சொல்றேண்ணே... சொல்றேன்!





இந்த இமான் அண்ணாச்சிக்கு அஸ்திவாரம் டி.விதான்ணே... டி.வி இல்லேனா நானில்ல. ‘டி.வி பிரபலம்’ங்கிற வார்த்தைய நினைச்சுப் பார்த்தா, ஆச்சரியமா இருக்குண்ணே! டி.வியே பிரபலமாகாத காலத்தில் இருந்து வந்தவங்கதானே நாமெல்லாம். முதல் முதல்ல டி.வி வந்தப்ப ஒவ்வொரு கிராமமும் ஏதோ கடவுளை மாதிரி அதைப் பார்த்தது உங்களுக்கே ஞாபகம் இருக்குமே. எங்க ஊர்லயும் அப்படித்தான்ணே... ராசா வாராரு... ராசா வாராருங்கற மாதிரி டி.வி வந்து இறங்கிச்சி. அப்ப அங்கே ரெண்டே வீட்லதான் டி.வி. அதுக்குப் பெறவு அந்த ரெண்டு வீடும் கிட்டத்தட்ட மினி டூரிங் டாக்கீஸ்தான்!

எங்க ஏரியாவுல நம்ம ஊரு ஸ்டேஷனை விட, சிலோன் (இலங்கை) ஸ்டேஷன்தான்ணே நல்லா எடுக்கும். வெங்காயத்துல தோல் உரிஞ்ச மாதிரி ஒரு பந்தைச் சுத்தி பாளம் பாளமா சுத்துமே... அந்த தூர்தர்ஷன் சின்னத்தை விட, காக்கா கருவாடு தூக்கிட்டுப் பறக்குற ரூபவாஹினி சின்னம்தான்ணே எங்களுக்குப் பழக்கம். அது காக்கா இல்ல... அது வாயில இருக்குறது கருவாடு இல்லன்னு சொல்லிப் பாருங்க... இப்பவும் எங்க ஊருல அடிக்க வருவாங்க.

அந்தக் காலத்துல டி.விங்கறது கிட்டத்தட்ட ரேடியோதான்ணே... சத்தம் மட்டும்தான் தெளிவா கேக்கும். வெள்ளை வெள்ளையா புள்ளி... அலை அலையா கோடு... இதுக்கு மத்தியில நசுங்கிப் பிதுங்கி, குத்துமதிப்பாத்தான் படம் தெரியும். அதுக்கே நம்ம சனங்க, ‘‘ஆகா... நம்ம காலத்துக்குள்ள இப்படி ஒரு அதிசயத்தப் பார்த்துட்டோமே’’ன்னு சிலிர்த்துக்குவாங்க. ‘‘எலேய்... இது எம்ஜியாருலே...’’, ‘‘இல்ல, சிவாஜிலே’’ன்னு பெருசுகளுக்குள்ள டி.வியப் பாத்து பெரிய தாவாவே வரும்ணே. கடைசீல பார்த்தா, அது அசோகன் ஹீரோவா நடிச்ச படமா இருக்கும்!
டி.வியில ஆன்டெனான்னு ஒண்ணு இருக்கு பாருங்க... அது ஒவ்வொரு வீட்டுக்கும் கிரீடம் மாதிரி. அதனாலயே கீழ இருந்து பார்த்தா தெரியிற மாதிரி முன்பக்கமாதான் அதை மாட்டி வைப்பாங்க. ‘டி.வி உள்ள வீடு’ன்னு அதுக்கு தனி மதிப்பு. அந்த வீட்டுல எல்லாரும் பேரைத் தொலச்சுருவாங்க. ‘டி.வி மாமா...’, ‘டி.விக்காரம்மா...’, ‘டி.வி வீட்டுப் பிள்ள...’ன்னு எல்லார் பேரும் டி.விதான். வெள்ளிக்கிழமை, ஞாயத்துக்கிழமை சினிமா பாட்டு போடும்போது, ‘படம் தெரியில’ன்னு வைங்க... குடும்பமே குடுகுடுன்னு மாடிக்கு ஓடி, காக்கா வெரட்டும்ணே. ஆன்டெனால காக்கா உக்கார்ந்தா, கருவாடு தூக்கிட்டுப் போற காக்கா டிஸ்டர்ப் ஆயிடும் பாருங்க!

நாங்கல்லாம் எப்பவும் அந்த வீடுகளுக்குள்ள தலைய விட்டு, டி.வி ஓடுதான்னு பாக்காம அந்த ஏரியாவை கிராஸ் பண்றதில்ல... ‘‘இந்த டி.விய ஏன்தான் வாங்குனோமோ... வீடே சந்தைக் கடை மாதிரி ஆகிப் போச்சு’’ன்னு அந்த வீட்டம்மா வையும். நமக்குத்தான் டி.வி சத்தத்தைத் தவிர வேற எதுவும் கேக்காதுல்ல!



படம் போடும்போது, ‘டி.வி காரங்க’ வீட்ல எள்ளு போட்டா எண்ணெய் வரும்ணே. சீனி மிட்டாய், பலூன்காரனுக எல்லாம் வாசல்ல கடை போடுற அளவுக்கு கூட்டம் அள்ளும். டி.வி வச்சிருக்குற ரெண்டு வீட்டுல, ஒரு வீட்டுக்காரங்க கொஞ்சம் மூஞ்சக் காட்டுவாங்க. இன்னொருத்தவங்க தங்கமான டைப்பு. படம் பாக்கும்போது என்னைய மாதிரி குட்டிப் பயலுகளுக்கு பனங்கெழங்கு, சில்லுக்கருப்பட்டியெல்லாம் தருவாங்க. அதனால அந்த வீடு ஹவுஸ்ஃபுல் ஆன பெறவுதான், மூஞ்சியக் காட்டுற வீட்டுக்குப் போவோம். டி.வின்னு வந்துட்டா மானம் ரோசத்தையெல்லாம் மடிச்சு டிரங்கு பெட்டியில வச்சிர வேண்டியதுதானே!

ஒரு பெரிய தேசியத் தலைவர் எறந்த சமயம்ணே அது... அந்த நிகழ்ச்சிய நேரடியா டி.வியில காட்டினாங்க. அவ்வளவுதான்... ‘‘அய்யோ தெய்வமே... போயிட்டியா’’ன்னு முந்தானையால வாயப் பொத்திகிட்டு ஊரே கிளம்பிப் போயிருச்சு. சினிமா பாக்க வாரதை விட, பத்து மடங்கு கூட்டம். வீட்டுக்காரங்க எங்க நசுங்கிக் கிடக்காங்கன்னே தெரியல. ‘‘டெல்லியில நடக்குறதையா இங்க காட்டுறாங்க? அதிசயமா இருக்கேப்பா?’ன்’னு ஆம்பிளையாளுக வெளிய வெத்தல பாக்குப் போடுறாங்க. காது வளர்த்த ஆச்சிக எல்லாம் டி.வி முன்னால ஒப்பாரிய வச்சு வீட்டையே எழவு வீடாக்கிட்டாங்க.
ஆனா, பாருங்கண்ணே... அன்னைக்கு அந்த டி.வி வீட்டுக்காரங்களைப் பார்த்து எனக்குப் பொறாமை. எனக்கு என்ன லட்சியம்? ஊருக்குள்ள பாப்புலர் ஆகணும்... எல்லாரும் என்னையப் பத்திப் பேசணும்னுதானே! அதுக்குத்தானே சின்னப் பிள்ளைல இருந்தே குரலை மாத்திப் பேசி, குட்டிக் கரணம் அடிச்சு எல்லாருக்கும் சிரிப்பு காட்டிக்கிட்டு இருந்தேன். ஆனா, டி.வி வச்சிருக்கிறவங்க ஒண்ணுமே பண்ணாம ஹீரோ ஆயிடுறாங்களே... அன்னைக்கு முடிவெடுத்தேன்ணே... நாமளும் டி.வி வாங்கணும்... ஹீரோ ஆகணும்!

ஊருக்குள்ள சீட்டுப் பிடிச்சி, ஐஸ் வண்டி இழுத்து எல்லாம் நட்டமாகிப் போன பெறவு, அடுத்த யாவாரம் டி.விதான்னு முடிவு பண்ணினேன். அய்யோ, டி.வி விக்கிற அளவுக்கெல்லாம் போகலண்ணே... கோயில் விசேசம், நல்ல நாளு, பெரிய நாளுன்னா அப்போ எல்லா ஊருலயும் டி.வி, டெக்கு போட்டு விடிய விடிய படம் பாப்பாங்க. ஊரு ஊரா டி.வியத் தூக்கிட்டுப் போயி அப்படி படம் காட்டுறதே அப்ப பெரிய யாவாரம்ணே. அதுக்காக எங்கண்ணன்கிட்ட கேட்டு ஒரு டி.வியும் டெக்கும் வாங்கிட்டேன்.

அதுக்குப் பெறவு, சுத்தி உள்ள எல்லா ஊருக்கும் நான்தான்ணே ‘டி.வி தம்பி’. ஊருக்குள்ள நுழையும்போதே ‘தம்பி, கலர் குடிக்கீயளா? காபி போடவா’ன்னு ஒரே கவனிப்பு. நிஜமாவே ஹீரோவாயிட்டேன்.

ஆனா, எல்லாம் டி.விய ஆன் பண்ணுற வரைக்கும்தான். போட்டப்புறம் என் பக்கம் யாரும் திரும்ப மாட்டாங்க. நான் பின்னாடி எங்கனயாச்சும் போயி படுத்துருவேன். அந்தச் சமயத்துல எனக்கு வீட்ல படுத்தா கூட சரியா ரெண்டரை மணி நேரத்துக்கு ஒருக்கா முழிப்பு வரும்ணே. ஒவ்வொரு படம் முடிய முடிய எந்திரிச்சு கேசட்டை மாத்திப் போடணும்ல... அந்தப் பழக்கம். அதத் தாண்டியும் டேப் கேசட் போடுற டெக்குலதான் நடுநடுவுல நிறைய பிரச்னை வருமே. புள்ளியடிக்குது, எலிக்குஞ்சு ஓடுற மாதிரி சத்தம் கேக்குதுன்னு நடுராத்திரியில ஒரு கொந்தளிப்பு வரும் பாருங்க... அப்போ உலகத்துல உள்ள எல்லா வசவையும் வாங்குவேன். ஹீரோ இல்ல... வில்லன் இல்ல... அல்லசில்ல அடியாளு மாதிரி நம்மளைத் தூக்கிப் போட்டு மிதிப்பாங்கண்ணே.
ஒரு காமெடியன் ஹீரோவாக நினைச்சா இப்படித்தான்!
(இன்னும் சொல்றேன்...)
தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்