நிழல்களோடு பேசுவோம் : அநாமதேய அழைப்புகள்

‘‘ஹலோ, மனுஷ்ய புத்திரன் இருக்காரா?’’
‘‘நீங்க யாருங்க?’’
‘‘அவரோட ஃபேனுங்க...’’
‘‘நான்தான் பேசுறேன்... சொல்லுங்க!’’
‘‘அய்யா வணக்கம்... நீங்க மனுஷ்ய புத்திரன் சார்தானே?’’
‘‘நானேதான்... என்ன விஷயம்?’’
‘‘அய்யா, நல்லாருக்கீங்களா... உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.’’
‘‘சொல்லுங்க...’’
‘‘ஏண்டா டேய்... மவனே, உனக்கு அறிவிருக்கா? நேத்து டிவில என்னடா பேசின நாயே?’’
- இதற்குமேல் எழுதினால் எடிட் செய்துவிடுவார்கள். இந்தவகையான தொலைபேசி அழைப்புகளை எதிர்கொள்வது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதில் பாதிக்கு மேல் சர்வதேச அழைப்புகள். அமெரிக்கா, லண்டன், நைஜீரியா, துபாய் என்று எங்கெல்லாமோ இருந்து வரும். பெரும்பாலும் இரவில் அழைப்பதுதான் அதிகம். தூங்கிவிட்டால் போன் சைலன்ட்டில் இருக்கும். காலையில் என்னென்னவோ எண்களிலிருந்து மிஸ்டு கால் இருக்கும். ‘ஆம்பளையா இருந்தா போனை எடுடா’ என்ற குறுஞ்செய்திகள் வேறு. ஆம்பளையா இருப்பதற்கும் போனை எடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் பிடிபடவே இல்லை.

ஆரம்பத்தில் இந்த அழைப்புகள் எனக்குக் கொஞ்சம் பதற்றத்தை உண்டாக்கின. கொலை மிரட்டல்கள் வரும்போது, கேட்டருகே யாராவது நிற்கிறார்களா என்று லேசாக எட்டிப் பார்ப்பேன். ஆனால் வர வர இந்த அழைப்புகள் எனக்கு பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறிவிட்டன. எனக்கு நேரமும் மனநிலையும் இருந்தால் அழைப்பவரின் திட்டுகளை வாங்கிக் கொண்டு பொறுமையாக விளக்குவேன். நான் டி.வியில் சொன்னதற்கும் அவர் புரிந்துகொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை எடுத்துக் கூறுவேன். ஆனால் அவர் அத்தனையையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு பிறகு விட்ட இடத்திலிருந்து திட்ட ஆரம்பிப்பார். எனக்குப் பொறுமை இல்லாவிட்டால் பதிலுக்குத் திட்டுவேன். அல்லது போனை ஆன் செய்து தூரமாக வைத்துவிட்டு நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்த்துக்கொண்டிருப்பேன், தானே கத்தி அடங்கட்டும் என்று!‘‘புது நம்பர் வந்தால் எடுக்காதே’’ என்று நண்பர்கள் சொல்கிறார்கள்... செய்யலாம்தான்! ஆனால் திடீரென புதிய வாசகிகளோ, பழைய காதலிகளோ அழைத்துவிட்டால் என்ன செய்வது? பத்து வருடமாக இதே எண்ணைத்தான் பயன்படுத்துகிறேன். இந்த பலவீனங்கள் வழியாகத்தான் புல்லுருவிகள் நம்மைக் கையாள்கிறர்கள். அவர்கள் உள்ளே வருவதற்கு எப்படியும் ஒரு கதவை நாம் திறந்து வைத்திருப்போம் என்று அவர்களுக்குத் தெரியும்.

எனது எண் எப்படி திடீரென இவ்வளவு ஆட்களுக்குக் கிடைக்கிறது என்று ஆரம்பத்தில் குழம்பிப் போனேன். பிறகு அது பெரிய விஷயமல்ல என்பது தெரிந்தது. என்னைத் துன்புறுத்த வேண்டும் என்று விரும்பும் யாரோ ஒருவர், அந்த எண்ணை தனது ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது  வலைப் பக்கத்திலோ போட்டுவிட்டு, ‘இவனை இந்த எண்ணில் கூப்பிட்டுத் திட்டுங்கள்’ என்று பகிரங்க அழைப்பு விடுப்பார். அதைப் பார்த்துவிட்டு சில கிரிமினல்களுடன் சேர்ந்துகொண்டு பல அப்பாவி கோயிந்துகளும் போன் செய்ய ஆரம்பிப்பார்கள். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் இருக்கிறது. இப்படி போன் செய்பவர்களில் இதுவரை ஒருவர்கூட பெண் இல்லை. ஏன், பெண்களுக்கு ஒருவரை போனில் அழைத்து ஆபாசமாகத் திட்ட வேண்டும் என்று தோன்றவே தோன்றாதா? மொத்த வன்முறையையும் ஆபாசத்தையும் ஆண்களே குத்தகைக்கு எடுத்துக்கொண்டு விட்டார்களா?

இதில் மிகப்பெரிய வேடிக்கை, ஒரு பிரச்னை தொடர்பாக வரும் வன்முறை தொலைபேசி அழைப்புகள் 24 மணி நேரத்துக்கு மேல் நீடிக்காது என்பதுதான். அந்த ஒரு நாள் அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டால் பிறகு உயிருக்கு ஆபத்தில்லை. அழைப்புகள்

நின்றுவிடும். ஏன், அவர்கள் கொள்கைவெறி ஒரு நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்காதா?
அல்லது ஒரு நாளில் களைத்துப் போய்விடுகிறார்களா? அல்லது அடுத்த நாள் வேறு யாரையாவது திட்டப் போய்விடுகிறார்களா?
இப்படி போன் செய்பவர்கள்மீது காவல்துறையில் புகார் செய்யும்படி நணபர்கள் வலியுறுத்துகிறார்கள். ஆனால் அதனால் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நண்பன் ஒருவன் ஒருமுறை அப்படி போன் செய்தவர்களின் எண்களைக் கேட்டான். நான் இரண்டு மூன்று எண்களைக் கொடுத்தேன். அதை என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டேன். ‘‘எங்காவது பப்ளிக் டாய்லெட்டில், ‘உடனே அழைக்கவும் - இப்படிக்கு வந்தனா’ என்று ஏதாவது ஒரு பெண் பெயரைப் போட்டு எழுதிப் போட்டுவிடுவேன். அந்த ஆளுக்கு ஒரு நாளைக்கு 50 காலாவது போகும். பயங்கர மென்டல் டார்ச்சராக இருக்கும்’’ என்றான். யாரோ ஒரு பெண்ணின் பெயர் அத்தகைய ஒரு செயலுக்கு பயன்படுத்தப்படுவதை நான் விரும்பவில்லை. அதற்குப் பிறகு அவனிடம் நான் எந்த நம்பரையும் கொடுக்கவில்லை.

இப்படி இருட்டில் நின்று கல்லெறியும் இவர்கள் எல்லாம் யார்? இவர்கள் மனசிற்குள் இவ்வளவு பெரிய இருட்டு எப்படி வந்தது? ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள், யாரையாவது பழிவாங்க வேண்டும் என்றால் சுவர்களில் ஒரு பையனையும் பெண்ணையும் சேர்த்து எதையாவது எழுதிப் போடுவார்கள். மொட்டைக் கடுதாசி எழுதுவது இன்னொரு தாக்குதல் யுக்தி. அண்டை வீட்டாரிலிருந்து அரசாங்கம் வரை இதை ஒரு கலையாகவே பயின்றவர்கள் இருக்கிறார்கள். காதல் விவகாரங்களிலிருந்து தொழில் போட்டி வரை எதெதற்கோ மொட்டைக் கடுதாசிகள் ஆயுதமாகப் பயன்பட்டிருக்கின்றன. இதெல்லாம் பழைய யுத்திகள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு முகமூடித் தாக்குதல்களின் வடிவம் முற்றிலும் மாறிவிட்டது மட்டுமல்ல, அது புதிய வலிமையைப் பெற்றுவிட்டது எனலாம். மேலே குறிப்பிட்டது போல பொதுப் பிரச்னைகளுக்காக அநாமதேய தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்களை எதிர்கொள்வது ஒரு வகை. நன்கு தெரிந்தவர்கள் முகமூடி மனிதர்களாக மாறி தாக்குதல் நடத்துவது இன்னொரு வகை.

எனக்குத் தெரிந்த ஒரு பெண், ஃபேஸ்புக்கில் ஒருவருடன் நண்பரானார். பிறகு ஏதோ பிரச்னையில் எல்லா ஃபேஸ்புக் நட்புகளையும் போல அதுவும் முறிந்துவிட்டது. திடீரென அந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் அந்த நண்பரின் புகைப்படத்தையும் இணைத்து ஒரு ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. மிகவும் பதற்றமடைந்த அந்தப் பெண், ஐ.டி துறையில் இருக்கும் தன் நண்பர்களின் உதவியை நாடினார். அவர்கள் ஒரு சுவாரசியமான உண்மையைக் கண்டுபிடித்துச் சொன்னார்கள். ஏற்கனவே இவருடன் நட்பை முறித்துக்கொண்ட நண்பரின் ஐ.பி அட்ரஸும் (இன்டெர்நெட் இணைப்பும்) அந்த அவதூறான பக்கம் உருவாக்கப்பட்டிருந்த ஐ.பி அட்ரஸும் ஒன்றாக இருந்தது.

இன்னொரு சிநேகிதி ஒருவருடன் நெருங்கிப் பழகினார். திருமணம் செய்துகொள்வதாக இருந்தார்கள். சந்தோஷமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்கள். பிறகு எதனாலோ அந்தக் காதல் முறிந்துவிட்டது. அந்த நபர் இந்தப் பெண்ணைப் பற்றிய அவதூறான மின்னஞ்சல்களையும் அவருடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அந்தப் பெண்ணின் வட்டத்தில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பத் தொடங்கினார். அந்தப் பெண் குரூப் மெயில் அனுப்பும் பழக்கம் உள்ளவர். அதிலிருந்து அந்தப் பெண்ணின் வட்டத்தில் இருக்கும் அனைவரின் மின்னஞ்சல் முகவரிகளையும் எடுத்துவிட்டார். அவருடைய நோக்கம், அந்தப் பெண்ணைப் பற்றிய சந்தேகங்களை எல்லோரிடமும் உருவாக்குவதன் வாயிலாக அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்துவது. அவரைப் பற்றிய சந்தேகங்களை பிறரிடம் உருவாக்கி அவரைத் தனிமைப்படுத்துவது.

குற்ற மனப்பான்மை கொண்ட மனநோயாளிகளுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு வெறுப்பதற்கு ஏதாவது ஒரு இலக்கு தேவைப்படுகிறது. அதற்காக அவர்கள் எப்பொழுதும் கற்பனை எதிரிகளை உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்; அல்லது தங்களுக்கு வேண்டிய ஒருவரையே எதிரியாக மாற்றிக்கொள்வார்கள். எதிரி ஒரு கணம் நம்மால் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர அவர்களுக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது. கொள்கைகள், கருத்துகள், காதல், துரோகம் என்பதெல்லாம் வெறும் சாக்கு மட்டுமே.
மனிதர்கள் வீழ்ச்சியடைவது போல இந்த உலகில் வேறு எந்த ஜீவராசியும் இப்படியெல்லாம் வீழ்ந்து அழிவதில்லை.
(பேசலாம்...)

நெஞ்சில் நின்ற வரிகள்

‘காதல் ஓவியம்’ படத்தில் இடம்பெற்ற ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடலை அது வெளிவந்த காலம் தொட்டு எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இழந்த காதலின் ஆறாத் துயரை இவ்வளவு உக்கிரமாக ஒரு பாடலில் எழுப்ப முடியுமா என்று வியந்திருக்கிறேன். இழந்த ஒருவரை வேறொரு பொருந்தாத சந்தர்ப்பத்தில் சந்திப்பதைவிட அவலம் ஏதுமில்லை. கண்முன் இருந்தும் கையில் எடுத்துக்கொள்ள முடியாத வெளிச்சம் அது. வைரமுத்து தனது கவித்துவத்தின் உச்சங்களைத் தொட்ட பாடல்களில் ஒன்று...
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ
அது சுடுவதைத் தாங்க முடியுமோ
என்ற சொற்களில் இதயம் ஒரு கணம் விம்மித் தணிகிறது.
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்துச் சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
என்ற வரிகளை எஸ்.பி.பி பெரும் நடனமாக மாற்றுகிறார். காதலின் சொல்லித் தீராத துயரங்களை எவ்வளவு சொன்னாலும் கொஞ்சம் மிஞ்சி விடத்தான் செய்கிறது.

மனுஷ்ய புத்திரன் பதில்கள்

பணம் பாதாளம் வரை பாயுமாமே... பாதாளம் என்றால் என்ன?
- எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.
நிலக்கரிச் சுரங்க விவகாரமாக இருக்குமோ?
நல்லவர்களை கடவுள் அடிக்கடி சோதிப்பது ஏன்?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
கெட்டவர்களை சோதிப்பது கொஞ்சம் ரிஸ்க் என்று அவரும் நினைக்கிறாரோ என்னவோ!
மருத்துவர் ராமதாஸ் அவர்களின் கூட்டணி எப்படிப்பட்டது?
- அ.குணசேகரன், புவனகிரி. 
மருத்துவம் தேவைப்படும்
கூட்டணி.
மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது?
- லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.
கட்டுப்படாமல் இருந்தால்தான் அதற்குப் பெயர் மனம்.
வெளிநாட்டு ஆயுதக் கப்பல் மர்மம் என்ன?
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன் புதூர்.
இந்தியக் கடலோரம் எவ்வளவு தூரம் பாதுகாப்பாக இருக்கிறது என்று யாரோ செய்த ஒத்திகை போல இருக்கிறது.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை -600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
மீனீணீவீறீ: மீபீவீtஷீக்ஷீ@ளீuஸீரீuனீணீனீ.நீஷீ.வீஸீ)

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்

‘கார்கி என்கிற பூனைக் காதலி’ என்ற உபபெயருடன் எழுதும் கார்கி மனோகரன் கேலியும் கிண்டலுமான
பதிவுகளை எழுதிச் செல்பவர். ‘சோஷியலா பழகுற பொண்ணு ஃப்ரண்டா வேணும், ஆனா அதே மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களாம்... நியாமாரே!’ என்று எழுதும் இவரது முகநூல் பக்கத்தில் கண்ட கவிதை ஒன்று ஒரு கணம் நெகிழச் செய்தது.
இந்த இரவில்
இன்னும் அன்பிற்கினிய
இருவர் பிரியாமல்
இருக்க வேண்டும்
இன்னும் கூடடையாத பறவை
திரும்பிட வேண்டும்
இன்னுமொரு தெரு நாய்
அடிபடாமல் இருக்க வேண்டும்
இன்னும் முடியாமல் இருக்கும்
தலையணை நனைதல்கள் உறைந்திட வேண்டும்
இன்னுமொரு தற்கொலை
நடவாமல் இருக்க வேண்டும்
இன்னும் பசியடங்காமல்
ரத்த தீற்றல்களுடன்
அலையும் ஓநாய்கள்
அமைதியடைய வேண்டும்
பேரன்புடன் இரட்சிக்கும்
சாத்தானே இந்த இரவு மட்டும்
இரவாகவே இருந்திட
வேண்டும்
லீttஜீs://ஷ்ஷ்ஷ்.யீணீநீமீதீஷீஷீளீ.நீஷீனீ ரீணீக்ஷீரீஹ்னீ?லீநீ_றீஷீநீணீtவீஷீஸீ=tவீனீமீறீவீஸீமீ