தேர்தல் களத்தை புனிதப்படுத்துமா நோட்டா?





இதற்காகத்தான் காத்திருந்தார்கள் இளைஞர்கள். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, நல்லவரோ, கெட்டவரோ யாரேனும் ஒருவரைத் தேர்வு செய்தே ஆகவேண்டும். இல்லையா, ஓட்டுச்சாவடிக்குப் போகாமல் தவிர்க்க வேண்டும் (ஆனாலும் உங்கள் ஓட்டு பதிவாகிவிடும் என்பது வேறு கதை). இதைத் தவிர வாக்காளனுக்கு தேர்தலில் வேறு எந்த உரிமையும் இல்லை. ஏற்கனவே ‘49 ஓ’ வசதி இருந்தது. யாருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்றால், இந்தப் படிவத்தை நிரப்பிக் கொடுத்துவிட்டு வரலாம். ஆனால், ஆர்வக்கோளாறில் சிலர் ‘49 ஓ’ போட்டு பட்ட பாடு..! பலருக்கு குடிநீர் கட்டாகி விட்டது. சிலருக்கு ரேஷன் கிடைக்கவில்லை. இன்னும் சிலர் வீட்டுக்கு கியூ பிரிவு போலீசார் போய், ‘உங்களுக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்டு பீதியைக் கிளப்பி விட்டார்கள்.

இந்த அவலங்களுக்கு எல்லாம் தீர்வு வந்து விட்டது. தைரியமாக வாக்குச் சாவடிக்குப் போய், ‘எந்த வேட்பாளருக்கும் எனது வாக்கு இல்லை’ என்று பதிவு செய்து விட்டு வரலாம். ‘வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒவ்வொரு சின்னத்துக்கும் ஒவ்வொரு பட்டன் இருப்பதைப் போல, ழிஷீஸீமீ ஷீயீ tலீமீ கிதீஷீஸ்மீ  ழிளிஜிகி (எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போட விரும்பவில்லை) என்ற பட்டனையும் சேர்க்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. நவம்பர், டிசம்பரில் நடக்கவுள்ள டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டசபை தேர்தலிலேயே இந்த ‘நோட்டா’ பட்டனைப் பொருத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள ஏற்காடு இடைத் தேர்தலிலும்   ‘  நோட்டா’ உண்டு. 

‘எல்லா வேட்பாளர்களும் தகுதியற்றவர்கள் என்று வாக்காளர் கருதினால், அனைவரையும் நிராகரிக்கும் வகையில் தேர்தல் எந்திரத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்’ என்று கோரி 2004ல் மக்கள் சிவில் உரிமைக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில், ‘அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையும், அதை ரகசியமாகத் தெரிவிக்கும் உரிமையும் வாக்காளருக்கு உண்டு’ என்று தீர்ப்பெழுதி உள்ளது.



‘‘நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சட்டசபைகளும், மக்களவையும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களால் நிறைந்து விட்டன. எல்லாக் கட்சிகளுமே பணபலம், ஆள்பலம் உள்ளவர்களையே களத்தில் நிறுத்துகின்றன. ‘கடந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 543 உறுப்பினர்களில் 125 பேர் மீது குற்ற வழக்குகள் உண்டு’ என்கிறார்கள். இந்தியாவில் மொத்தமுள்ள 4032 எம்.எல். ஏக்களில் 1250 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. 

இப்படிப்பட்டவர்கள் தேர்தல் களத்துக்கு வரும்போது, அமைதியைக் குலைத்து மிரட்டல் மூலமும் பணத்தின் மூலமும் ஓட்டை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். வெற்றி பெற்று மக்களவைக்கோ, சட்டசபைக்கோ சென்றால், குற்றங்களுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் சட்டங்களைத் தோற்கடித்து முடக்கி விடுவார்கள். இதனால் ஜனநாயகமே கேலிக்கூத்தாகி விடுகிறது. இனி தைரியமாக வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் செல்லலாம். தகுதியற்ற வேட்பாளர்களை நிராகரிக்கலாம்’’ என்கிறார் ‘இந்தியன் குரல்’ அமைப்பின் நிர்வாகி இ.பாலசுப்பிரமணியன்.



‘‘நோட்டா நடைமுறை அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பை உண்டாக்கும்’’ என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ. ‘‘இளைஞர்களுக்கு அரசியல் மீது விரக்தி உருவாகியுள்ளது. அவர்கள் தங்கள் மனநிலையைத் தெரிவிக்க நோட்டா சரியான வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இனி நல்லவர்கள் தேர்தல் களத்துக்கு வருவார்கள். இப்போது வெறும் 35% வாக்குகள்தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன. நோட்டா இந்த நிலையை மாற்றும். கடந்த தேர்தலில் ‘49 ஓ’ முறையில் 24,591 பேர் வாக்கைப் பதிவு செய்தார்கள். அதிகாரிகள், பூத் ஏஜென்ட்கள் முன்னிலையில், ‘நான் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பவில்லை’ என்று எழுதி கையெழுத்திட வேண்டும். வெளிப்படையான நடைமுறையாக இருந்ததால் பலர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்று விட்டார்கள். நான் ‘49 ஓ’ போட்டுவிட்டு வெளியே வந்தபிறகு, அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருங்கிணைந்து என்னைக் கேள்வி கேட்டார்கள். சிலர் விரோதிகளாக மாறிவிட்டார்கள்.

நோட்டா பட்டன் கொண்டு வருவதால் இனி எந்த அச்சமும் இல்லாமல் எதிர்மறை வாக்குகளைப் பதிவு செய்யலாம். பணபலத்தையும், ஆள்பலத்தையும், ஜாதி அடையாளங்களையும் பார்த்து வேட்பாளரைத் தேர்வு செய்த கட்சிகள், மக்களுக்கு இணக்கமான, நல்ல மனிதர்களை களத்தில் இறக்குவார்கள். ஆனால் இன்னொரு பயமும் தோன்றுகிறது. கொள்கையளவில் வெவ்வேறு திசையில் நிற்கும் கட்சிகள் தங்களுக்குப் பாதிப்பு என்றால் ஒரே அணியில் திரளத் தயங்க மாட்டார்கள். தகவல் அறியும் உரிமை சட்டத்திற்குள் கட்சிகளும் வரவேண்டும் என்ற தகவல் ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக சட்டத்தையே திருத்தியவர்கள், இந்த நோட்டாவுக்கு எதிராக அணி திரளாமல் இருக்க வேண்டும்’’ என்கிறார் சிவ.இளங்கோ.



‘‘இது மாற்றத்துக்கான தொடக்கமே தவிர, அதுவே எல்லாவற்றையும் மாற்றிவிடாது’’ என்கிற லோக் சத்தா கட்சியின் மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரன், இதன் பின்னால் உள்ள நடைமுறைச் சிக்கல்களை அலசுகிறார்.
‘‘நிராகரிப்பு வாக்குகள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது பற்றி உச்ச நீதிமன்றம் எந்த விளக்கமும் சொல்லவில்லை. ‘பெரும் பான்மை வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று பதிவு செய்தாலும், மற்ற வேட்பாளர்களில் யார் அதிக வாக்கு பெற்றுள்ளாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்’ என்கிறது தேர்தல் கமிஷன். என்றால் ‘நோட்டா என்பது செல்லாத வாக்கு’ என்று பொருளாகி விடுகிறது. இது வாக்காளர்களின் உணர்வைப் பதிவு செய்வதாக இருக்குமே தவிர, செயல் அளவில் இது எந்த மாற்றத்தையும் உருவாக்காது.

குறிப்பிட்ட சதவீதமோ அல்லது வேட்பாளர்களை விட அதிகமாகவோ நோட்டா வாக்குகள் பதிவாகி இருந்தால், அந்தத் தொகுதியில் தேர்தலையே ரத்து செய்யவேண்டும். மேலும் அங்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அப்படியான நிலை வந்தால்தான் இளம் தலைமுறைக்கு நம்பிக்கை ஏற்படும். அப்படி நம்பிக்கை ஏற்பட்டால்தான் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாகும்’’ என்கிறார் ஜெகதீஸ்வரன்.
அரசியல் களத்தை புனரமைப்பதற்கான அடிக்கல்லை ‘நோட்டா’ வடிவில் நட்டிருக்கிறது நீதிமன்றம். இந்த நல்ல தொடக்கத்தை தேர்தல் ஆணையம் எப்படி முன்னெடுத்துச் செல்கிறது என்பதில்தான் இந்தியாவின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.
- வெ.நீலகண்டன்