வேலைக்குப் போகாதீர்கள்! உங்களைத் தேடி வேலை வரும்





வேலையை விட கவலையே நிறைய பேரைக் கொல்கிறது. காரணம், இந்த உலகில் வேலை செய்பவர்களைவிட கவலை கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகம்!
- ராபர்ட் ஃப்ரோஸ்ட்

ஒரு பேச்சுக்கு உங்களது வீட்டில் உங்களது திட்டப் படியே எல்லாம் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதாவது, தூங்கி எழுந்து, குறித்த நேரத்தில் சாப்பிட்டு, மதிய உணவுடன் பணி இடத்திற்கு கிளம்பி விட்டீர்கள்.

ஆனால், சாலையில் நீங்கள் காலடி எடுத்து வைத்த பிறகும் உங்கள் திட்டப்படியே எல்லாம் நடக்குமா?
நீங்கள் ஒழுங்காகத்தான் நடப்பீர்கள்... வாகனத்தில் செல்வீர்கள். ஆனால், வானத்தில் இருந்து ஒரு பறவை உங்கள் தலையில் எச்சமிடுகிறது. ஒரு வாகனக்காரன் உங்கள் மீது சேற்றை வாரி இறைத்து விட்டுப் போகிறான். நீங்கள் பாதிப்பு அடைவீர்கள்.

எதிரில் வரும் வாகனக்காரன் தனது முட்டாள்தனத்தால் ஒரு நொடி தவறு செய்தால் கூடப் போதும்... போக்குவரத்தே ஸ்தம்பித்துப்போகும். இது உங்கள் கண் எதிரே நடக்க வேண்டும் என்றுகூட அவசியமில்லை. எங்கோ நடந்து, அதனால் டிராஃபிக் ஜாம் ஆகி, அதன் பாதிப்பு நீங்கள் நிற்கிற இடம் வரை வந்து விடலாம். இதையெல்லாம் எப்படி உங்களால் தடுக்க முடியும்?
வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை!

சரி, பணிக்கு வந்து விட்டீர்கள். அன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேலையை முடித்துக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால், அதைச் செய்ய சில விவரங்களைத் தர வேண்டிய ஒரு குப்புசாமியோ, முத்தம்மாளோ வேலைக்கே வரவில்லை. நீங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால், அந்தப் பணியைச் செய்யாததற்காக உங்களைக் கரித்துக் கொட்டுகிறார்கள். ஒரு குப்புசாமியை அன்றைக்கு வேலைக்கு வரச் செய்ய உங்களால் எப்படி முடியும்?

ஆக, வெளியுலகம் உங்கள் கட்டுப்பாட்டில் நிச்சயமாக இல்லை! உங்கள் விருப்பத்திற்கும், தேவைக்கும் ஏற்ப உலகம் சுற்றாது என்பதற்கான எளிய உதாரணங்கள் இதெல்லாம்!

ஆனால், அவற்றால் நிகழும் பாதிப்புகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். வேலைக்கு வர தாமதம் ஆனதற்கு டிராஃபிக் ஜாம், வேலையை முடிக்காமல் போனதற்கு குப்புசாமியே பொறுப்பு... போன்ற காரணங்கள் சாக்குப்போக்குகளாகத்தான் கருதப்படும். இவை உண்மையாக இருப்பினும் முதிர்ச்சியான பதில்கள் அல்ல. இது ஒருபுறம் இருக்கட்டும்!

இவ்வகையான புற பாதிப்புகள் ஏற்படும்போது, அவற்றினால் உங்களுக்குள் நிகழும் அகம் சார்ந்த பாதிப்புகளை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?



அதாவது, மேலே சொல்லப்பட்ட எதிர்பாராத - நீங்கள் பொறுப்பு ஏற்க இயலாத - உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சம்பவங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் மனோபலத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.     

போக்குவரத்து நெரிசலால் கவலைப்பட்டு, ‘ஏன் இங்கு யாருக்கும் பொறுப்பு இல்லாமல் போய் விட்டது..? என் கையில் மட்டும் இதுக்குக் காரணமானவன் கிடைச்சான்னா...’ என்று நீங்கள் டென்ஷன் ஆகத் துவங்கினால், அதனால் ஏற்படும் நோய்களால் பாதிப்பு அடையப் போவது யார்? வேலைக்கு நீண்ட தூரம் பயணிக்கிறீர்கள். அதைத் தாங்கும் அளவு உங்கள் உடல்நிலை இல்லை என்றால் அதன் பாதிப்புகளை எதிர்கொள்ளப் போவது யார்?

இப்படி நிகழ்ந்தால், உங்களால் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் போகும். ஒரு உடல் சார்ந்த பிரச்னை, இன்னும் பல உடல் சார்ந்த பிரச்னைகளைக் கொண்டு வந்தே தீரும். நோயாளிகளை மருத்துவ உலகம் வேண்டுமானால் அன்போடு வரவேற்கலாமே தவிர, பணி உலகம் பிணியாளர்களை சில நாட்களுக்கு மேல் சகிக்காது. தேவையற்ற சுமைகளை யார்தான் விரும்புவார்கள்?

நாம் வாய் கிழியப் பேசலாம்... இதை விட்டால், ஆயிரம் வேலை காத்திருக்கிறது என்றெல்லாம். ஆனால், ஒரு பணியிடத்தை நிரப்ப ஆட்கள் வரிசையில் நிற்கிறார்கள். நீங்கள் ஒரு முறை உங்கள் இடத்தை நழுவ விட்டீர்கள் என்றால், அதை மீண்டும் பிடிப்பது சிரமம் என்பதே உண்மை.

நாம் சினிமாக்காரர்களைப் பார்த்து, எதை எதையோ காப்பி அடிக்கிறோம். அவர்கள் தங்கள் கட்டான உடலுக்காக என்னென்ன செய்கிறார்கள், உணவை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் காப்பி அடியுங்கள்.

தவறான நேரத்தில் தவறான உணவை எடுத்துக்கொள்ளாதீர்கள். நாக்கு கண்டபடி உணவைக் கேட்கிறபோது, உள்ளிருந்து ‘வேண்டாம்! தேவை இல்லை..’ என்றொரு குரல் கேட்கும். உடலின் மொழியைப் புரிந்துகொள்ளுங்கள். ‘உங்கள் நண்பரைக் கெடுக்க விரும்பினால் நொறுக்குத்தீனி கொடுங்கள்’ என்று ஒரு பழமொழி உண்டு.   (If you want to spoil your friend, give him food between the meals!)  நீங்கள் சொன்னால் கேட்கிற மாதிரி உங்கள் உடலை வைத்திருங்கள். உங்களது ஆரோக்கியமான உடல் உங்களுக்கு எப்படி எல்லாம் உற்சாகம் தரும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்.



இதே போல் உங்களை ஒருவர் திட்டுகிறார், விமர்சிக்கிறார் என்றால், அவ்வளவு சுலபத்தில் வீழ்ந்து விடாத அளவு உங்கள் மனதிற்கு சக்தி இருக்க வேண்டும். அடுத்தவரின் கடுஞ்சொற்களால் காயம் அடையும் அளவு பலவீனமாக இருந்தால், பணி இடத்தில் தாக்குப் பிடிப்பது கஷ்டம். அந்தத் திட்டுகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரத்தில் தகுந்த பதிலை புள்ளிவிவரங்களுடன் பதற்றப்படாமல் உறுதியாகக் கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு எப்பேர்ப்பட்ட உடல், மன உறுதிகள் தேவை! சரி, பதிலடியை விடுங்கள்... அடுத்தவரின் அநியாய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், எளிதாக எடுத்துக்கொள்ளும் அளவு நீங்கள் இருக்க வேண்டும் என்றால் அதற்கு எப்பேர்ப்பட்ட மனமுதிர்ச்சி தேவை..!

பணிக்கு வருவதிலிருந்து, வீடு திரும்பும் வரை நீங்கள்தான் உங்களை உற்சாகமாக வைத்திருக்க வேண்டும். எதன் பொருட்டாவது உங்களது ‘டெம்போ’ குறைந்தது என்றால், அன்றைய தினம் மேலும் பல விஷயங்கள் உங்களைத் தாக்கி, உங்களை ஒரு வழி செய்வதைக் காண்பீர்கள். நீங்கள் இருப்பது போர்க்களம். இங்கு பலவீனர்களுக்கு வெற்றி கிடைக்காது.

எனவே பயிற்சி அளியுங்கள்... உடலுக்கும், மனதுக்கும். உடல் அழகுப் போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் அளவிற்கு நம் உடலைப் பராமரிக்காவிட்டாலும் கூட, அத்தியாவசியமான பயிற்சியையாவது செய்ய வேண்டும். ஞானத்தைத் தேடி அலையும் அளவிற்கு தியானம் செய்யாவிட்டாலும்கூட, சின்னச்சின்ன விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மனதை சமநிலையில் வைத்திருக்க தியானம் செய்ய வேண்டும். புற, அக பாதிப்புகளைத் தாங்கும் அளவிற்கு உறுதியாக மாறுங்கள்!

ஆரோக்கியமான மனமும், உடலும் ஆரோக்கியமான சிந்தனைகளைத் தரும். நீங்கள் ஆரோக்கியமானவராக இருப்பது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நல்லது. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களைச் சார்ந்தவர்களைக் கவனிப்பீர்கள்... அது அவர்களுக்கும் நல்லது.

முன் எப்போதையும் விட, வாழ்க்கை பரபரப்பாக இருக்கும் காலம் இது. நிற்காமல் ஓட வேண்டும் என்றால், எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் அளவிற்கு திடமாய் இருங்கள். நலமுடன் இருங்கள். ‘எதிர்காலத்தில் டாக்டர் சொல்லித்தான் உடற்பயிற்சியோ, மனப்பயிற்சியோ செய்வேன்... அதுவரை நேரம் இல்லை’ என்று சொல்லிக்கொள்வது பெருமையா என்ன? ‘டி.வியோ, திருட்டு டி.வி.டியோ பார்க்கவும், அரட்டை அடிக்கவும் எனக்கு டைம் கிடைக்கும். ஆனால், உருப்படியான விஷயங்களுக்கு அன்றாடம் கால் மணி நேரம் கூட எனக்குக் கிடைக்காது’ என்பதில் என்ன புத்திசாலித்தனம் இருக்கிறது?
(வேலை வரும்...)