வானத்தில் விளக்கேற்றுவோம்! : தீபாவளியில் புது கலாட்டா





‘‘இதென்னப்பா புது பட்டாசு... வானத்துல இவ்வளவு நேரம் வட்டமடிக்குது’’ என சென்னையின் பல பகுதிகளை வியக்க வைத்துவிட்டது அந்த வஸ்து. என்னவோ வேற்றுகிரக பறக்கும் தட்டு போல ஒளிப்பிழம்பாக வானத்தில் மிதந்த அது, நிஜத்தில் ஒரு பட்டாசு வகை அல்ல. பறக்கும் விளக்கு... ‘ஸ்கை லாந்தர்’ என்கிறார்கள் இதை. இந்த வருடம், தீபாவளி பட்டாசு விற்பனையில் கணிசமான சதவீதத்தை இந்த லாந்தர் லபக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்

விற்பனையாளர்கள். அப்படி என்ன இதில் ஸ்பெஷல்?
‘‘பட்டாசு மாதிரி இதில் புகை இல்ல சார்... கெமிக்கல் இல்ல... கையில் வெடிச்சிடுமோன்னு பயம் இல்லே. போன வருஷத்தில் இருந்துதான் நம்ம ஊரில் இதுக்கு செல்வாக்கு கூடியிருக்கு. விற்பனையைப் பொறுத்தவரை போன வருஷத்துக்கும் இந்த வருஷத்துக்கும் 200 சதவீதம் வளர்ச்சி!’’ என்கிறார் மும்பையைச் சேர்ந்த அல்டாப் டாவூடானி. இப்போதைக்கு சீனாவில் இருந்து இறக்கு
மதியாகும் இந்த ஸ்கை லாந்தரின் இந்திய வினியோகஸ்தர் இவர்.

‘‘பல வருஷமா இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் எல்லாத்துக்கும் பட்டாசு விநியோகஸ்தராவும் இருக்கேன் சார். இது பட்டாசு இல்ல... ஹாட் ஏர் பலூன் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க. கீழ நெருப்பு எரிய, மெகா சைஸ் பலூன் ஒண்ணு மனுஷங்களைத் தூக்கிட்டுப் பறக்கும். அதோட மினி வெர்ஷன்தான் இந்த ஸ்கை லாந்தர். கலர் கலரான பேப்பர்ல செய்யப்படுற இதுல சின்னதா ஒரு மெழுகுவர்த்தி இருக்கும். அதைப் பத்த வச்சிட்டா, மெதுவா மேலெழும்பி பறக்கும். ராத்திரியில கலர்ஃபுல்லா ஜொலிக்கும். ‘ஹேப்பி தீபாவளி’ மாதிரி வாக்கியங்கள் பிரின்ட் செய்யப்பட்டதும் இருக்கு. ப்ளெய்னாவும் வருது. அதுல நாமே ‘ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ’னு பர்சனல் மெசேஜ் எழுதிப் பறக்க விடலாம். தீபாவளி மட்டுமில்லாம, தனிப்பட்ட விழாக்கள், பார்ட்டிகளுக்குக் கூட இதை மொத்தமாக வாங்குறாங்க’’ என்கிறார் அவர்.

சென்னையில் சென்ற வருடம் முதலே இந்த ஸ்கை லாந்தர் பறக்கவிட்டு தீபாவளி கொண்டாடி வருகிறது ஐசெக் (கிமிணிஷிணிசி)   என்ற சர்வதேச மாணவர் அமைப்பு. இந்த வருடமும் வருகிற நவம்பர் 10 அன்று ஒரே மைதானத்தில் சுமார் 2000 ஸ்கை லாந்தர்களைப் பறக்கவிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

‘‘சுற்றுச்சூழலுக்காக பட்டாசைத் தவிர்க்கிறவங்க கூட இந்த ஸ்கை லாந்தரை ஏத்துக்கறாங்க. நாங்க தீபாவளிக் கொண்டாட்டமா மட்டுமில்லாம, எங்க அமைப்பு பத்தின விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த நினைக்கிறதுனால இந்த வகைக் கொண்டாட்டத்தைத் தேர்ந்தெடுத்தோம். இது தீபாவளியைத் தாண்டியும் உற்சாகம் தர்ற அழகான விஷயம்!’’ என்கிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியும் ‘ஐசெக்’ அமைப்பின் மார்க்கெட்டிங் துணைத் தலைவருமான பிரியதர்ஷினி.


சைனீஸ் லாந்தர், கிங்மிங் லாந்தர் எனப் பல பெயர் களாலும் அழைக்கப்படும் இது, ஏற்கனவே சீனாவிலும் தாய்லாந்திலும் செம பாப்புலர். இறைவனின் அருள் பெற அனுப்பும் தூதாக தாய்லாந்து மக்கள் இதைப் பார்க்கிறார்கள். ஆனாலும் உலகில் சில நாடுகள் இதைத் தடை செய்துள்ளன. பொதுவாக நெருப்பு அணைந்தபின் கீழிறங்கும் இவை, சில சமயம் அணையாமலே இறங்கி தீ விபத்தாகலாம் என்பதுதான் அதற்கு பிரதான காரணம். சமீபத்தில் கொல்கத்தாவில் கூட, இந்த ஸ்கை லாந்தரைப் பறக்க விடும் முன் தீயணைப்புத் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நம்மூரிலும் விரைவில் இது விவாதமாகலாம். அதற்குள் முடிந்தவரை ஸ்கை லாந்தரை ரசித்துக் கொள்ளுங்கள்!
- நவநீதன்