மேஜிக் பம்மல் நாகராஜன்





ஓட்டலுக்குள் நுழைந்து டிபன் சாப்பிட உட்கார்ந்தார் அந்த மேஜிக் நிபுணர். கருப்பு கோட், உயரத் தொப்பி, கையில் ஸ்டிக் என அவர் அனைவரது கவனத்தையும் சுலபத்தில் ஈர்த்து விட்டார். இன்னும் சர்வர் யாரும் அவர் அருகில் வரவில்லை. இவரும் ஆர்டர் செய்யவில்லை.

மேஜை மீது கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த காலி டம்ளரை எடுத்து அவர் வாயருகே கொண்டு போக, அதிலிருந்து மளமளவென தண்ணீர் வாய்க்குள் புகுந்தது. மேஜையை ஒரு தட்டு தட்டியதும் இட்லி, வடை, வடைகறி, பொங்கல், பூரி, காபி என வரிசையாக வந்து குதித்தன. ரசித்துச் சாப்பிட ஆரம்பித்தார் அவர். 

ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரே வியப்பு. எல்லோரும் பிரமிப்போடு இதை வேடிக்கை பார்த்தனர். இதையெல்லாம் இவர் வீட்டிலேயே வரவழைத்துச் சாப்பிடலாம். தங்களைக் கவர்வதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறார் என்பது அவர்களுக்குப் புரிந்தது.

சாப்பிட்டு முடித்த மேஜிக் நிபுணர், நிதானமாக எழுந்து ஓட்டலைச் சுற்றிலும் ஒருமுறை பெருமிதத்தோடு பார்த்தார். எல்லோரும் சாப்பிட மறந்து அவரையே பார்த்தபடி இருந்தனர். போய் கை கழுவிவிட்டு மீண்டும் வந்து உட்கார்ந்தபோது அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுவரை அவர் சாப்பிட்ட அயிட்டத்துக்கெல்லாம் பில் ஒன்று தட்டில் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது.
‘‘இதுதான் எங்க மேஜிக்!’’ என்று கல்லாவிலிருந்து குரல் வந்தது!