குழந்தைகளை காவு கேட்காத போர்வெல் குழிகள் எப்போது தோண்டுவோம்?





ஆழ்குழாய்க் கிணறுகளில் தண்ணீர் வருகிறதோ, இல்லையோ... மரணம் உடனே வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பலி கொடுத்தாகிவிட்டது. அண்மையில் ஆரணியில் இறந்த தேவியையும் சேர்த்து தமிழகத்தில் 6 குழந்தைகள். போர்வெல் குழிகளில் விழுந்து குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பொதுவாகவே குழந்தைகளைப் பறிகொடுக்கும் துயரம் உச்சமானது. அதிலும் 20 அடி ஆழக் குழிக்குள் தாகத்துக்கு தண்ணீரும், மூச்சுவிட காற்றும் இன்றி அணு அணுவாக இறப்பது உச்சபட்ச மரண ரணம். அதைவிடவும் கொடூரம், கண்ணுக்கெட்டிய தூரத்தில் நின்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் பெற்றோரின் ரணம்...
‘‘தனி மனித மெத்தனமும், குழந்தைகள் மீதான அலட்சியமுமே இந்த அவலத்துக்குக் காரணம்’’ என்று குமுறுகிறார்கள் குழந்தை உரிமை செயற்பாட்டாளர்கள்.

‘‘ஒரு சம்பவம் நடக்கும்போது பதற்றப்படுவதும், வேதனையில் பொங்குவதும், பிறகு மறந்துவிடுவதும் நமக்கு வாடிக்கையாகி விட்டது. இப்படிப் பேசிப் பேசியே எத்தனை விஷயங்களை தினம் தினம் மறக்கிறோம்! குழந்தைகள் மீது நாம் காட்டுகிற அலட்சியத்தின் வெளிப்பாடாகவே இதைப் பார்க்க வேண்டும். குடும்பம், பள்ளி, சமூகம்... இந்த எல்லா இடங்களிலுமே குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் கண்டும் காணாமலும் சென்று கொண்டிருக்கிறோம். மிகச்சிறிய ஒரு குழி... அதை சற்று கனமாக மூடிவிட்டால் பிரச்னையே இல்லை. அதற்கு பெரிய செலவும் இல்லை. ஆனாலும், அதைக்கூட சரிவர நிர்வகிக்க முடியவில்லை. இந்த அலட்சியத்துக்கு யார் பொறுப்பு? இதுபோன்ற சம்பவங்களில் எத்தனை பேருக்கு இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது? குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோருக்கு என்ன நிவாரணம் தரப்பட்டுள்ளது? எந்த நிவாரணம் குழந்தைக்கு ஈடாக இருக்கும்..? பல்வேறு விதங்களில் நாம் குழந்தைகளைப் பறிகொடுத்துக் கொண்டே இருக்கிறோம். நமக்கு நேரும்வரை இழப்பின் வலி தெரிவதில்லை.



குழந்தைகளைப் பற்றி நிறைய கொள்கைகளும் சட்டங்களும் இங்கே உண்டு. ஆனால் எதுவும் செயலிலோ, கண்காணிப்பிலோ இல்லை. தேசிய குழந்தைகளுக்கான கொள்கை, ‘குழந்தைகள் நாட்டின் சொத்து’ என்கிறது. சிறார் நீதிச்சட்டம்-2000, ‘குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கும், பராமரிப்புக்கும் அரசே பொறுப்பு’ என்கிறது. ஆனால் மிகச்சுலபமாக சரி செய்யக்கூடிய ஒன்றை செய்யாமல் வரிசையாக குழந்தைகளை இழந்து கொண்டிருக்கிறோம். இருபதடி குழிக்குள் சிக்கிக்கொண்ட ஒரு குழந்தையின் தவிப்பைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசு உடனடியாக இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்’’ என்கிறார் குழந்தை உரிமை செயற்பாட்டாளர் ஜிம் ஜேசுதாஸ்.

அந்தக்காலத்தில் 20 அடி, 30 அடிக்கு போர் போட்டாலே தண்ணீர் கிடைத்து விடும். இப்போது 700-800 அடி தோண்ட வேண்டியுள்ளது. போர் போட்டு குழாய்களை இறக்கிக் கொடுப்பதோடு போர்வெல் கம்பெனியின் வேலை முடிந்து விடுகிறது. மேலே உள்ள துவாரம் 7 முதல் 8 இஞ்ச் அகலத்துக்கு இருக்கும். 25 அடிக்கு மேல் படிப்படியாக விட்டத்தின் அளவு குறைந்து விடும். போர் போடும் பணி முடிந்ததும், உள்ளே மண் சரியாமல் இருக்க ஒரு சாக்கை கட்டி மூடி வைத்துவிடுகிறார்கள். ஓரளவுக்கு விபரம் தெரிந்த பிள்ளைகள் நகர்ந்து சென்று விடுவார்கள். அறியாத குழந்தைகள் அதில் அமரவோ, ஏறி நிற்கவோ முயற்சிக்கும்போது உள்ளே விழுந்து விடுகிறார்கள். பயமும், பதற்றமும் சூழத் தவிக்கும் அக்குழந்தைகள் 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் மீட்பு நடவடிக்கை தொடங்கவே 1 மணி நேரமாகி விடுகிறது. நேரடியாகக் குழந்தையை மீட்க உரிய எந்த இயந்திரமும் நம்மிடம் இல்லை. எனவே குழந்தைகளை உயிரோடு மீட்பதற்கான வாய்ப்புகள் குறுகி விடுகின்றன.



‘‘தனிப்பட்ட தேவைக்காக சொந்த இடத்தில் போர் போட யாரிடமும் அனுமதி வாங்கத்தேவையில்லை. வணிக நோக்கத்துக்காக போட்டால் மட்டுமே உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும். அதனால் போர்வெல் குழிகளைக் கண்காணிப்பதில் பிரச்னைகள் உள்ளன. பயன்படுத்தி ஓய்ந்த குழிகள், போட்டும் தண்ணீர் வராத குழிகளை அதன் உரிமையாளர்கள் அப்படியே விட்டு விடுகிறார்கள். இந்த குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க நிரந்தரமான கருவிகள் இல்லை என்பது உண்மைதான். உருவாக்கப்பட்ட கருவிகளும் பயனளிக்கவில்லை. பெரும்பாலும், அந்த போர்வெல் குழிக்குப் பக்கத்தில் இன்னொரு பள்ளம் தோண்டியே மீட்க வேண்டியுள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்குப் போகவே 1 மணி நேரத்துக்கு மேலாகி விடுகிறது. ஜே.சி.பி போன்ற பெரிய இயந்திரங்களை வைத்தே பள்ளம் தோண்ட வேண்டியுள்ளது. தோண்டும்போது குழிக்குள் மண் சரிந்துவிட்டால் மேலும் ஆபத்து. அதற்கு முன்பு மண்ணின் தரத்தைப் பரிசோதிக்க வேண்டும். இடையில் பாறைகள் மாட்டினால் மேலும் காலதாமதமாகும். இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது ஒன்றுதான் இதற்கு தீர்வு. போர்வெல் போடும் கம்பெனிகளையே இதற்கு பொறுப்பாக்க வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகளின் உயிரைப் பறிப்பது தனி நபர்களின் அலட்சியம்தான்’’ என்கிறார் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குனர் விஜயசேகர்.



‘குழந்தையும் கடவுளும் ஒன்று’ என்று போற்றுகிற சமூகத்தில்தான் குழந்தைகள் இப்படி பலி கொடுக்கப்படுகிறார்கள். குழந்தைகள் தனிப்பட்ட சொத்தல்ல... நாட்டின் எதிர்காலம். குழந்தைகள் மீதான அலட்சியத்தை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
- வெ.நீலகண்டன்

என்ன செய்ய வேண்டும்..?
*  ஒவ்வொரு பகுதியிலும் பயன்பாட்டில் உள்ள, பயன்படுத்தப்படாத கிணறுகள் பற்றி கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மூலம் பட்டியல் தயாரிக்க வேண்டும்.

*  பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், பாதியில் கைவிடப்படும் கிணறுகளை அதன் உரிமையாளர்கள் மூலம் முழுமையாக மூடச்செய்ய வேண்டும். தவறும் உரிமையாளர்களுக்கு பெரிய தொகையை அபராதமாக விதிக்க வேண்டும். அந்தக் கிணறுகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டால் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

*  மாவட்ட அளவில் நடக்கும் மக்கள் குறைதீர் முகாம்கள், விவசாயிகள் கூட்டத்தில் இதுபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

*  இதுபோன்ற அசம்பாவிதங்களில் சிக்கும் குழந்தைகளை மீட்க எப்போதும் தயார்நிலையில் இருக்குமாறு தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும். நவீன கருவிகளைக் கண்டறிய வேண்டும்.

*  போர்வெல் குழிகளை கான்க்ரீட் மூடிகள் போட்டு மூடவேண்டும்.

மீட்கும் இயந்திரம்!
போர்வெல் குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்கும் இலகுவான இயந்திரம் ஒன்றை பெருந்துறை கொங்கு எஞ்சினியரிங் கல்லூரி மெக்கட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த விஜய், கார்த்திகேயன், விவேக் உள்ளிட்ட மாணவர் குழு கண்டறிந்துள்ளது. கிரிப்பருடன் கூடிய பெரிய கம்பியைக் கொண்ட இந்த இயந்திரத்தை வெகு எளிதாக இயக்க முடியும். குழியின் நடுவில் வைத்து ஸ்க்ரூ திரெட்டை இயக்கினால், இரண்டு கிரிப்பர்கள் கொண்ட  நீண்ட கம்பி உள்ளே இறங்குகிறது. அதில் இணைக்கப்பட்டுள்ள கேமராவின் துணையோடு கிரிப்பர் மூலம் குழந்தையைப் பிடித்து மேலே தூக்கிவிடமுடியும். இயந்திரமே குழந்தைக்கு ஆக்சிஜனையும் வழங்குகிறது. ‘‘இந்த இயந்திரத்தை மேலும் மேம்படுத்தினால் உயிரிழப்புகளே நேராமல் தடுக்க முடியும்’’ என்கிறார்கள் பேராசிரியர்கள்.