மீண்டும் சாம்பியன் : விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி





சென்னையின் ஹையாட் ரீஜென்சி ஹோட்டல், இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கும் அந்தப் போட்டிக்காக காத்துக்கொண்டிருக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுதான் முதல் முறை. தற்போதைய உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தும் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சென்னும் மோதும் இந்தப் போட்டி, மழைக்
காலத்திலும் பரபர சூட்டைக் கிளப்பியிருக்கிறது.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர். ஐந்து முறை உலக சாம்பியன். ஆறு முறை ‘செஸ் ஆஸ்கர்’ விருது. இவற்றோடு ‘பத்ம விபூஷண்’, ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ என எத்தனையோ சாதனை மகுடங்களை சூடியிருந்தாலும், இந்த உள்ளூர் போட்டி விஸ்வநாதன் ஆனந்தை ரொம்பவே விறுவிறுப்பாக்கி இருக்கிறது. சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள தீவிரப் பயிற்சியில் இருந்தவரைப் பிடித்தோம்...

‘‘1991ம் ஆண்டு சென்னையில் ‘வேர்ல்டு குவாலிஃபிகேஷன் மேட்ச்’ ஆடினேன். அதன் பிறகு இப்போதுதான் சென்னையில் உலக சாம்பியன்ஷிப் போட்டி விளையாட இருக்கிறேன். உள்ளூர் போட்டி என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி ஜெயிக்க வேண்டும். அதற்காகத் தீவிரப் பயிற்சியில் இருக்கிறேன்.’’
‘‘இந்தியாவில் செஸ் விளையாட்டுக்கான அங்கீகாரம் எப்படி இருக்கிறது?’’

‘‘1980ம் வருடத்தோடு ஒப்பிடும்போது இன்று நிறைய மாறியிருக்கிறது. இப்போது இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்களே சுமார் 30 பேர் இருக்கிறார்கள். கூடவே, பெண்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்கின்றனர். கொனேரு ஹம்பி, ஹரிகா போன்றவர்கள் உலகின் பெண் கிராண்ட் மாஸ்டர்களாக இருக்கின்றனர். செஸ் போட்டியில் உலகின் டாப் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இதில் இந்திய செஸ் கூட்டமைப்பின் பணி அளப்பரியது.’’

‘‘இன்றைய இளம் தலைமுறையினர் செஸ்ஸில் முன்னணியில் வருவதற்கு டிப்ஸ்...’’
‘‘நிறைய போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும். அப்போதுதான் பல மூவ்மென்ட்ஸ் பற்றிய விஷயங்கள் தெரியவரும். இது மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு. இதன் மூலம் திறமையை நன்கு வளர்க்க முடியும்.’’



‘‘உங்களோடு மோதவிருக்கும் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சென் ‘செஸ் ஹிப்னாடிசம்’ அறிந்தவர். பார்வையிலேயே வெற்றியை உறுதி செய்வார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றனவே..?’’
‘‘அதில் எனக்கு நம்பிக்கையில்லை. விளையாட்டுக்கென்று சில கோட்பாடுகள், நெறிமுறைகள் இருக்கின்றன. அதைப் பின்பற்றித்தான் நான் எல்லா போட்டிகளிலும் விளையாடி ஜெயிக்கிறேன்.’’
‘‘மேக்னஸ் கார்ல்சென்னுக்கு உலகின் முன்னணி வீரரான கேரி காஸ்பரோவ் உள்ளிட்டவர்கள் உதவி செய்வதாகக் கூறப்படு
கிறதே..?’’
‘‘எல்லோருக்கும் எல்லோரும் உதவி செய்வது இயல்புதான். இதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?’’
‘‘ஒவ்வொரு போட்டிக்கும் எப்படி தயாராகிறீர்கள்?’’
‘‘உடற்பயிற்சியோடு மனதிற்கும் சில பயிற்சிகளைச் செய்கிறேன். மனம் தெளிவாக இருந்தால், சிந்திக்கும் திறன் நன்றாக இருக்கும். போட்டிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்போதும் எனது டீமோடு செஸ் பயிற்சி செய்து கொண்டே இருப்பேன்.’’
‘‘செஸ் குறித்து அடுத்த கட்ட திட்டம்?’’

‘‘கடந்த 2002லேயே என்.ஐ.ஐ.டியோடு இணைந்து, ‘மைண்ட் செஸ் அகடமி’ என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் இந்தியா முழுவதும் செஸ் விளையாட்டைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் லட்சியம். இப்போது 10 ஆயிரம் பள்ளிகளில் செஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம். இதை இன்னும் மேம்படுத்தி, இந்தியாவை செஸ் விளையாட்டில் நம்பர் ஒன் நாடாகக் கொண்டு வர வேண்டும்’’ - நம்பிக்கையோடு பேசும் ஆனந்தைத் தொடர்கிறார் அவர் மனைவி அருணா ஆனந்த். இந்த உலக சாம்பியனின் சாதனைகளுக்கு பக்கபலமாக இருப்பவர் அவர்தான்.
‘‘டயட், மெடிட்டேஷன் என அவருக்கான எல்லா விஷயத்திலும் இப்போது கவனம் எடுத்து வருகிறேன். அவருக்கு ரசம், தயிர் சாதம் என்றால் ரொம்பப் பிடிக்கும். அடுத்து, சாண்ட்விச் விரும்பிச் சாப்பிடுவார். ஆனால், அதிகம் உணவு எடுத்துக்கொண்டால் விளையாட்டில் கான்சன்ட்ரேட் செய்ய முடியாது. எனவே, போட்டிக்கு முன்பு இதையெல்லாம் நிறுத்தி வைத்திருக்கிறேன். மனசுக்கு ரிலாக்ஸ் வேண்டும் என்றால், நிறைய புத்தகங்கள் படிப்பார். உலகப் பொருளாதாரம், உலக நடப்பு, பிசினஸ் பற்றிய புத்தகங்கள்தான் அவர் சாய்ஸ். பழைய தமிழ்ப் பாடல்களை ரசித்துக் கேட்பார். அவ்வளவுதான், எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் பறந்துவிடும்’’ என்கிறார் அவர் சிரித்தபடி.
- பேராச்சி கண்ணன்