மாஸ் ஹீரோ... பாஸ் ஹீரோ!

டெக்னாலஜி நம் வாழ்வை எளிதாக்கினாலும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதை ‘ஹைப்பர்லூப்’ பற்றிய கட்டுரை தெளிவுபடுத்திவிட்டது. மொத்தத்தில், ‘டெக்னாலஜி ஸ்பெஷல்’ சூப்பர்!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.

‘ரசிக்க என்கிட்ட என்ன இருக்குன்னு புரியலை’ என வெள்ளந்தியாக விளிக்கும் குழந்தை மனசு ஷகீலாவையா கொச்சைப்படுத்தி படமெடுத்திருக்கிறார்கள்? அந்தக் கிராதகர்கள் ஒழிக!
- கவியகம், காஜூஸ், கோவை-24.

அட்ரா சக்கை... ‘கவர்ச்சி பாம்’ நமீதாவுக்கு குமரி மாவட்ட ‘மச்சான்ஸ்’ சிலை வைக்கப் போறாங்களா? கல்லுக்குள் ஒரு கட்டை என இதை வர்ணிக்கலாமா?
- ப்ரியன், திருச்சி.

வெங்காய விலை உயர்வு பின்னணியில் இவ்வளவு அதிரடி சம்பவங்களா? படிக்கப் படிக்க என்னையும் அறியாமல் ஆவேசப்பட்டேன்!
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

‘சரித்திர நாயகன் சந்திரபாபு’ பற்றிய கட்டுரை, இளைய தலைமுறையினருக்கு ஓர் ஊக்க மருந்து. தற்கொலை வழக்கில் நீதிபதிக்கு சந்திரபாபு அளித்த பதில்கள் கண்களைக் குளமாக்கின.
- கல்யாணி, கோபி.

‘கலகல ஸ்பெஷல்’ புத்தகம் மனதில் மத்தாப்பாக பூத்தது! ஆல்தோட்ட பூபதி அள்ளித் தந்த ‘அன்றும் இன்றும்’ அனைத்தும் நன்று. ஐம்பதாண்டு கலாசார மாற்றத்தை அச்சுப் பிசகாமல் சொன்ன விதம் அருமை.
- வரலட்சுமி முத்துசாமி, சென்னை-37.

இரண்டு வருடங்கள் வீட்டில் உட்கார்ந்து விட்ட சூழ்நிலையின் வருத்தங்கள் வடிவேலுவின் ஆழ்மனதில் இன்னமும் இருப்பதை பேட்டியில் உணர முடிந்தது. நல்ல காமெடி நடிகரை காலம் கைவிட்டு விடாது.
- முத்தையா தம்பி, சிதம்பரம்.

பல்லைப் பயன்படுத்தி பார்வையை மீட்டுத் தரும் மருத்துவப் புரட்சி மகத்தானது! ‘பல் போனா... சொல் போச்சு...’ என்பார்கள். ஆனால் இனி ‘பல் போனா.... பார்வை வந்துச்சு’ என மாற்ற வேண்டும் போலிருக்கிறது!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

அஜித்-ஆர்யா... ஒரு மாஸ் ஹீரோ, ஒரு ‘பாஸ்’ ஹீரோ... இவர்களின் கூட்டணியில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் ‘ஆரம்பம்’, ரசிகர்களின் குதூகலம், கொண்டாட்டம் அனைத்தையும் ஆரம்பித்து வைக்கட்டும்!
- லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கைப்பேசி மூலமே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் திலீப்பின் முயற்சி அசத்தல். எல்லா அரசு ஆசிரியர்களும் இவரைப் போலிருந்தால் மாணவர்களுக்கு கல்வியும் ஒரு பள்ளித் தோழனாகி விடும்!
- எஸ்.வாசுதேவன், சென்னை-14.

‘நிழல்களோடு பேசுவோம்’ பகுதியில் ‘சைக்கிளிங்’கின் அவசியத்தை மனுஷ்ய புத்திரன் விளக்கிய விதம், ‘இந்த சின்ன விஷயத்திலாவது மேல் நாடுகளை நாம் ஒழுங்காகக் காப்பியடிப்போமா..?’ என்று ஏங்க வைத்தது.
- எஸ்.பிரசன்னகுமார், காட்பாடி.