கவிதைக்காரர்கள் வீதி





இயற்கை பற்றிய குறிப்புகள்

*  மரம் இருந்த வாசல்
    வெறிச்சோடிக் கிடந்தது
    காற்றேயில்லை
    கயிற்றுக் கட்டிலை
    நம் தாத்தாவோடு நாம் எரித்திருந்தோம்!

*  மின்னல் விழுந்து
பனை மரம் எரிந்துபோன கதையெல்லாம்
இப்போது நடப்பதில்லை;
பனை மரம் வெட்டப்பட்டபோதே
மின்னலையும்
நிறைய வெட்டிவிட்டோம் நாம்!

*  ஒரு மரம் வெட்டினேன்
    காக்கைகளும் குருவிகளும் வீடிழந்து அலைந்தன,
    இன்னும் பல மரங்கள் தேவைப்பட்டன
    எனக்கான ஒரு வீடு கட்ட

*  மழைக்குத் தெரியாது
    வந்து வந்து போகும்போது
    எத்தனை பேர் இருக்கிறோம்;
    எத்தனை பேர் இல்லையென்று...

*  புயல் வீசி
    மரங்கள் சாய்ந்து
    பல உயிர்கள் அழிந்து
    மனிதர் இறந்தது மட்டுமே
    செய்தியில் சொல்லப்பட்டது;
    மற்ற உயிர்களுக்கும்
    கையிருந்தும் காலிருந்தும்
    பசியிருந்தும் வலியிருந்தும்
    வாழ்க்கையிருந்தும்
    பெரிய பொருட்டாக அது தெரியவில்லை
    மனிதன் தனக்கான கொலையைத் துவங்கிய இடம்
    இப்படி தன்னை மட்டும்
    பெரிதாகக் காத்த இடமாக இருக்கலாம்

*  இடி இடிக்கும்போது
    படுக்கையை சுருட்டிக்கொண்டு
    வீட்டினுள் ஓடுவோம்.
    இப்போதும் இடி இடிக்கிறது,
    படத்தில் பார்க்கும்போதே
    காதைமூடிக் கொள்கிறோம்...
வித்யாசாகர்