நான் தேடும் காதலன்!





‘கௌரவம்’ படத்தில் கண்ணியமான அறிமுகம்; இந்தியில் விருதுகளைக் குவித்த ‘விக்கி டோனர்’ படத்தின் ஹீரோயினாகக் கிடைத்த பரபர வரவேற்பு என எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை யாமி கௌதம். வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டு ‘அடுத்த நம்பர் ஒன் ஹீரோயின் நான்தான்’ என பேட்டி கொடுக்கவில்லை. பேரமைதி தவழ்கிறது அவர் அழகு முகத்தில்...

ஏன்... ஏன்... ஏன்..?
வாழ்க்கையில எல்லாம் திடீர் திடீர்னு நடக்கறது எனக்குப் பிடிக்காது. தெளிந்த நீரோடை போல நடந்து போக ஆசைப்படறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒருவிதமான பயணம் பிடிக்கும். எனக்கு என் பாதை பற்றின தெளிவு இருக்கு. நம்பர் ஒன் ஆகணும்ங்கறதுக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள நான் விரும்பல. நெருக்கமான காட்சிகள், பிகினி ஆடைகள்னு எல்லாத்துக்கும் ‘நோ’ சொல்ற பக்குவம் எனக்கு இருக்கு. எவ்வளவு பெரிய நிறுவனம் என்றாலும், முன்னணி ஹீரோவுக்கு ஜோடி என்றாலும், எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், என் பதில் இதுதான்!



அடுத்த படம்?
பிரபுதேவா டைரக்ஷன்ல அஜய் தேவ்கன் ஜோடியா நடிக்கறேன். சின்ன வயசுல இருந்து, அவரோட டான்ஸ்களைப் பார்த்து அது மாதிரி ஆடிப் பார்த்து வளர்ந்த சிறுமிகள்ல நானும் ஒருத்தி. அவரோட வெறித்தனமான ஃபேன். இப்ப அவர் டைரக்ஷன்ல நடிக்கறேன். நிறைவா இருக்கு. அவர் ரொம்ப சிம்பிளான மனிதர். எனக்கு டான்ஸ் அவ்வளவா வராது. ஆடறதுக்கும் கூச்சப்படுவேன். தயக்கத்தைவிட்டு என்னை டான்ஸ் ஆட வைப்பார்னு நம்பறேன்.

ரோல் மாடல்?
என் ரசிகர்கள் என்னை வித்யா பாலனோட ஒப்பிடறாங்க. அவரை மாதிரியே நானும் சினிமா பின்னணி இல்லாம வந்தவ. நடிக்கணும்னு நினைச்சதில்ல. திடீர்னு ஒரு குடும்ப நண்பரால டி.வி வாய்ப்பு வந்தது. அப்படியே சினிமாவுக்கு வந்தேன். வித்யாவுக்கும் இப்படித்தான் ஆச்சு! நான் ரொம்ப கூச்ச சுபாவம். ரெண்டு மணி நேரம் ஒருத்தரோட, ஒரு வார்த்தைகூட பேசாம பக்கத்துல உட்கார்ந்திருக்கற அளவுக்கு ரிசர்வ்டு டைப். நான் சட்டம் படிக்க சேர்ந்தபோது, ‘இவளுக்கு எதுக்கு இது’ன்னு எல்லோரும் ஆச்சரியப்பட்டாங்க...

காதல்?
ஸாரி! எனக்கு இப்போ காதலிக்க நேரமில்லை. சென்னை, மும்பை, ஐதராபாத்னு கால்ல சக்கரம் கட்டிக்கிட்டு சுத்தறேன். கண்ணெதிர்ல நிறைய பேர் காதலிச்சு கசப்போட பிரியறதைப் பார்த்துப் பார்த்து எனக்கு ஒரு ஆர்வமே இல்லாமப் போயிடுச்சு. சினிமாவுல காட்டற மாதிரி கண்மூடித்தனமான காதல்ல எனக்கு நம்பிக்கை இல்லை. சொல்லப்போனா நான் காதலிக்க ரெடியா இல்ல!

ஆனா எனக்குள்ள அந்த உணர்வு எப்போது பூக்கும்னு சொல்ல முடியாது. எனக்கான ஒரு ஆளை சந்திக்கும்போது எல்லாமே மாறிப் போகலாம். கண்ணியமான, சுயமரியாதை உள்ள ஒரு ஆணை நான் தேடறேன். என்னையும் அவன் மதிக்கணும். நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கணும். இன்னும் பட்டியல் பெரிசு! இதையெல்லாம் சொன்னா என் தோழிகள், ‘நீ தேடற மாதிரி ரோபோ வேணா கிடைக்கலாம்; மனுஷங்க கிடைக்க மாட்டாங்க’ன்னு கிண்டல் பண்றாங்க. பார்க்கலாம்!
- ரெமோ