ஊட்டிக்கு மூன்றாவது பாதை தேவையா?





‘‘நீலகிரி என்றாலே பலருக்கும் குளுகுளு ஹனிமூனும் சினிமா டூயட்டும்தான் ஞாபகத்துக்கு வருகிறது. உலக அளவில் மிகச் செழிப்பான காட்டு வளமும் இயற்கை வளமும் நிறைந்த இடம் இது. வேறெங்கும் இல்லாத பல அரிய வகை வன உயிரினங்களுக்கு இது தாய்மடி. நீலகிரியின் இந்த சங்கதியெல்லாம் சாதாரண மக்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை... அரசுக்குத் தெரிய வேண்டாமா?’’ - கொதிப்போடு பேசுகிறார் ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ். கோவையிலிருந்து ஊட்டி மலைக்குச் செல்ல ஏற்கனவே இரண்டு பாதைகள் இருக்க, மூன்றாவது பாதை ஒன்றை அமைக்க அரசு முனைவதே இந்தக் கொதிப்புக்குக் காரணம். காளிதாஸ் மட்டுமல்ல... உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பழங்குடிகளையும் எதிர்ப்புக் கொடி உயர்த்த வைத்திருக்கிறது இந்த மூன்றாம் பாதை முன்னெடுப்பு!

‘‘நமது மத்திய அரசும் உலகளாவிய யுனெஸ்கோ அமைப்பும் கூட நீலகிரி மலைப் பிரதேசத்தை உயிர்க்கோள பூமியாக அங்கீகரித்திருக்கின்றன. அரிய வகை தாவரங்கள், பூக்கள், மரங்கள், செடிகள், விலங்கினங்கள், ஊர்வன என்று உலகின் இயற்கைச் செல்வமிக்க இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இதையெல்லாம் தாண்டி, ஊட்டி என்ற உல்லாச ஊரும் அதை முன் வைத்து நடக்கும் பகட்டு வியாபாரமும்தான் நம் முன் நிற்கிறது.

ஊட்டிக்குச் செல்ல இதுவரை குன்னூர், கோத்தகிரி என்ற இரண்டு வழிப் பாதைகள்தான் இருந்து வந்தன. இந்த இரண்டு சாலைகளிலும் அடிக்கடி போக்குவரத்து தடைபடுவதால், மூன்றாவது பாதைக்காக சாலை அளவிடும் வேலையில் நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டிருக்கிறது. இது ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் ஒரு மலைமுகட்டுப் பாதைதான். நீலகிரி வழி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து ஆரம்பிக்கும் இந்தப் பாதை, காரமடை, வெள்ளியங்காடு, அத்திக்கடவு, முள்ளி, கெத்தை, மஞ்சூர் போன்ற இடங்கள் வழியாகப் போகிறது.



வனத்துறைக்குச் சொந்தமான பல அடர்ந்த காட்டுப் பகுதிகளை ஒட்டியும் வெட்டியும் செல்கிறது இந்தப் பாதை. அதுவும் வெள்ளியங்காடு முதல் மஞ்சூர் பிரதேசம் வரை முழுவதும் காட்டுப் பகுதி என்பதால், வனத்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வருகிறது. இப்போதைக்கு முப்பது அடி பாதையாக உள்ள இதை இதுவரை உள்ளூர்வாசிகளும் வனத்துறையினருமே பயன்படுத்தி வந்தார்கள். ஒரு நாளைக்கு நான்கைந்து வாகனங்கள் சென்றாலே அதிகம். இதனால் காட்டுக்கு தொந்தரவு ஏதும் இல்லாமல் இருந்தது. ஆனால், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, காட்டை அழித்து இதை அகலப்படுத்தும்போது, விலங்கினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளையும்.

பொதுவாகவே மனிதர்கள் இல்லாத இடங்களைத்தான் காட்டு உயிரினங்கள் விரும்பும். இந்தப் பாதை திறக்கப்பட்டால், நீலகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மனிதர்கள் புழங்காத இடமே இல்லை என்றாகிவிடும். அப்படியானால், விலங்குகள் எங்கே போகும்? ‘ஊருக்குள் காட்டு யானை புகுந்தது... பல பேரைக் கொன்றது’ என்று வாயில்லா ஜீவன்கள் மேல் பழி போடும் முன், அவை ஏன் அங்கு விரட்டப்படுகின்றன என்று யோசிக்க வேண்டும். இந்தப் பாதை, அப்படிப்பட்ட விபரீத சம்பவங்களை மேலும் வளர்த்துவிடும்!’’ என எச்சரிக்கிறார் காளிதாஸ்.
அரசின் 200 கோடி ரூபாய் ப்ராஜெக்ட் என்று சொல்லப்படும் இந்த மூன்றாவது பாதையால் நீலகிரி பகுதியின் சுற்றுலா வளர்ச்சி விண்ணைத் தொடும் என்கிறார்கள். அதனால் வரக் கூடிய நன்மை, பொருளாதார மேன்மை இதெல்லாம் புரிந்தும் இங்குள்ள மக்கள் இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பது தான் ஹைலைட்!

‘‘எந்த ஒரு மலையையும் மக்கள் தேடி வரக் காரணம், அங்குள்ள இயற்கையும் வனவிலங்கு தரிசனமும்தான். அதை இழந்துவிட்டால், ஊட்டியின் அஸ்திவாரமே ஆடிவிடும். இன்றைய லாபத்துக்காக இயற்கையை அழிப்பது, பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பது போலத்தான். இது புரிந்துதான்  இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள்’’ என்கிற காளிதாஸ், சரியான திட்டமிடலும் நிர்வாகமும் இருந்தால் இப்போதுள்ள இரு பாதைகளே போதுமானவை என்கிறார்.

‘‘குன்னூர், கோத்தகிரி என இன்றிருக்கும் இரண்டு பாதைகளில் குன்னூர் பாதைதான் 80 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. கோத்தகிரி பாதை 15 கி.மீ தூரம் அதிகம் என்பதால் யாரும் அந்தப் பக்கம் போவதில்லை. குன்னூர் பாதையில் டிராஃபிக் ஜாம் ஆகக் காரணம் அதுதான். வரும் வண்டிகளை சரிவிகிதமாகப் பிரித்து விட்டாலே டிராஃபிக் குறைந்து விடும். மழை, வெள்ளக் காலங்களில் ஏற்படும் இயற்கை பாதிப்புகளை நாம்தான் உடனடியாக செயல்பட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். எப்போதாவது ஏற்படும் அந்த அசௌகரியத்துக்காக இத்தனை பெரிய காட்டை காவு கொடுக்க முடியுமா?’’ என்கிறார் அவர் ஆதங்கத்தோடு!
வளர்ச்சி என்பதே இயற்கையை அழிப்பதுதான் என எதிர்கால சந்ததிகளுக்கு நாம் பாடத்தை எழுதி வைக்கப் போகிறோமா?
- டி.ரஞ்சித்