எண்பதாயிரத்தில் ஒருவர்கள்! 10 ஆண்டுகள்





‘‘ஆங்கிலத்தில் ஆயிரம் என்சைக்ளோபீடியா இருக்றது. பிரிட்டானிகாவிலும் கேம்பிரிட்ஜிலும் வருடா வருடம் கொண்டு வாரார்கள். ஆனால், தமிழில் அத்தனை பணம் போட்டு இங்கே புத்தகம் கொண்டுவர ஆருமில்ல... வாங்கும் சக்தியும் குறைவு. ஆக, நமக்கு இருக்கிற ஒரே வழி, இணையம்தான்!’’ - இலங்கைத் தமிழில் கொஞ்சிப் பேசுகிறார் மயூரநாதன். இணையத் தமிழ் என்சைக்ளோபீடியாவான ‘தமிழ் விக்கிபீடியா’வை முதன் முதலில் உருவாக்கி, கட்டி எழுப்பிய கட்டிடக் கலைஞர்.

தமிழ் விக்கிபீடியாவின் பத்து வயது நிறைவைக் கொண்டாட சென்னையில் கூடியிருந்தார்கள் உலகெங்கிலும் உள்ள, ‘தமிழ் விக்கி தன்னார்வலர்கள்’. ‘‘இதோ இவங்களுக்கு 60+... ஓய்வு பெற்ற ஆசிரியை... இந்தப் பொண்ணு இப்பதான் பிளஸ் 2 படிக்குது... இவர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கார்... இதோ இவர் ஆஸ்திரேலியாவில் இருந்து...’’ என ஒவ்வொருவராக நமக்கு அறி
முகப்படுத்தி வைக்கிறார்கள். புகழையோ ஊதியத்தையோ எதிர்பாராமல் தங்கள் நேரத்தை தமிழுக்காக ஒதுக்கியிருக்கும் அவர்கள் ஒவ்வொருவருமே வி.ஐ.பிக்களாகத் தெரிகிறார்கள் நமக்கு!
‘‘இன்டர்நெட் பரிச்சயம் உள்ள யாருக்குமே ‘விக்கிபீடியா’ தெரிஞ்சிருக்கும். கூகுள்ல எதைத் தேடினாலும், கண்ணாடி போட்ட படிப்பாளி பையன் மாதிரி, முன்னாடி வந்து தகவல் தர்றது அதுதானே. காலேஜ் பசங்க யார்கிட்ட வேணும்னாலும் கேளுங்க... ‘நாங்க நோட்ஸ் எல்லாம் காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணி, சுட்டு எடுக்குற சைட்தானே’னு அடையாளம் கண்டுக்குவாங்க. ‘யாரும் வரலாம் யாரும் தொடலாம்’ங்கிற ஸ்டைல்தான் விக்கிபீடியாவின் வெற்றி. பயன்படுத்துறவங்களே அதை உருவாக்குறாங்க. நீங்க கூட அதில் மாற்றம் பண்ணலாம்’’ - இளமை பொங்கப் பேசும் இரவிசங்கர், தமிழ் விக்கிபீடியாவின் நிர்வாகிகளில் ஒருவர். தனது வெப் டிசைனிங் வேலைக்கு இடையே தமிழ் விக்கிபீடியாவுக்காக நேரம் ஒதுக்கி, ஆயிரக் கணக்கான கட்டுரைகளை எழுதியிருப்பவர்.



‘‘தமிழ் விக்கிபீடியாவிலே இப்போதைக்கு சுமார் ஆயிரம் பேர் தொடர் பங்களிப்பைத் தருகிறார்கள். எட்டு கோடிப் பேர் உள்ள ஒரு மொழியில் ஆயிரம் பேர்... அதாவது, எண்பதாயிரத்தில் ஒருவர் முன்வாரது குறைவுதான். ஆனால், ஒரே குடும்பம் போல நாங்கள் ஒன்றிணைஞ்சு செய்யும் பணிகள் நிறைவா இருக்கு.’’ - இதைச் சொல்லும்போது மயூரநாதனிடம் நிஜமான மனநிறைவு.
‘‘நான் ஐக்கிய அரபு நாடுகளில்தான் கட்டிடக் கலைஞராக இருக்கறேன். 2003ல் நான் முதல்முறையாக விக்கிபீடியா தமிழ்ப் பக்கத்தைத் தொடங்கியபோது, இணையத்தில் தமிழ் பயன்பாடே குறைவுதான். ஆரம்பத்தில் எனக்குத் தெரிஞ்ச செய்திகளைத்தான் நான் தமிழில் டைப் செய்து ஏற்றினேன். காலப் போக்கில் என்னைப் போல இலங்கையைத் தாயகமாய் கொண்ட நண்பர்கள் இணைந்தார்கள்.

அப்போ ஒரு விமர்சனமே வந்தது... தமிழ் விக்கிபீடியாவில் எல்லாமே இலங்கை மொழி நடையில் இருக்கிறது என்டு. ஆனால், இப்போ காலம் மாறிப் போச்சு. ஆயிரம் தொடர் பங்களிப்பாளர்களில் தமிழ்நாட்டுத் தமிழர்கள்தான் பெரும்பான்மை. அதிலும் சேலம்காரர்கள் அதிகம். அவர்கள் முயற்சியால் இன்றைய தமிழ் விக்கிபீடியாவில் 56 ஆயிரம் கட்டுரைகள் இருக்கறது. விக்கிபீடியாவில் இந்திய மொழிகளிலேயே இந்திக்கு அடுத்து தமிழ்தான் அதிக கட்டுரைகளைக் கொண்ட மொழி என்டு நினைக்கையில் பெருமையாக இருக்கு. ஆனால், இன்னும் நிறைய இளைஞர்கள் தன்னார்வலர்களாக
வரவேணும். ஆங்கிலத்துக்கு இணையாக தமிழ் வளர வேணும்’’ என்கிறார் மயூரநாதன் ஏக்கத்தோடு!

கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின் மற்றும் கணினியியல் துறை பேராசிரியராக இருக்கும் செ.இரா.செல்வகுமாரும் தமிழ் விக்கிபீடியாவில் முதன்மையானவர். ‘‘தமிழில் தொழில்நுட்பத் தகவல்கள் நிறைய வரணும்... கலைச் சொற்கள் உருவாகணும்... இதுதான் நான் தமிழ் விக்கிபீடியாவுக்கு வரக் காரணமா இருந்தது. எலக்ட்ரானிக்ஸ் துறையில மெம்ரிஸ்டர்னு புத்தம் புதுசா ஒரு கண்டுபிடிப்பு வந்தது. 2008ல் அறிவிக்கப்பட்ட அந்தக் கண்டுபிடிப்பைப் பத்தி ஆங்கிலத்துக்கு முன்னாடியே தமிழ் விக்கிபீடியாவில்தான் விரிவான கட்டுரை வந்தது. இது மாதிரியான நவீன முன்னெடுப்புகளை நிறைய இளைஞர்கள் முன்னெடுக்கணும். இலக்கியத்தோடு சேர்ந்து தொழில்நுட்பத்திலும் தமிழ் வளரணும். அதுதான் என் ஆசை!’’ என்கிறார் அவர்.

‘‘தமிழ் விக்கிபீடியாவுக்காக உழைக்கிற எங்க யாருக்கும் நேரடியான பணப் பலன்களோ, புகழ் மாலைகளோ விழாதுங்கறது உண்மைதான். ஆனா, இதில் மறைமுகமா நிறைய நன்மை இருக்கு. தமிழ் விக்கிபீடியாவுக்கு தொழில்நுட்ப ரீதியா உதவிய எவ்வளவோ எஞ்சினியரிங் மாணவர்களுக்கு இந்த முன் அனுபவத்தாலேயே பெரிய நிறுவனங்கள்ல வேலை கிடைச்சிருக்கு. அதே மாதிரி, இங்கே வந்தா நம்ம கைக் காசைப் போட்டு செலவு பண்ண வேண்டி வரும்னு நினைக்க வேண்டியதில்ல. இதுவும் ஒரு உலகளாவிய இணையதளத்தோட தமிழ்க் கிளைதான். இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கும், போட்டி நடத்தி பரிசு கொடுக்கறது மாதிரியான நியாயமான செலவுகளுக்கும் விக்கிபீடியா நிறுவனமே நிதி ஒதுக்கும். ஆக, தமிழ் விக்கிபீடியா நம்மகிட்ட எதிர்பார்க்குறது ஆர்வத்தையும் அறிவையும் மட்டும்தான்’’ என்கிறது, விக்கி தன்னார்வலர்களிலேயே தனித்துத் தெரிந்த இளைஞர் பட்டாளம்.
‘‘அப்புறம் சார்... என் பேர்ல முன்னாடி ‘இ’ போடுங்க... அப்புறம் வட மொழி ‘ஷ’ பயன்படுத்திடாதீங்க!’’ - இருபதுகளைக் கடக்காத இரவிசங்கர், இறுதியாக இப்படிச் சொல்லி நம்மை வழியனுப்புகிறார்...
வருங்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கிறது நமக்கு!
- கோகுலவாச நவநீதன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்