முதலில் உயிர்... இப்போது படகு!





5 குடும்பங்கள் நிலைகுலைந்து நிற்கின்றன. 34 குடும்பங்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. பல்லாயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்று கலங்கித் தவிக்கின்றன.

தமிழக மீனவர்களுக்கு இது இலங்கை அரசால் நேர்ந்த சோதனைக்காலம். கடந்த 30 ஆண்டுகளில் 637 மீனவர்கள் குண்டடிக்கு பலியாகியிருக்கிறார்கள். 137 பேர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. 132 படகுகள் இடித்தும், உடைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஊனமாகி இருக்கிறார்கள். பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள மீன்களும், மீன்பிடி சாதனங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

இதுநாள் வரை
அடித்தும் சுட்டும் விரட்டியடித்துக் கொண்டிருந்த இலங்கை அரசு இப்போது வாழ்வாதாரத்தின் மையத்தில் கை வைத்திருக்கிறது. தமிழக மீனவர்களின் 5 படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இன்னும் 34 படகுகள் தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. உலக வரலாற்றிலேயே பாரம்பரிய மீனவனுக்கு எதிராக இப்படியொரு தீர்ப்பு எழுதப்பட்டதில்லை என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்.

‘‘மீனவனுக்கு படகுதான் வாழ்வாதாரம். எல்லா மீனவர்களாலும் படகு வாங்க முடியாது. பெரிய முதலீடு. ரூ.10 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் ஆகும். ஒரு மீனவன் ஆயுள்கால உழைப்பைக் கொட்டினாதான் அடுத்த தலைமுறைக்கு ஒரு படகை சொந்தமாக்க முடியும். இந்தத் தலைமுறை இளைஞர்கள் ஓரளவுக்கு முதலீடு போட்டு, கடன் வாங்கி படகு வாங்குறாங்க. இதுநாள் வரைக்கும் அடிப்பாங்க, சுடுவாங்க, விரட்டுவாங்க... கைது பண்ணி கொஞ்ச நாள் சிறையில வச்சிருந்து விட்டுடுவாங்க. முதல்முறையா படகை பறிமுதல் பண்ணியிருக்காங்க.
தொழில் ஆதாரமே பறிபோயி டும்னு ஆனபிறகு எந்த மீனவனுக்கு கடலுக்குள்ள இறங்க துணிச்சல் வரும்? மீனவர் சமூகமே அழியப் போகுது. நாட்டுக்கு பல லட்சம் அந்நியச் செலவாணி ஈட்டித் தர்ற, சம்பளம் வாங்காத கடலோரப் பாதுகாவலர்களா இருக்கிற மீனவர்களுக்கு இந்த அரசுகள் செய்யிற பிரதியுபகாரம் இதுதான்’’ - கண் கலங்கப் பேசுகிறார் தமிழகக் கடலோர விசைப்படகு மீனவர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சேசுராஜா.



காரைக்கால்மேடு வீரக்குமார், கிளிஞ்சல்மேடு மதிவண்ணன், அக்கரைப்பேட்டை மதி, கீச்சாங்குப்பம் சின்னையன், நம்பியார் நகர் மதி... இவர்களின் படகுகளைத்தான் நாட்டுடைமை ஆக்கி தீர்ப்பு எழுதியிருக்கிறார், இலங்கையின் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி நந்தசேகர். அதற்கு சில வாரங்களுக்கு முன்பே வடக்கு மாகாணத் தேர்தலில் பிரசாரம் செய்த அமைச்சர்கள், ‘இனிமேல் எல்லைமீறி வரும் தமிழக மீனவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படும்’ என்று தீர்ப்பை எழுதி விட்டார்கள். இலங்கையில் அரசியல்வாதிகளே நீதிமான்கள், காவலர்கள்..!
படகை இழந்துள்ள காரைக்கால்மேடு வீரக்குமாருக்கு 2 குழந்தைகள். தந்தை இறந்து விட்டார். திருமண வயதில் ஒரு தங்கை இருக்கிறார். ‘‘அப்பாவுக்கு சொந்தப்படகு வாங்கிடணும்னு ஆசை. அவரால முடியலே. நான் சிங்கப்பூர்ல போய் 6 வருஷம் வேலை செஞ்சேன். குருவி சேக்கிறது மாதிரி 5 லட்ச ரூபாய் சேத்தேன். ரூ.10 லட்சம் வட்டிக்கு வாங்கினேன். ஒரு நண்பரை பார்ட்னரா சேத்துக்கிட்டு 30 லட்சத்துக்கு அந்த போட்டை வாங்குனோம். 3 வருஷமாச்சு. இடையில பார்ட்னர் தனியாப் போயிட்டார். அவருக்கு இன்னும் 8 லட்ச ரூபாய் தரணும். அதுபோக 5 லட்சத்துக்கு மேல கடனிருக்கு.

கடனை அடைக்கறதுக்காக ராத்திரி, பகல் பாக்காம உழைச்சேன். ஜூலை 28ம் தேதி 8 பேர் கடலுக்குப் போனோம். சேது சமுத்திரத் திட்ட வேலை நடந்த பகுதியிலதான் வலையைப் போட்டிருந்தோம். எங்களோட சேந்து 20, 30 படகுகள் மீன் பிடிச்சாங்க. தூரத்துல இலங்கை நேவி ரோந்து சுத்திக்கிட்டிருந்தாங்க. ரெண்டு நாள் வரைக்கும் எங்களை எதுவும் கேக்கல. மூணாவது நாள் நாங்க கிளம்ப ஆயத்தமானப்போ, திடீர்னு சுத்தி வளைச்சு தலையில துப்பாக்கியை வச்சுட்டாங்க. எங்களைப் பிடிச்சவுடனே மத்தவங்கள்லாம் வேகமா படகைக் கிளப்பினாங்க. 4 படகுங்க மாட்டிக்கிச்சு. மொத்தம் 34 பேரு. ‘ஏன் எங்களைப் பிடிக்கிறீங்க... எங்க எல்லையிலதானே மீன் பிடிச்சோம்’னு அழுதோம்.



‘ஒண்ணும் பண்ணமாட்டோம். உடனே விட்டுடுவோம்’னு சொல்லி கூட்டிக்கிட்டுப் போனவங்க, யாழ்ப்பாணம் சிறையில அடைச்சுட்டாங்க. அங்கே இருந்த தமிழ் அதிகாரிங்க, ‘எல்லை மீறி வந்தீங்களான்னு கேட்டா ஆமாம்னு சொல்லிடுங்க. உடனே விடுதலை பண்ணிடுவாங்க’ன்னு சொன்னாங்க. நீதிபதி கேட்டபோது ‘ஆமாங்கய்யா... எல்லை மீறி வந்துட்டோம்’னு சொன்னோம். ‘தப்பு செஞ்சவங்க குற்றத்தை ஒத்துக்கிட்டாங்க. ஆளு ரிலீஸ்... படகு மேல கேஸ்’னு சொல்லிட்டார். ‘படகை வாங்காமப் போகமாட்டோம்’னு எல்லாரும் அங்கேயே தங்கிட்டோம். நம்ம தூதரக அதிகாரிங்கதான், ‘படகுக்கு நாங்க பொறுப்பு’ன்னு சொல்லி கட்டாயப்படுத்தி எங்களை அனுப்பி வச்சாங்க. கையில இருந்த முதலீடு பறிபோயிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே கடன் கொடுத்தவங்க நெருக்க ஆரம்பிச்சுட்டாங்க. தற்கொலை பண்ணிக்கலாமான்னு கூட தோணுது...’’ என்று கலங்குகிறார் வீரக்குமார்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்த ஆண்டு மீனவர்களுக்கு கறுப்பு ஆண்டு. மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். ராமேஸ்வரம் மீனவர்கள் மாதம் 12 முறை கடலுக்குச் செல்வார்கள். ஆனால் கடந்த 6 மாதத்தில் வெறும் 15 நாட்கள் மட்டுமே தொழில் செய்திருக்கிறார்கள்.
‘‘அவங்க இலக்கு, நம்ம படகுதான். பெரிய கப்பலைக் கொண்டு வந்து நம்ம படகுல முட்டுவாங்க. அதுக்குப் பிறகு அந்தப் படகைப் பயன்படுத்தவே முடியாது. அவங்ககிட்ட பிடிபட்டு மீண்டு வர்ற படகுகளைப் பயன்படுத்தவே முடியாது. பல நூறு குடும்பங்கள் இப்படி படகை இழந்து நொடிச்சுப் போய் கிடக்குது. மீனவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற நிலைக்கு வந்திட்டாங்க. தங்கச்சிமடத்துல ஒரு தனியார் அடகுக்கடையில எங்க மக்கள் அடகு வச்ச 4 கோடி ரூபாய் நகைகளை வட்டி கட்டாததால ஏலம் விட்டுட்டாங்க. எல்லாரும் மாற்றுவேலைக்குப் போறதைப் பத்தி யோசிக்கிறாங்க. பிரதமர்ல இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் வரைக்கும் எல்லோரையும் பாத்து கதறிட்டோம். யாரும் ஏறெடுத்துப் பார்க்கலே. அவங்க அரசியலுக்கு எங்களை பலி கொடுத்துட்டாங்க’’ என்கிறார் சேசுராஜா.

‘‘கடல்ல எல்லா நாட்டு மீனவனுக்கும் பாரம்பரிய உரிமை இருக்கு. உலகத்தில எந்த நாட்டிலயும் இப்படி ஒரு நிலை இல்லை. எல்லை தாண்டி வர்ற மீனவர்களைப் பிடிச்சா, சிறையில வச்சிருந்துட்டு விடுறது தான் நடைமுறை. சட்டவிரோதமான கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தவிர படகுகளை பறிமுதல் செய்யக்கூடாது. இலங்கை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கு. இனி வங்க தேசம், பாகிஸ்தான்லயும் கூட இதுமாதிரி நடக்கலாம். இவ்வளவுக்குப் பிறகும் மத்திய அரசு அமைதியாக இருக்கிறது. அமெரிக்காவில் சீக்கியர்கள் பாதிக்கப்பட்டபோது, பிரதமர் கொதித்து குரல் கொடுக்கிறார். இரண்டு கேரள மீனவர்கள் சுடப்பட்டபோது கேரளாவே திரண்டு நின்னுச்சு. ஆனால் 600க்கும் மேற்பட்ட தமிழன் கொல்லப்பட்டிருக்கான். வாழ்வாதாரம் அழிக்கப்படுது. ஏன்னு கேட்க ஆளில்லை’’ என்று குமுறுகிறார் தென்னிந்திய மீனவர் நல சங்கத்தின் தலைவர் கு.பாரதி.
ராஜதந்திரம் என்ற பெயரில் எல்லா கொடூரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மத்திய அரசுக்கு அழகல்ல!
- வெ.நீலகண்டன்