ஊறுகாய் : பம்மல் நாகராஜன்





அக்கா நல்ல வசதியானவள். இருந்தும் தம்பி கணேஷைப் பார்க்க வருகிறபோதெல்லாம் ஏதாவது ஒரு அற்பப் பொருளை தம்பி மனைவி அகிலாவிடம் கேட்டு வாங்காமல் போகமாட்டாள்.
இந்த முறை...

‘‘அகிலா... நீ என்ன ஊறுகா வாங்கறே? இருந்தா ஒரு அரை பாட்டில் எனக்கும் கொடு!’’
வாங்கி பையில் போட்டுக்கொண்டு அக்கா சென்றதும் கணேஷ் வருத்தப்பட்டுக்கொண்டான்...
‘‘இது என்ன அற்ப குணம்? வாழ்க்கை, வசதி எதிலுமே குறை இல்லாத அக்கா, நம்ம வீட்டுக்கு வந்து போகிறப்ப எல்லாம் எதுக்கு ‘ஊறுகாயைக் கொடு... மோர் மிளகாயைக் கொடு...’ன்னு பிச்சை எடுக்கறா?’’
அவன் வருத்தத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள் அகிலா.
‘‘மனசைப் புரிஞ்சிக்காம பேசிட்டே போகாதீங்க... இது அவங்களோட பிறந்த வீடுங்கிறதை நாம மறந்துடக் கூடாதுன்னுதான் இப்படி எதையாவது கேட்டு வைக்கிறாங்க. வாழ்க்கையில என்ன இருந்தாலும், எனக்கும் ஒரு பிறந்த வீடு இருக்குங்கறதுல உள்ள சந்தோஷம் வேற எதுலயும் பெண்களுக்கு வராதுங்க. என் தம்பி கொடுத்தான்னு அவங்க புகுந்த வீட்டுக்குக் கொண்டு போற அந்தப் பொருளும் அவங்களுக்கு வெறும் பொருள் இல்லைங்க... சீதனம்! நீங்க நினைக்கிற மாதிரி அது அற்பத்தனமோ, பிச்சையோ கிடையாது. பெண்களின் உரிமை!’’
கணேஷ் உண்மை உணர்ந்து தலைகுனிந்தான்.