எனக்கு விஜய் தேவை விஜயைக்கு நான் தேவையில்லை : பரபரக்கும் ஜீவா


மீடியா பக்கம் ஜீவா தலைகாட்டி ரொம்ப நாள் ஆகிவிட்டது. தீபாவளிக்கு முந்தைய ஒரு மாலையில் அவரை சந்திக்கச் சென்றபோது குழந்தை ஸ்பர்ஷுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ‘‘ரொம்ப ரிலாக்ஸா இருக்கீங்க போல?’’ என்றதும் பரவசமானார். ‘‘குழந்தைகள் உலகமே தனிதான் சார். எந்த கமிட்மென்ட்டும் இல்லை. அடுத்து எடுத்து வைக்கும் அடி சறுக்குமா என்ற குழப்பமோ, தயக்கமோ இல்லை. நமக்குத்தான் தலைக்குள்ள ஏகப்பட்ட பிரச்னைகள்; குழப்பங்கள். ம்... என்ன கேட்டீங்க? ரிலாக்ஸா இருக்கீங்கன்னுதானே... அதான் இல்லை. வரிசையா படங்கள், ஷூட்டிங் என்று ஷெட்யூல் டைட்டா போகுது!’’ - மடியில் இருந்த மகனை இறக்கிவிட்டு பேசத் தொடங்குகிறார்...

இடையில கொஞ்சம் கேப் விழுந்தது மாதிரி இருக்கே?
‘‘ ‘என்றென்றும் புன்னகை’, ‘யான்’ என்று ஒரே நேரத்தில் இரண்டு படங்களோட ஷூட்டிங். இதுக்குப் பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படம், சமுத்திரகனி, சாய்ரமணி இயக்கும் படங்கள், தவிர வேறு மூன்று படங்கள் என்று அடுத்த வருஷம் மட்டும் அரை டஜன் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். ஒரு ரசிகனோட மனநிலையில், நிதானமா உட்கார்ந்து, கவனமா கேட்டு, கதைகளைத் தேர்வு செஞ்சிருக்கேன். கண்டிப்பா எல்லாம் வெற்றியா அமையும். எல்லா ஹீரோக்களும் இயக்குனர்களும், தங்களோட படம் ஜெயிக்கும்னு நினைச்சிதான் பண்றாங்க. அதையும் மீறி படம் தோல்வி அடைஞ்சா என்ன செய்ய முடியும்? நினைக்கிறதெல்லாம் நடந்திட்டா எல்லாருமே கடவுள் ஆகிடுவாங்களே. சினிமாக்காரங்களுக்கு ரசிகர்கள்தான் கடவுள். அவங்கதான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறாங்க...’’எப்படி வந்திருக்கு ‘என்றென்றும் புன்னகை’?
‘‘பியூட்டிஃபுல் ஸ்டோரி. ‘வாமனன்’ படத்துக்குப் பிறகு அஹ்மத் இயக்கியிருக்கார். எனக்கு அதில விளம்பரப் பட இயக்குனர் கேரக்டர். என்னோட படங்களில் இது புது வெரைட்டியா இருக்கும். த்ரிஷா, ஆண்ட்ரியான்னு ரெண்டு ஹீரோயின்கள். காதல், காமெடி, கொஞ்சம் கண்ணீர்னு கலர்ஃபுல் ப்ளஸ் யூத்ஃபுல்லான படமா அமைஞ்சிருக்கு. சந்தானத்தோட காமெடிக்கு வழக்கம் போலவே வரவேற்பு கிடைக்கும். படம் டிஸ்கஷனில் இருக்கும்போதே, மியூசிக் ஹாரிஸ் ஜெயராஜ்னு முடிவு பண்ணியாச்சு. ‘நான் லேட்டாதான் வொர்க் பண்ணித் தருவேன்’னு ஆரம்பத்திலேயே ஹாரிஸ் சொல்லிட்டார். டைம் எடுத்துக்கிட்டுதான் பாடல்களை முடிச்சிக் கொடுத்தார். லேட்டா தந்தாலும் லேட்டஸ்டா தந்திருக்கார்னு பாராட்டத் தோணுற மாதிரி எல்லாப் பாடல்களும் இருக்கு!’’

‘யான்’ பட்ஜெட் விஷயத்தில் பிரச்னை ஆகி நிற்கிறதா ஒரு பேச்சு இருக்கே?
‘‘அப்படி எதுவும் இல்லை. வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாத ஒரு இளைஞனுக்கு காதலில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு வெளிநாடு போறான். அங்கும் ஒரு பிரச்னை. அதை சமாளித்து எப்படி தப்பி வர்றான் என்பதுதான் கதை. மொராக்கோ நாடுதான் கதைக் களம். க்ளைமாக்ஸ் சீன் மட்டும் பாக்கி இருக்கு. பெரிய டீமே மொராக்கோ போகவேண்டி இருக்கிறது. விசா வருவதில் கொஞ்சம் தாமதம் ஆனதால் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். இன்னும் சில நாட்களில் ஷூட்டிங் கிளம்பிடுவோம்.’’

‘முகமூடி’ மாதிரி ஒரு படத்தை நான் இயக்கியிருக்கக் கூடாது என்று மிஷ்கின் சொல்லியிருந்தாரே... பார்த்தீங்களா?
‘‘நான் இதுவரைக்கும் 22 படங்கள் நடிச்சிட்டேன். எல்லாப் படமும் வெற்றிப் படம்னு சொல்லமுடியாது. அது மொக்கை படமா இருந்தாலும் நான் நடிச்ச படம் என்னோட சொத்து. ஒவ்வொருத்தருக்கும் அவரவரோட படம், குழந்தை மாதிரிதான். ‘முகமூடி’ பண்ணினது தப்புன்னு நான் சொல்லமாட்டேன் சார். இந்தக் காலைப் பாருங்க... (பேன்ட்டை இழுத்துவிட்டுக் காட்டுகிறார்) எத்தனை அடிபட்டிருக்கேன், எவ்வளவு கஷ்டப்பட்டேன், அந்தக் காயங்கள் ஆற எத்தனை நாளாச்சுன்னு எனக்கும் தெரியும்; மிஷ்கினுக்கும் தெரியும். அந்த டிரஸ்ஸை போட்டுக் கழற்றும்போதெல்லாம் தண்ணியா கொட்டும். அதெல்லாம் என்னோட வியர்வை! கடுமையான உழைப்பைக் கொட்டி நடிச்ச படம். இப்ப நான் எழுதிக் கொடுக்கிறேன்... வியாபார ரீதியா அந்தப் படம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் தரலை.

எனக்கும் பிசினஸ் தெரியும்!
எனக்கு இப்போ 29 வயசுதான் ஆகுது இந்த வயசுக்குள்ள ‘ராம்’, ‘கற்றது தமிழ்’, ‘டிஷ்யூம்’, ‘ஈ’, ‘நண்பன்’, ‘கோ’, ‘சிவா மனசில சக்தி’ என்று நிறைய வெரைட்டியான கேரக்டர்களில் நடிச்சிட்டேன். இந்த லிஸ்ட்டில் ‘முகமூடி’யும் இருக்கு. ‘முகமூடி அங்கிள்’னு கூப்பிடுற அளவுக்கு சின்னக் குழந்தைகள் வரை ரீச்சான கேரக்டர் அது. அதை நான் ஒருபோதும் விட்டுக் கொடுக்கமாட்டேன். இளம் நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் எத்தனை பேர் நடிக்கிறாங்கன்னு கணக்கெடுத்துப் பாருங்க. ஒரு சிலர்தான் இருப்பாங்க. இந்த லிஸ்ட்டில் நான், தனுஷ், ஆர்யாதான் இருக்கோம்னு என்னால உறுதியா சொல்ல முடியும்.’’

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று ஒரு செட் கலக்கிட்டு இருக்காங்களே?
‘‘ரொம்ப சந்தோஷப்படுறேன் சார். ஒரு படம் ஓடினால் பலருக்கும் வாழ்க்கை கிடைக்குது. அந்த வகையில் இப்போ புதுப்புது முயற்சிகள் நடக்குது. தியேட்டர்கள் கல்யாண மண்டபங்களாக மாறிட்டிருந்த காலம் போய், மண்டபங்கள் தியேட்டர்களாக மாறிட்டு வருது. படத்துக்கு தியேட்டர் கிடைப்பதே கஷ்டமா இருக்கு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அஞ்சாறு படங்கள் ரிலீஸ் ஆகுது. விஜய்சேதுபதி நடிக்கிற படங்கள் பிளாக் காமெடியா இருக்குன்னு சில பேர் சொன்னாங்க. பிளாக் காமெடியோ, புளூ காமெடியோ, ரசிகர்களுக்கு படம் பிடிச்சிருக்கா என்பதுதான் முக்கியம். முன்னாடியெல்லாம், ‘சார்... ஒரு கதை சொல்லணும்’ என்று உதவி இயக்குனர்கள் வருவாங்க. இப்போ அப்படியெல்லாம் இல்ல. ‘ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன்... சி.டி இருக்கு! பிடிச்சிருந்தா கூப்பிடுங்க’ன்னு ரொம்ப தன்னம்பிக்கையோட வந்து சொல்லிட்டுப் போறாங்க. சினிமா இப்போ மாறிடுச்சு...’’

உங்களோட ‘நீ நல்லா வருவடா’ படத்திலிருந்து நஸ்ரியாவை நீக்கிட்டதா பேச்சு இருக்கே?
‘‘எங்க கம்பெனி தயாரிக்கிற படம்தான் அது. ஆரம்பத்தில் அந்தத் தலைப்பு இருந்தது. இப்போ அது மாறுது. அதைத் தவிர படத்தில் எந்த மாற்றமும் செய்யல. ‘நய்யாண்டி’ பிரச்னையின்போது எனக்கும் நிறைய பேர் போன் பண்ணாங்க. ‘நஸ்ரியா குடைச்சல் கொடுக்குற பொண்ணு, மாட்டிக்காதீங்க ஜீவா’ன்னு அட்வைஸ் பண்ணாங்க. பத்திரிகைகளிலும்கூட, ‘நஸ்ரியா பிரச்னை கொடுப் பார் என்பதால் ஜீவா படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள்’ என்று நியூஸ் வந்துச்சு. எல்லாமே வதந்தி. என் ஜோடியா நஸ்ரியா நடிப்பது உறுதி. அவங்க நல்ல நடிகைங்க!’’

உங்க கம்பெனி தயாரிக்கற ‘ஜில்லா’வில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறீங்களாமே?
‘‘இது வேறயா... அந்த நியூஸும் பொய்தான். என்னோட படத்துக்கு வேணும்னா விஜய் தேவைப்படலாம். ஆனா அவரோட படத்துக்கு நான் தேவையில்லைங்க. இதுதான் யதார்த்தம்!’’
- அமலன்