நேர்மை : மலர்மதி





‘‘டேய் திலக்... இந்தா உன்கிட்ட நான் வாங்கின ஆயிரம் ரூபாய் கடன். சரியா இருக்கா பார்த்துக்க!’’ - டி.வி பார்த்துக் கொண்டிருந்த திலகனிடம் காசை நீட்டினார் நண்பர் நடேஷ். எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகள்.
திலகன் வாங்கி எண்ணிப் பார்த்தார். மொத்தம் பதினோரு நோட்டுகள் இருந்தன!

கொடுத்த நடேஷின் பார்வை டி.வி மீது இருந்தது.
‘‘சரியா இருக்குப்பா’’ என்றவாறு அவசரமாக அதை சட்டைப் பையில் திணித்துக்கொண்டார்
திலகன்.
அடுத்தவர் ரூபாய் நோட்டுகளை எண்ணும்போது, அதைப் பார்வையால் எண்ணும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. திலகனின் மனைவி திலகாவுக்கும் இருக்கிறது. கணவர் எண்ணுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுக்கு ‘திக்’கென்றது.  
‘என்ன மனுஷர் இவர்? நூறு ரூபாய் அதிகமா இருக்கு. வாங்கி வச்சிக்கறார். இவங்க பழக்கம் எல்லாம் அவ்வளவுதானா?’
நடேஷ் கிளம்பியதும் செல்லை எடுத்த திலகன், நடேஷின் மனைவியோடு பேசினார்...

‘‘ஏன் சிஸ்டர்... நடேஷ்கிட்ட பணம் கொடுத்தனுப்பும்போது ஒரு நோட்டு அதிகமா வச்சிட்டீங்களே! கவனமா இருங்கம்மா. நடேஷ் கோவக்காரன்... இப்படி ஒரு தப்புன்னா, கணக்கு வழக்கெல்லாம் பார்க்குற உங்ககிட்டதான் கோபப்படுவான். அதனால நான் அவன்கிட்ட சொல்லலை. அப்புறம் இந்தப் பக்கம் வரும்போது ஞாபகமா கேட்டு வாங்கிக்குங்க!’’
நேர்மையாகவும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொண்ட கணவனை நினைத்து பெருமைப்பட்டாள் திலகா.