குட்டிச்சுவர் சிந்தனைகள்





பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பார்த்துக் கேட்கிறேன்... எவ்வளவு தைரியமிருந்தா எங்க பிரதமர பார்த்தா ‘குசலம் பேசுற பெண் போல இருக்கு’ன்னு சொல்லுவ? நீ எங்க பிரதமர என்ன வேணா கிண்டல் பண்ணிக்கோ, வீ டோன்ட் கேர். ஆனா, பெண்கள எங்க பிரதமரோட கம்பேர் பண்ணினே... கார் எடுத்துட்டு கார்கில் தாண்டி வந்து உதைப்போம்! பெண்கள் அவங்க மூச்ச கூட நிறுத்துவாங்கய்யா... ஆனா, பேச்சை நிறுத்தச் சொன்னா முடியுமா? இப்படி எப்பவும் பேசுற பெண்களோட எப்படிய்யா பேசவே பேசாத எங்க பிரதமர நீ கம்பேர் பண்ணலாம்? உலகத்துல பேசாத பெண்கள் ரெண்டே வகைதான்... ஒண்ணு, பேச்சு வராத அரை வயசுப் பொண்ணு, இன்னொண்ணு, நைட் ஷிஃப்ட் போயிட்டு வந்து தூங்கிட்டிருக்குற பொண்ணு. இப்படிப்பட்ட பெண்களை எங்க பிரதமரோட கம்பேர் பண்ணி அசிங்கப்படுத்தி இருக்க. என்னைக்காவது எந்தப் பெண்ணாவது, ஏதாவது கேட்டா, ‘எனக்குத் தெரியாது’ன்னு சொல்லியிருக்காய்யா... எல்லாம் தெரிஞ்ச மாதிரிதானேய்யா பொண்ணுங்க பேசுவாங்க! ஆனா, எங்க பிரதமர் அதை எத்தனை தடவை சொல்லியிருக்கார். எங்க பிரதமர் மனசுக்குள்ள எத்தனை ரகசியமும், சங்கடமும் இருக்கு தெரியுமா? ஆனா, எந்த பொண்ணாவது ரகசியத்த நெஞ்சுல பூட்டி வைக்குமாய்யா? போய்யா... போய் தப்பா பேசியதுக்கு பிரதமர்கிட்ட இல்லாட்டியும், பெண்கள்கிட்ட மன்னிப்பு கேளு!

மாட்டுத் தீவன ஊழல்ங்கறது என்னை எங்கப்பா பள்ளிக்கூடத்துல சேர்த்தப்ப நடந்தது. வீட்டுல தின்கிற தட்டுல மட்டுமில்ல, மாடு தின்கிற தட்டுலயும் கை வைப்பான் இந்தியன்னு உலகுக்கு ஓங்கிச் சொன்ன ஊழல் வழக்கு அது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த  ஊழல் வழக்குக்கு இந்த வாரம்தான் தீர்ப்பு வந்திருக்கு. இப்ப என் பொண்ணு ஸ்கூலுக்குப் போகுது. இவ்வளவு ஏன், எந்த மாடுகளோட சாப்பாட்டுல கை வச்சாங்களோ அந்த மாடுகளோட பேரன் மாட்டுக்கே பேரன் பொறந்து மேயப் போயிட்டான். ஆனா, இப்போதான் மாட்டுத் தீவன ஊழல் வழக்குல லாலு குற்றவாளின்னு தெரிஞ்சிருக்குது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்... நீதி என்னைக்காவது கொல்லும் போல!

காதல் என்பதை கர்சீப்ல ஆரம்பிச்சு கடவுள் வரை கம்பேர் பண்ணியாச்சு. சிறை தண்டனை முதல் செருப்பு வரை கம்பேர் பண்ணியாச்சு. ஏன், காதலை சரக்கு புட்டி முதல் போடுற ஜட்டி வரைக்கும் கூட கம்பேர் பண்ணியாச்சு. இப்போ நாங்க சொல்ல வர்றது என்னன்னா, காதல் ஒரு பீம்சிங் படம் மாதிரி.
‘பதிபக்தி’, ‘பாச மலர்’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘பாவ மன்னிப்பு’, ‘பாத காணிக்கை’, ‘பாகப் பிரிவினை’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’, ‘பந்த பாசம்’, ‘பார் மகளே பார்’, ‘பச்சை விளக்கு’ன்னு எப்படி இயக்குனர் பீம்சிங் ‘ப’ வரிசை படங்களா எடுத்தாரோ... அப்படித்தான் காதலும்! பள்ளிக்கூடம், படிக்கிற புக்கு, பார்க், பீச், பைக், பர்ஸ், படம், பஸ், பஸ் ஸ்டாண்ட், பக்கத்துக்கு வீடு, பிசிக்ஸ் லேப்னு ‘ப’ வரிசை இடங்களையும் பொருட்களையும் வச்சே பிறக்கும், இறக்கும்!

‘சிலரை பார்த்தவுடனே புடிக்கும், சிலரை பார்க்கப் பார்க்கத்தான் புடிக்கும்’னு சொல்வாங்கல்ல... அது போல சில செய்தி சேனல்களை பார்க்காம இருந்தாத்தான் புடிக்கும். போன வாரம் ஒரு நாள் எதேச்சையா பார்த்துட்டேன். ‘நெப்போலியன் முடி வெட்டிய நாள் இன்று... அலெக்சாண்டர் ஷேவிங் செய்த நாள் இன்று... அரிஸ்டாட்டில் குளித்த நாள் இன்று’ன்னு ஒரு டம்டம் வாய்ஸ்ல அறிவிக்கிறாங்க. இப்போ இதெல்லாம் கேட்டு நாம என்ன ஐ.ஏ.எஸ் பரீட்சையா எழுதப் போறோம்? நாட்டுல நடக்கிற உண்மைகளை விட்டுட்டு, இதெல்லாம் ரொம்ப முக்கியமா? இந்தாங்கப்பா இதையும் சேர்த்துக்கங்க...

ஜனவரி 7: திவ்யாவுக்கு லவ் லெட்டர் கொடுக்கப் போய், அவங்க சித்தி வித்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்த நாள் இன்று...
பிப்ரவரி 16: வாத்தியார் முன் சீட்டுல இருக்க, பின் சீட்டுல ஃபிரண்டோட அப்பா இருக்க, துட்ட கொடுத்துட்டு பிட்டு படம் பார்க்க முடியாமல் வந்த நாள் இன்று...
மார்ச் 9: பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் காய்ந்த ஜட்டி பறந்து வந்து நம்ம வீட்டு மொட்டைமாடியில் விழுந்த நாள் இன்று...
ஏப்ரல் 23: எதிர் வீட்டு கீதா கையை புடிச்சு இழுத்ததற்காக அவங்க புருஷன் என் பங்காளி உடம்புல தவில் வாசிச்ச நாள் இன்று...
மே 19: சேர்த்து வச்ச மொத்தப் பணத்தையும் கொத்தா சீட்டு கம்பெனிக்காரன் எடுத்துக்கிட்டு ஓடுன நாள் இன்று...
ஜூன் 13: ஆளுக்கு 500 ரூவாவும் ஒரு குவாட்டரும் வாங்கிக்கிட்டு உருப்படாத ஒருத்தனுக்கு உள்ளாட்சித் தேர்தல்ல ஓட்டு போட்ட நாள் இன்று...
ஜூலை 22: முதுகு அழகா இருக்கேன்னு ஸ்கூட்டில போன பியூட்டிய துரத்திக்கிட்டு போயி முகத்தப் பார்த்து, அது பாட்டின்னு கண்டுபிடிச்ச நாள் இன்று...
ஆகஸ்ட் 29: ஆத்திரத்துல மனைவி பாத்திரத்த எடுத்து வீசிய நாள் இன்று...
செப்டம்பர் 11: 9 வருஷத்துக்கு முன்னால பிரதமர் ‘பசிக்குது’ன்னு கடைசியா பேசிய நாள் இன்று...
அக்டோபர் 17: 2 வருஷத்துக்கு முன்னாடி மின்துறை அமைச்சர் ‘இனி மின் வெட்டு இருக்காது’ன்னு சத்தியம் செய்த நாள் இன்று...
டிசம்பர் 24: ஆசையாய் 500 ரூவா கொடுத்து வாங்கிய ஜீன்ஸில் ஜிப்பு போடாமல் வந்த நாள் இன்று...

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தாங்க அன்னைக்கு, சங்கம் வைத்து தமிழ்நாட்ட வளர்க்கிறாங்க இன்னைக்கு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துல ஆரம்பிச்சு, கொழுந்தியாளை கைப்பற்றுவோர் சங்கம், குப்புறப் படுத்து யோசிப்போர் சங்கம், ரூம் போட்டு யோசிப்போர் சங்கம்னு இன்னைக்கு பலப்பல சங்கங்கள். இப்போ ஒரு சின்ன ஜிகுஜிக்கான் விளையாட்டு. கீழ கொஞ்சம் சங்கத்த சொல்றோம்... அதெல்லாம் எந்தெந்த கட்சின்னு கண்டுபிடிங்க பார்ப்போம்...

*  நடந்து போயே நாடாளுவோர் சங்கம்
*  அமாவாசைக்கு அமாவாசை அமைச்சர மாத்துவோர் சங்கம்
*  பல்டி அடிச்சாலும் guiltyயா ஃபீல் பண்ணாதோர் சங்கம்
*  கும்பலோடு கும்மியடிச்சே உண்டியல் குலுக்குவோர் சங்கம்
*  உதவி செஞ்சு உபத்திரவத்தில் மாட்டியோர் சங்கம்
*  கோஷ்டிக்காக வேஷ்டி கிழிப்போர் சங்கம்
*  ஆமாக்கா சொல்லியே அரசியல் செய்வோர் சங்கம்
*  ஆயிரம் தாமரை மொட்டுகள் சங்கம்

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...
காங்கிரஸ் அமைச்சரவை கொண்டு வந்த அவசரச் சட்டத்தை, ‘கிழித்தெறிய வேண்டும்’ என்று சொல்லி, எதிர்க்கட்சிகளைக் குழப்பி கும்மியடித்த ராகுல்ஜி!