ஜோக்ஸ்





‘‘மற்ற இடங்களைவிட உங்க தொகுதியிலே பொறம்போக்குங்க அதிகம் தலைவரே...’’
‘‘புரியும்படியா பேசுய்யா! நீ நிலத்தைச் சொல்றியா... இல்ல, ஆளுங்களைச் சொல்றியா?’’
- லெ.நா.சிவகுமார், சென்னை-33.

‘‘தலைவர் நிறைய பாத யாத்திரை போயிருக்காரு...’’
‘‘அதுக்காக ‘பாத’ ரத்னா விருது கேட்கறது நல்லா இல்லை!’’
- பா.ஜெயக்குமார், வந்தவாசி.

‘‘கூட்டத்துக்கு ஆயிரக்கணக்குல ஆட்கள் வந்தும் தலைவர் ஏன் கோபமா இருக்கிறார்..?’’
‘‘லட்சக்கணக்கான ஆட்களுக்கு இல்ல அட்வான்ஸ் குடுத்திருந்தாரு..!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘சச்சினுக்கும் வயது நாற்பது... இங்கே எம்.பி தொகுதிகளும் நாற்பது...’’
‘‘நீங்க வாங்கி வச்சிருக்கற குற்றப் பத்திரிகைகளும் நாற்பது தலைவரே..!’’
- ராம்ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

‘‘தலைவர் ஏன் கடுப்பா இருக்கார்..?’’
‘‘அவர் மேடையில பேசிக்கிட்டிருக்கும்போது, மகளிரணித் தலைவி அழகைப் புகழ்ந்து பேசும்படி தொண்டர்கள் துண்டுச்சீட்டு அனுப்பினாங்களாம்..!’’
- பெ.பாண்டியன், காரைக்குடி.

‘‘இருந்தாலும் தலைவருக்கு
பயம் ரொம்ப ஜாஸ்தி...’’
‘‘ஏன்... என்ன செய்தார்?’’
‘‘குண்டு பட்டா உடம்பைத் துளைக்காத புல்லட் புரூஃப் கோட் இருக்கிற மாதிரி, கல் வீசினா அடிபடாத மாதிரி கோட் ஏதாவது
இருக்கான்னு கேக்கிறார்!’’
- மு.மதிவாணன், அரூர்.

‘‘தலைவர் அரசியல்ல காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாருன்னு எப்படிச் சொல்றீங்க..?’’
‘‘அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் போய் வர்றாரே..!’’
- என்.பர்வதவர்த்தினி, சென்னை-75.