கமலுக்கு முத்தம் தர மாட்டேன்!





நிஜத்தில் ஊதா கலர் ரிப்பன் கட்டி இருக்கீங்களா ஸ்ரீதிவ்யா?
ஸ்கூல் படிக்கிறப்போ ரெட்டை ஜடை போட்டிருக்கேன். ஆனா ரிப்பன் கலர் ஊதா இல்லை, சிவப்பு.

பசங்க கலாய்ச்சிருக்காங்களா?
குனிஞ்ச தலை நிமிராம ஸ்கூலுக்கு போனதால யாரும் கலாய்ச்சாங்களான்னு பார்த்ததில்ல. ஆந்திரா பசங்க ரொம்ப நல்லவங்க!


தமிழில் பிடித்த ஹீரோ?
கமல் சாரை பார்த்துத்தான் எனக்கு சினிமால நடிக்கிற ஆசையே வந்தது. அவர் மாதிரி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படு றேன். கமல் படத்திலேயே நடிக்க வாய்ப்பு கிடைச்சா என்னோட அதிர்ஷ்டமா நினைப்பேன்.

முத்தக்காட்சி இருந்தா முரண்டு பிடிப்பீங்களா?
ஆமா. கமலா இருந்தாலும் அதுக்கு மட்டும் நோ! அந்த சீனுக்கு மட்டும் டூப் வச்சிக்கிட்டா சந்தோஷமா நடிப்பேன்.

படிச்ச படிப்பென்ன, நடிக்கப் போற படமென்ன?
பி.ஏ பொலிட்டிகல் சயின்ஸ் படிக்கிறேன். ஜி.வி.பிரகாஷ் ஜோடியா ‘பென்சில்’, சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு ஜோடியா ஒரு படம் உட்பட மூன்று படங்கள் கையில இருக்கு....


சமைக்க பிடிக்குமா? சாப்பிட மட்டும்தான் தெரியுமா?
சிக்கன் வகையறா சமைக்கறதில நான் கில்லாடி. என்னோட சமையலுக்கு என் அம்மாவும் அக்காவும் ரசிகர்கள். ஆனா எனக்கு பப்புன்னா ரொம்ப பிடிக்கும்.

யார் அந்த பப்பு?
ஹய்யோ... பப்புன்னா தெலுங்கில் பருப்பு குழம்புன்னு அர்த்தம். 

சினிமா தவிர வேறென்ன தெரியும்?
ஃபேஷன் டிசைனிங் தெரியும். பெல்லி டான்ஸ் கத்துக்கிட்டு வர்றேன்.

உங்க அக்காவும் நடிகைதானே?
ஆமா. அவ பேரு ஸ்ரீரம்யா. எங்களுக்குள்ள போட்டி இல்லை. அவளோட செல்லம் நான். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை அடுத்தடுத்த ஷோ பார்த்து என்னை அவ பாராட்டியதை நினைச்சா பெருமையா இருக்கு. ஏன்னா சிறந்த நடிப்புக்காக ஆந்திராவில் நந்தி விருதெல்லாம் அவ வாங்கியிருக்கா.



யாரோட இடத்துக்கும் நான் ஆசைப்படல!

என்ன படம் பண்றீங்க மனீஷா?
‘ஜன்னல் ஓரம்’, ‘பட்டைய கிளப்பு பாண்டியா’ படங்களில் நடிக்கிறேன். நான் மாடர்ன் பொண்ணு. ஆனா ரெண்டு படத்திலுமே கிராமத்துப் பொண்ணா வர்றேன்.
கிளாமர் குயினை கிராமத்து மயிலாக்கிட்டாங்களேன்னு வருத்தமா இருக்கா?
நோ... நோ... ஐ லைக் திஸ் கேரக்டர்ஸ். என்னதான் மாடர்ன் பொண்ணா இருந்தாலும் எனக்கு புடவை, தாவணிதான் ரொம்ப பிடிக்கும். கிராமத்து கலாசாரம், பண்பாடு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
‘பட்டைய கிளப்பு பாண்டியா’ன்னா அர்த்தம் தெரியுமா?
ரொம்ப ஜாலியான டைட்டில்னு தெரியுது. ஃபுல் மீனிங் தெரியல. கொஞ்ச நாளாதான் தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன். நெக்ஸ்ட் இயர் உங்ககிட்ட திருக்குறளுக்கே மீனிங் சொல்றேன்... ஓகேவா?
திருவள்ளுவரை தெரியுமா?
ஐ நோ வெரி வெல். அவருக்கு வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் பெரிய சிலை இருக்கறதும் தெரியும். ரொம்ப பெரிய மனிதர் அவர்.
ஜன்னல் ஓர சீட்டுக்காக சண்டை போட்டதுண்டா?
இல்லை. பெரும்பாலும் கார்லதான் போவேன். அதனால ஜன்னல் பக்கத்திலதான் உட்கார்ந்துக்குவேன். ஃபிளைட்ல போனா கூட விண்டோ சீட் எனக்கு அமைஞ்சிடும்.
தமிழில் யாரோட இடத்தைப் பிடிக்க நினைக்கறீங்க?
எனக்குன்னு ஒரு இடத்தை கடவுள் எப்போதோ முடிவு பண்ணியிருப்பார். அந்த இடத்தை தக்க வைக்க ஒழுங்கா உழைச்சாலே போதும். யாரோட இடத்துக்கும் நான் ஆசைப்படல!
சீனியர் ஹீரோக்கள் பிடிக்குமா? புதுசா கலக்குற ஹீரோக்கள் பிடிக்குமா?
அஜித், விஜய், சூர்யா, விக்ரமில் தொடங்கி சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, விமல் என்று எல்லா ஹீரோக்களையும் பிடிக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமை இருக்கு. அவரவர்களுக்கென்று ஒரு ஸ்டைல் இருக்கு. தமிழ் சினிமாவில் புதுப் புது கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள் நிறைய வருது. அதனால தமிழ்ப் படங்களில் நடிக்கறதையே நான் பெருமையா நினைக்கிறேன்!



விஜய் மாதிரி தலை ஆடுச்சு!

ஆருஷின்னா அர்த்தம் என்ன?
‘ஒருநாளில் வெளிப்படும் முதல் சூரிய வெளிச்சம்’னு அர்த்தம்.
சூரிய உதயத்துக்குள்ள எழுந்திருக்கும் பழக்கம் இருக்கா?
லேட்டா தூங்கப் போனா லேட்டாதான் எழுந்திருப்பேன். சீக்கிரமா தூங்கிட்டா என்னோட பேருக்கான அர்த்தத்தைப் பார்த்திடுவேன்.
சினிமால நடிக்க வர்றதுக்கு முன்பு என்ன பண்ணினீங்க?
அப்போதும் நடிச்சிட்டுதான் இருந்தேன். யெஸ். குழந்தையா இருந்தப்பவே நடிக்க வந்திட்டேன். ஹீரோயின் ஆகுறதுக்கு முன்னாடி நூற்றுக்
கணக்கான விளம்பரப் படங்களில் நடிச்சிட்டேன். என்னோட விளம்பரப் படங்களைப் பார்த்துட்டுதான் ‘அழகன் அழகி’யில் ஹீரோயின் வாய்ப்பு வந்தது.
நடிக்கிற படங்கள்?
தமிழில் ‘அடித்தளம்’, ‘வேல்முருகன் போர்வெல்’. தெலுங்கில் இரண்டு படங்கள். ‘அடித்தளம்’ படத்தில் சித்தாள் கேரக்டரில் நடிச்சிருக்கேன். முதல் நாள் ஷூட்டிங்கில் கலவை சட்டியை தலையில் வச்சதுமே விஜய் சார் மாதிரி தலை மட்டும் தனியா ஆடினப்போதான் அவங்களோட கஷ்டம் தெரிஞ்சது.
விஜய் மாதிரி தலை ஆட்டுறது கஷ்டமா, ஈஸியா?
அய்யய்யோ! ஒருநாள் முழுக்க கூட கலவை சட்டி தூக்குறேன். இப்படி கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தாதீங்க...
எந்த ஹீரோவை பிடிக்கும்?
இதுவும் வம்பு கேள்விதான். எல்லாரையுமே பிடிக்கும் என்றாலும் அதிகமா ‘ஜெயம்’ ரவியை பிடிக்கும். அவரோட முதல் படத்திலிருந்து அவரோட ரசிகையாகிட்டேன்.
கனவு கேரக்டர்?
கனவுக்கும், கண்களுக்கும் சம்பந்தம் இருக்காதுன்னு சொல்வாங்க. அந்த வகையில் ‘நான் கடவுள்’ பூஜா மாதிரி பார்வையற்ற பெண்ணா
நடிக்கணும்னு ஆசை இருக்கு. பார்வையற்றோருக்காக நிறைய உதவி செய்யணும்னு நினைக்கிறேன்.
அப்போ ஆக்டர் ஆகியிருக்கலைன்னா அம்மா, அப்பா ஆசைப்படி டாக்டர் ஆகியிருப்பீங்க?
இல்ல. எனக்கு ரத்தம் பார்த்தாலே மயக்கம் வந்திடும். ஊசியைப் பார்த்தாலே அழுதிடுவேன். நல்லவேளை, எங்கிட்ட இருந்து பேஷன்ட்ஸ் தப்பிச்சுட்டாங்க.



மெரினா பீச்சில் குதிரை சவாரி!

மகிமா, சினிமாவுக்கு இஷ்டப்பட்டு வந்தீங்களா, கஷ்டப்பட்டு
வந்தீங்களா?
இஷ்டப்பட்டுதான் வந்தேன். அப்பா ரெயில்வேயில வேலை பார்க்கிறார்; அம்மா டீச்சர். நான் படிப்புல சுட்டி. பயோ மெடிக்கல் படிக்கலாம்னு ஆசைப்பட்டேன். சினிமா வாய்ப்பு வந்ததும் எல்லாமே டிராக் மாறிடுச்சு. இப்போ வீட்ல இருந்தபடியே பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிறேன்.

எதுக்கெல்லாம் அழுவீங்க?
யாராவது திட்டினா, ‘வேணாம்... நான் அழுதிடுவேன்’னு வடிவேலு மாதிரி சொல்லிட்டு அடுத்த நொடியே அழுதிடுவேன். ஒன்பதாவது படிக்கும்போது செல்லமா ஒரு நாய் வளர்த்தோம். மேக்ஸ்னு அதுக்குப் பேரு. திடீர்னு ஒரு நாள் அது உலகத்தை விட்டு போயிடுச்சு. அத நினைச்சி மூணு நாள் சோறு, தண்ணி இல்லாம அழுதிருக்கேன்.

இப்போ நடிக்கிற படங்கள்?
‘என்னமோ நடக்குது’, ‘புரவி 150 சிசி’, ‘மொசக்குட்டி’, ‘அன்னப்
பறவை’. செல்லப் பிராணிகள்னா எனக்கு உயிர். நடிக்கிற படங்களோட பேருகூட எனக்குப் பொருத்தமா அமைஞ்சிருக்கு பாருங்க.

புரவின்னா என்னன்னு தெரியுமா?
குதிரைதானே? நான் குழந்தையா இருந்தப்போ என் அப்பாவுக்கு சென்னையிலதான் வேலை. அப்போ மெரினா பீச் கூட்டிட்டுப் போய் குதிரை சவாரி பண்ண வச்சிருக்கார். படத்தோட தலைப்புதான் ‘புரவி’. மற்றபடி படத்தில் நான் பைக்தான் ஓட்டுறேன். அரை மணி நேரத்தில் பைக் ஓட்ட கத்துக்கிட்டு நடிச்சேன். பெங்களூரு ரோட்ல ஷூட்டிங் நடந்தப்போ ஒரு வண்டி மேல மோதி சின்ன விபத்து நடந்துடுச்சு.

பிடிச்ச ஹீரோ, ஹீரோயின்?
சூர்யான்னா எனக்குக் கொள்ளை பிரியம். அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தா என்னோட வாழ்நாள் ஆசை நிறைவேறிடும். நடிகைகளில் அனுஷ்காவை பிடிக்கும். அவர் நடிச்ச ‘அருந்ததி’, ப்ரியாமணியோட ‘பருத்திவீரன்’ ரோல் மாதிரியான கேரக்டர்களில் நடிக்க ஆசை.

படிக்கும்போது லவ் லெட்டர் கொடுத்த பையனை ஞாபகம் இருக்கா?
இதென்ன கலாட்டா? அதுக்கு சான்சே இல்லை. அம்மா டீச்சரா இருந்த ஸ்கூல்லதான் நானும் படிச்சேன். அம்மா கையைப் பிடிச்சிட்டே ஸ்கூல் போவேன். திரும்பி வரும்போதும் அப்படித்தான். டீச்சர் பொண்ணுக்கு லவ் லெட்டர் தர்ற தைரியம் எந்த பையனுக்காவது வந்திருக்குமா?
- அமலன்