புரோக்கன் பிரிட்ஜ்! : தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாலம்





‘எங்கேயோ பார்த்திருக்கேனே...’ என மூளையைச் சொறிய வைக்கிறதா இந்தப் பாலம். யெஸ்! நம் தமிழ் சினிமாவில் ஐ லவ் யூ சொல்லும் காட்சியோ... அதிரடி சண்டைக் காட்சியோ... ஆளரவமில்லாத இந்த உடைந்த பாலம்தான் ஆப்டான லொக்கேஷன். சென்னை பட்டினப்பாக்கத்தில்... அடையாற்றின் முகத்துவாரத்தில் இருக்கும் இந்தப் பாலத்தை ‘புரோக்கன் பிரிட்ஜ்’ என்றே அழைக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஹீரோ சென்னை வந்துவிட்டார் என்பதற்கு அடையாளமாய் காட்டப்படும் சென்ட்ரல் ஸ்டேஷன், எல்.ஐ.சி பில்டிங் வரிசையில் இப்போது இந்த அரைப் பாலமும் அட்மிஷன் வாங்கியிருக்கிறது!

‘‘சென்னை சாந்தோம் பீச்சையும் எலியட்ஸ் பீச்சையும் அடையாறு பிரிக்குதுங்க. அந்த ரெண்டுத்தையும் சேர்க்குற மாதிரி 1967ல கட்டப்பட்ட பாலம்ங்க இது. இந்தப் பக்கம் உள்ள மீனவர்கள் பத்து வருஷம் இதைப் பயன்படுத்தியிருக்காங்க. பட்டினப்பாக்கம், ஊரூர், ஆல்காட் குப்பத்து ஆளுங்களுக்கு இது ரொம்ப உபயோகமா இருந்துச்சு’’ என்கிறார்கள் புரோக்கன் பிரிட்ஜ் சுற்று வட்டார மக்கள்.

ஒரு சிறிய கார் மட்டுமே செல்லும் அளவிலான இந்தப் பாலம் வழியே மீனவர்கள் விரைவாக படகுத் துறைமுகத்தை அடைய முடிந்ததாம். ஆனால், 1977ல் அடித்த பெரும்புயலில் ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்தபோது இந்தப் பாலம் உடைந்து போனது. அதன் பிறகு சீரமைக்கப்படவே இல்லை. அந்த சோகத்தின் மிச்சம்தான் இன்று ‘ஹாட்’ ஷூட்டிங் ஸ்பாட்டாக உருவாகியிருக்கிறது.

‘‘1971ல் எம்.ஜி.ஆர் நடிச்ச ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ‘கடலோரம் வாங்கிய காற்று...’ பாட்டு, இந்த பிரிட்ஜில் எடுத்ததுதான். அப்போ இது முழுசா பயன்பாட்டுல இருந்துச்சு. இதோட மொத்த அழகையும் பிரமாண்டத்தையும் அந்தப் பாட்டுல பார்க்க முடியும்’’ என்கிறார் இருபது வருடங்களாக தமிழ் சினிமாவில் லொக்கேஷன் மேனேஜராகப் பணியாற்றும் பட்டினப்பாக்கம் ஜெயராம்.



‘‘ ‘ரிக்ஷாக்காரன்’ ஷூட்டிங் நடந்தப்ப மொத்த சென்னையே இந்தப் பக்கம் கூடியிருந்தது. எம்.ஜி.ஆரைப் பார்க்க ஒரே தள்ளுமுள்ளு. போலீஸ் பந்தோபஸ்தும் போட்டுருந்தாங்க. அப்போ நான் சின்ன பையன். எம்.ஜி.ஆரைப் பார்த்தே ஆகணும்ங்கற வெறியில, நாங்க ஒரு டீமா அடையாறு தண்ணிக்குள்ள குதிச்சு உள் நீச்சல்லயே பிரிட்ஜ் ஓரத்துக்குப் போய் அவரைப் பார்த்தோம்’’ என்கிற ஜெயராம்தான் தற்காலத்தில் இந்தப் பாலத்தை சினிமா ஷூட்டிங்குகளுக்கு ஏற்ப ஏற்பாடு செய்து தருகிறார்.


‘‘இந்த பிரிட்ஜ்ல சிவாஜி கணேசன், அசோகன் நடிச்ச படங்களெல்லாம் ஷூட்டிங் நடத்தியிருக்காங்க. உடைஞ்சு பாழடைஞ்ச ஒரு பாலம், பேக்கிரவுண்டில் பெரிய பெரிய கட்டிடங்கள்னு ஒரு கான்ட்ராஸ்ட்டான லுக்கை தர்றதுனால, இப்பவும் இந்த லொக்கேஷன் விரும்பப்படுது. சென்னையில் ஒரு லோக்கல் ஏரியான்னா அதுக்கு இந்த பிரிட்ஜ் காட்சிதான் ஐகான். விஜய், அஜித், சூர்யான்னு இப்போதைய முன்னணி நடிகர்களையும் இது பார்த்துடுச்சு. ‘ஆய்த எழுத்து’ படத்துல சூர்யாவும் மாதவனும் சந்திக்கிற காட்சி இந்த பிரிட்ஜ்லதான் நடக்கும். ‘வாலி’ படத்துல அஜித் வேகமா பைக்ல வந்து நின்னு, ஜோதிகா பத்தி சிம்ரன் கிட்ட வர்ணிக்கிற சீனும், ‘ஓ சோனா...’ பாட்டும் இங்கதான் எடுத்தாங்க. ‘சென்னை 28’ படத்துல சிவாகிட்ட ஜெய், ‘உன்னைத்தான் ஹீரோயின் காதலிக்கிறா’ன்னு சொல்வாரே... அந்த சீன் இங்க எடுத்ததுதான். இன்னும், ‘இயற்கை’, ‘மாற்றான்’னு நிறைய படங்கள்ல இந்த பிரிட்ஜ் வந்திருக்கு.


இப்பவும் பல டைரக்டர்களுக்கு இந்த இடத்துல ஷூட்டிங் எடுக்க பிடிச்சிருக்குன்னா, அழகான கடல் காற்றோடு இது ஒரு அமைதியான லொக்கேஷனா இருக்குறதுதான் காரணம். இப்ப ஒரு இங்கிலீஷ் படத்துக்குக் கூட இந்த லொக்கேஷனைப் பாத்துட்டு போயிருக்காங்க. சீக்கிரம் ஹாலிவுட் புகழே கிடைக்கப் போகுது!’’ என்கிறார் பட்டினப்பாக்கம் ஜெயராம்.
குறையைக் கூட நிறையாக்கிக்கணும்னு இதை வச்சி கருத்து சொல்லலாம் போலிருக்கே!
- பேராச்சி கண்ணன்
படங்கள்: புது£ர் சரவணன், ஏ.டி.தமிழ்வாணன்