எனர்ஜி : சூர்யகுமாரன்






எப்போதும் தன்னை மட்டம் தட்டும் பிராஞ்ச் மேனேஜர் பரந்தாமனை பழிவாங்கத் துடித்தான் திலீப். அரசல்புரசலாக ஹெட் ஆபீஸ் வரை அவரைப் பற்றி அவதூறு பரப்பியும் பார்த்துவிட்டான். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

‘‘அந்த ஆளு மேலயும் தப்பு இல்லாம இல்லையே... இந்தக் கிழ வயசுல ஆபீஸ்ல இருக்குற சின்னப் பொண்ணுங்களை எல்லாம் கேபினுக்கு வரச் சொல்லி, சீரியல் கதையில் இருந்து சீச்சீ ஜோக் வரை சொல்லி கொட்டமடிக்கிறான். அவளுகளும் களுக் களுக்னு சிரிக்கிறாளுங்க. என்ன செய்யிறது?’’
அவன் புலம்பலுக்கு பதில் சொன்னான் நண்பன் ரமேஷ்.
‘‘பேசாம உள்ள நடக்குறதை ஒரு ஸ்பை கேமராவால படம் எடுத்து, அதை அப்படியே ஹெட் ஆபீஸ்க்கு அனுப்பி வச்சிரு. ‘இதை யூ டியூப்ல போடலாம்னு இருக்கேன்’னு ஒரு மொட்டைக் கடுதாசியும் சேர்த்து அனுப்பு. பயந்து போய் அந்த ஆளை உடனே தூக்கிருவாங்க!’’

அவன் சொன்னபடியே செய்துவிட்டுக் காத்திருந்தான் திலீப்.
அடுத்த மாதமே அந்த செய்தி வந்தது...
‘பரந்தாமனுக்கு வைஸ் பிரசிடன்ட்டாக சூப்பர் ப்ரமோஷன். சம்பளம் நான்கு மடங்கு உயர்வு...’
‘‘மச்சி சொதப்பிடுச்சிடா. வீடியோவைப் பார்த்துட்டு ‘இந்த வயசுலயும் பொண்ணுங்களோட மிங்கிள் ஆகுறரே... ஆள் எனர்ஜெடிக்கா இருக்கார்’னு சொல்றானுங்கடா ஹெட் ஆபீஸ்ல!’’
 திலீப்பிற்கு வந்ததை ‘மயக்கம்’
என்பார்கள்.