, வாத்தியாரின் தொழில்நுட்ப அறிவுக்கு இன்னொரு சான்று!
- டி.வி.மேகலாகோபாலன், கும்பகோணம்.

நம்ம இமான் அண்ணாச்சிகிட்ட மாட்டிக்கிட்டு, இங்கிலீஷ் பட்ட பாடு செம கலகலப்பு. என்ன... அவர் வரைஞ்ச கவுன் போட்ட ‘இங்கிலீஷ் தாய்’ படத்தையும் போட்டிருந்தீங்கன்னா, நாங்களும் பக்தியா கும்பிட்டிருப்போம்!
- பி.கே.ராஜகோபாலன், சென்னை-61.

‘தமிழ் சினிமா பாட்டு ஆறு வகைப்படும்’ என்று கூறு போட்டு விளக்கிய ஆல்தோட்ட பூபதிக்கு ‘இலக்கிய வேந்தர்’ என்னும் பட்டமளித்து கௌரவிக்கிறோம்!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

கவுண்டமணியோடு காமெடியில் கலக்க சத்யராஜ் துடிப்பது போல், துடித்துக் கொண்டுதான் இருக்கிறோம், அந்த காமெடிக் கூட்டணியைக் கண்டுகளிக்க!
- கன்யாரி, நாகர்கோவில்.
அட்டையில்: லட்சுமி ராய்

ஸ்பெஷல் படம்: ஜி.வெங்கட்ராம்