யானைத் தோழன் மார்க்!

ரிவால்டோ மாதத்திற்கு ஒருமுறையாவது அந்த இடத்துக்கு வந்துவிடும். தொலைதூரத்திலேயே ரிவால்டோவின் வருகையை உணர்ந்து விடுவார் மார்க். தர்ப்பூசணியும் பலாப்பழமும் தயாராக இருக்கும். கூடவே ஒரு பந்தும். உற்சாகமாக வருகிற ரிவால்டோ, தொட்டி தண்ணீரை அள்ளித் தூவி விளையாடும். உற்சாகத்தோடு பந்தை மார்க்கிடம் உதைத்துத் தள்ளும். மார்க் பதிலுக்கு உதைக்க, அந்தக் காட்சி மனிதனுக்கும் வன விலங்குக்குமான உணர்வுபூர்வமான பந்தத்துக்கு சாட்சியாக விரியும்.

ரிவால்டோ என்பது அந்த யானைக்கு மார்க் வைத்த பெயர். மார்க் கால்பந்துப் பிரியர். தன் இல்லத்துக்கு வரும் எல்லா யானைகளுக்கும் பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்கள் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அந்தப் பாதையைப் பயன்படுத்தும் எல்லா யானைகளுமே மார்க்கின் குரலுக்கு சினேகம் காட்டும். போன வாரம் அதே உற்சாகப் பிளிறலோடு வந்தது ரிவால்டோ. ஆனால் பழங்கள், பந்து எதுவும் இல்லை. மார்க்கும் இல்லை. ஆவேசத்தில் மார்க் நட்டு வளர்த்த மரங்களை உடைத்து வீசிவிட்டு காட்டுக்குள் ஓடிவிட்டது. இனி ரிவால்டோ வராது. காரணம், மார்க் இனி இல்லை.
ஊட்டிக்கு அருகில் உள்ள மசினக்குடிக்கு சுற்றுலா செல்லும் எவரும் மார்க் டேவிதாரின் ‘ஷீட்டல் வாக்’ செல்லாமல் திரும்புவதில்லை. வன விலங்குகளின் மானுட நேசத்தை தரிசிக்க அதைவிட சிறந்த இடம் இல்லை. மசினக்குடியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் வாழைத்தோட்டம் பகுதியை ஒட்டி வனத்துக்குள் இருக்கிறது ஷீட்டல் வாக். பரந்து விரிந்த நிலப்பரப்பில் மரத்தால் வேயப்பட்ட குறுகலான வீடு. வீட்டைச் சுற்றிலும் தண்ணீர்த் தொட்டிகள். மான்கள், கரடிகள், சிறுத்தைகள் கூட இங்கு வருவதுண்டு. 25 ஆண்டுகள் அந்த வீட்டில் வாழ்ந்த மார்க், கடந்த அக்டோபர் 20ம் தேதி காலமாகி விட்டார்.

மார்க்கின் தந்தை டேவிதார் புகழ்பெற்ற வழக்கறிஞர். நீலகிரி வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் செயலாளராக நெடுங்காலம் இருந்து வழிநடத்தியவர். யானைகளின் வாழ்க்கை முறை, வழித்தடங் கள் பற்றி ஆராய்ச்சி செய்தவர்.

‘‘நாங்க பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். அப்பா காட்டுக்குள்ள போக வன இலாகா அனுமதிச்சிருந்தாங்க. அவர்கூட நாங்களும் போவோம். சின்ன வயசுல இருந்தே மார்க்குக்கு வன விலங்குகள் மேல ஆர்வம் அதிகம். மரைன் பயாலஜி முடிச்சுட்டு, மும்பை இயற்கை வரலாற்று கூட்டமைப்பிலயும், சென்னை பாம்பு பூங்காவிலயும் வேலை செஞ்சான். 86ல ஷீட்டல் வாக்குக்குப் போயிட்டான். யானைகள், விலங்குகள் கூடவே அவனோட வாழ்க்கையைத் தீர்மானிச்சுக்கிட்டான். மூங்கில் காடுகளை நாடி வர்ற யானைகள் ஏதோ ஒரு நேசத்துல இவனைத் தேடி வரத் தொடங்குச்சு. ஒவ்வொரு யானைக்கும் பேர் வச்சுக் கூப்பிடுற அளவுக்கு அந்த பந்தம் வளந்துச்சு. ரிவால்டோ அவனோட செல்லம்.திருமணம் கூட செஞ்சுக்காம வாழ்ந்துட்டு இயற்கையோட கலந்துட்டான். டயாபடிக் கோமா. எத்தனையோ முறை சிகிச்சைக்காக அழைச்சும், ஷீட்டல் வாக்கை விட்டு வரலே. கோமாவுக்குப் போனபிறகு தான் அங்கிருந்து அவனை வெளியில கொண்டு வந்தோம்...’’ என்று கண்கலங்கச் சொல்கிறார் பிரியா டேவிதார். மார்க்கின் சகோதரி. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு ஷீட்டல் வாக்கில் மார்க்கை சந்தித்தோம். வீட்டின் சுவரெங்கும் யானைகளும் அவரும் இருக்கும் புகைப்படங்கள். ‘‘போன தடவை வந்தபோது, ரிவால்டோ கோபத்துல முறிச்சுப் போட்ட கிளையில திரும்பவும் துளிர் விட்டுடுச்சு. இயற்கைக்கு எவ்வளவு உயிர்சக்தி பாருங்க’’ என்று சிரித்தார்.

மார்க்கைப் பற்றி நிறைய கற்பிதங்கள் உண்டு. அவர் கோபக்காரர், திடீரென அடித்து விடுவார், யாரையும் மதிக்க மாட்டார் என்றெல்லாம் சொல்வார்கள். சூழலியலாளர்கள் அவர் மீது பல விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ‘உப்பையும், பழங்களையும் கொட்டி வைத்து யானைகளை பிச்சைக்கார விலங்கு போல வீட்டு முன் நிற்க வைத்தார்’ என்பது பிரதானமான விமர்சனம். அது உண்மையோ, பொய்யோ... ஆனால் மார்க்கைப் போல ஒரு நேசமிக்க தோழன் இனி ரிவால்டோவுக்கு வாய்க்கப் போவதில்லை.
- வெ.நீலகண்டன்