பகுத்தறிவியல் நாம்தான் முன்னோடி


‘பகுத்தறிவு பூமி’ என தமிழ்நாட்டை தாராளமாகச் சொல்லலாம். கடவுளை முற்றிலும் மறுக்க முடியவில்லை என்றாலும், மதவாதம் இங்கே மாலை சூட முடியாது. பொதுவுடைமையில் இருந்து பிரித்தறியப்பட்ட தனித்துவம் தமிழ்நாட்டு பகுத்தறிவுக்கு உண்டு. இந்தப் பகுத்தறிவுப் பாரம்பரியம் தமிழ்நாட்டில் பெரியாரிடமிருந்துதான் தொடங்கியதாக நாமே நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த அடிப்படையைத் தகர்க்கிறது வீ.அரசுவின் சமீபத்திய ஆராய்ச்சி. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவரான இவர், ‘‘1878 முதலே பகுத்தறிவுக்கென தனியொரு அமைப்பு கண்டவர்கள் தமிழர்கள்’’ என்கிறார் ஆதாரத்தோடு.

‘‘தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில்தான் பகுத்தறிவு விதை ஊன்றப்பட்டது. பதினாறாம் நூற்றாண்டிலேயே ப்ரூணோ போன்ற அறிவுவாதிகள் கிறிஸ்தவ மதத்தின் மூடநம்பிக்கைக்கு எதிராக கடும் பிரசாரம் செய்தார்கள். ‘உலகம் தட்டையானது’ என்று கிறிஸ்துவ மதம் அடம் பிடித்தபோது அறிவியலால் அதைத் தட்டிக் கேட்டார்கள் பகுத்தறிவுவாதிகள். இதனாலேயே, மதவாதிகளால் வேட்டையாடப்பட்டும் வந்தார்கள். இதன் உச்சமாக 1850களில் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது ‘லண்டன் செக்யூலர் சொசைட்டி’ எனும் மதச்சார்பின்மை அமைப்பு. இதன் கிளையாக சென்னையில் ‘இந்து சுயாக்கியானிகள் சங்கம்’ என்ற அமைப்பு துவங்கப்பட்டது’’ என்கிறார் அரசு. இந்தப் பெயரில் உள்ள இந்து என்ற சொல் மதத்தைக் குறிக்கவில்லை. இந்தியா என்ற நிலவியல் பகுதியையே சுட்டுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

‘‘இந்த அமைப்பின் சார்பில், ‘தத்துவ விசாரிணி’ என்ற பெயரில் தமிழ் இதழ் ஒன்றும், ‘தி திங்கர்’ (ஜிபிணி ஜிபிமிழிரிணிஸி) எனும் ஆங்கில இதழ் ஒன்றும் நடத்தப்பட்டன. சமத்துவம், சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, விதவைத் திருமணம் எனப் பலவற்றையும் இந்த இதழ்கள் அன்றைக்கே அலசியிருக்கின்றன. அன்றைய ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பெல்லாம் அவற்றில் இடம்பெற்றுள்ளன. 1882க்குப் பின் இந்த அமைப்பு ‘சென்னை இலௌகிக சங்கம்’ என்று மாறியது. ‘தத்துவ விசாரிணி’ இதழ், ‘தத்துவ விவேசினி’ என்று பெயர் மாற்றம் பெற்றது. அப்போது முதல் 1888 வரையில் வெளியான இதழ்கள்தான் என்னிடம் கிடைத்தன. அவற்றைத்தான் இப்போது தொகுத்திருக்கிறேன்’’ என்கிற அரசு, இந்த இயக்கத்தில் மற்ற செயல்பாடுகள், எழுதியவர்களின் வரலாறு, தமிழரிடையே அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது போன்ற முழுமையான வரலாற்றை தேடிக் கொண்டிருக்கிறாராம். 

‘‘அப்போது ‘விவேசினி’ இதழ் சுமார் 400 பிரதிகள் வரை விற்பனையாகியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் அது மிகப்பெரிய எண்ணிக்கை. அந்தக் காலத்தில் பெரும் புரட்சியாளர்களாக அறியப்பட்ட பெருமக்கள் பலரும் இந்த இதழ்களில் பகுத்தறிவுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களின் நிலங்களைப் பறித்து உயர் சாதியினருக்குக் கொடுக்க ஆங்கில அரசாங்கம் முயற்சித்தபோது, அதற்காகப் போரிட்டு பெயர் பெற்ற வேங்கடாசலனார் இதற்கு மிகச் சிறந்த உதாரணம். அதே போல மாசிலாமணி எழுதிய ‘வருண பேத விளக்கம்’ என்ற புத்தகம் தமிழ் அறிஞர்கள் பலரும் அறிந்த ஒன்று. அந்தப் புத்தகத்தையே இந்த இலௌகிக சங்கம்தான் வெளியிட்டிருக்கிறது எனும்போது, இந்த இயக்கத்தின் அன்றைய செல்வாக்கை நிச்சயம் குறைத்து மதிப்பிட முடியாது. மேலும், ஒரு தனிநபரின் பெயரால் இயங்காமல் பல்வேறு நபர்களால் சங்கம் செயற்படுத்தப்பட்டதிலிருந்தே அது ஒரு மக்கள் இயக்கம் என்பதை யூகித்துவிட முடியும்’’ என்கிற அரசு, இந்தச் சங்கத்தைப் பற்றி அறிய நேர்ந்தது தற்செயலாகத்தானாம்.

‘‘ஆம், ஒருமுறை சென்னை எழும்பூரில் இருக்கும் அரசு ஆவணக் காப்பகத்துக்குச் சென்றிருந்தபோது, ஆங்கிலேயர் காலத்து ஆவணங்களோடு ஆவணமாக இந்தச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகளைப் பார்த்தேன். ஆங்கில நிர்வாகத்தில் நடந்த பல குளறுபடிகளைக் கூட இந்தச் சங்கம் தட்டிக் கேட்டிருக்கிறது. அன்று துவங்கிய ஆவலால், தேடலைத் துவக்கினேன். சென்னை அண்ணா அறிவாலய நூலகர் சுந்தரராஜனின் உதவியாலும், பெரியார் ஆராய்ச்சியாளர் ஆனைமுத்துவின் பேராதரவாலும்தான் பழைய விவேசினி இதழ்கள் எனக்குக் கிடைத்தன. அனைத்துத் தமிழர்கள் சார்பாக அவர்களுக்கு நன்றி!’’ என்கிற பேராசிரியர், வரலாற்று ரீதியாக இந்த ஆய்வுக்கும் தொகுப்புக்கும் பெரும் முக்கியத்துவம் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்...

‘‘இந்திய வரலாற்றை எழுதுபவர்கள் எல்லோருமே வங்காளத்தில்தான் சீர்திருத்தத்துக்கான முன்னோடிகள் இருந்தார்கள் என்று எழுதுகிறார்கள். காரணம், பெரியாருக்கு முன்பு இங்கே பகுத்தறிவு கிடையாது என்ற முன்முடிவுதான். ஆனால், சமயச் சார்பின்மைக்கும் பெண் கல்வி உள்ளிட்ட சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கும் தமிழகம் என்றுமே முன்னோடி என்பதற்கு இது நல்லதொரு சான்றாக அமையும். இந்திய பகுத்தறிவு வரலாற்றில் தமிழகத்துக்கு இனி தனி இடம் கிடைக்கும்’’ என்கிறார் அரசு, பெருமையாக!
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்