வரதட்சணை

அவனுக்கும் அவளுக்கும் சண்டை முற்றிவிட்டது. ‘‘தோ
பாருடி... வரதட்சணை பாக்கி பத்து பவுன் நகை உடனடியா எனக்கு வேணும். நான்
வேலைக்குப் போயிட்டு வர்றதுக்குள்ள உன் அப்பன் வீட்டுக்குப் போய்
வாங்கிட்டு வா. இல்ல... நான் மனுஷனா இருக்க மாட்டேன்!’’ - எச்சரித்துவிட்டு
அவன் கிளம்பினான். இனிமேலும் தாங்க முடியாதென போலீசுக்கு போன் செய்தாள் அவள். அடுத்த அரை மணி நேரத்தில் காலிங்பெல் அடித்தது. ‘‘நான் இன்ஸ்பெக்டர் ராஜேஷ். இங்க, வசுந்தராங்கறது..?’’ ‘‘நான்தான் சார்... என் புருஷன் வரதட்சணை கேட்டு ரொம்ப டார்ச்சர் கொடுக்கறார்!’’ ‘‘அப்படியா?
நான் நடவடிக்கை எடுக்கறேன்... புகார் எழுதிக் கொடுங்க...’’ - இன்ஸ்பெக்டர்
ராஜேஷ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் டி.எஸ்.பியின் வண்டி வந்து
நின்றது. ‘‘மிஸ்டர் ராஜேஷ்... யூ ஆர் அண்டர் அரெஸ்ட். உங்க மனைவி,
ஐ.ஜிகிட்ட புகார் கொடுத்திருக்காங்க. வரதட்சணை கேட்டு நீங்க அவங்களுக்கு
டார்ச்சர் கொடுத்திருக்கீங்க. இந்த கேஸைப் பார்க்க உங்களுக்குத்
தகுதியில்லை’’ என்றார் டி.எஸ்.பி. தலை கவிழ்ந்து ஜீப்பில் ஏறினான்
ராஜேஷ். வசுந்தரா அதிர்ச்சியின் உச்சத்துக்கே போயிருந்தாள். காரணம்,
முறைத்துக் கொண்டே நகர்ந்த அந்த டி.எஸ்.பி சுந்தரமூர்த்தி, அவள் கணவனேதான்!
|