வேலைக்குப் போகாதீர்கள்!





மனப்பூர்வமாக வேலை செய்யாதவர்களும் சாதிக்கலாம்; ஆனால் அந்த சாதனையில் வெறுமையே மிஞ்சும். அந்த அரைகுறை வெற்றி எங்கும் கசப்புணர்வையே பரவ விடும்!
- அப்துல் கலாம்

உங்கள் பணி இடத்தில் இருவரிடையே ஏதோ ஒரு கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. எளிய உதாரணமாக, ஒருவர் காலை இன்னொருவர் மிதித்துவிடுகிறார் என்று வைப்போம். வேண்டுமென்றே மிதித்ததாக மிதிபட்டவர் சொல்கிறார். அது தற்செயல் என்பது மிதித்தவரின் வாதம். மென் குரல்களில் துவங்கிய இந்த வாதம் மெல்ல வலுக்கிறது. கனத்த வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. ஒரே இரைச்சல், கூப்பாடு. பொறுப்பில்லாதவர்களின் சண்டைகள் தேவையற்ற பழைய சாக்கடைகளைக் கிளறிக் கொண்டு வரும் என்பதால் சூழ்நிலையே நாற்றமடிக்கத் துவங்குகிறது.
உங்களாலும், உங்களைப் போன்ற சக பணியாளர்களாலும் இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. என்ன செய்வீர்கள்? இரண்டு பேருக்கும் பொதுவாக நின்று அவர்களின் குரல்களை விழுங்குகிற மாதிரி சப்தமிட்டுக் கொண்டு, ‘‘மனுஷன் இங்க வேலை பார்க்க வேண்டாமா?’’ என்று உள்ளே புகுவீர்கள். அந்த மட்டில் சண்டை நின்றால் சரி. அது தொடரும் பட்சத்தில் உங்களின் வாதம் மற்றும் சமாதானக் குரல்கள் எப்படி இருக்கும்? ‘‘இந்த அல்ப விஷயத்திற்கு சண்டை இடுவது தவறு... பொறுமை தேவை... கேட்பவர்கள் சிரிப்பார்கள்... சகிப்புத்தன்மை தேவை...’’ என்றெல்லாம் தூள் கிளப்புவீர்கள்.

அதைத் தொடர்ந்து இருவரும் உங்களிடம் அவரவர் வாதத்தை எடுத்து வைப்பார்கள். நீங்களும் பொறுமையாகக் கேட்டு, ‘‘இது சரி, இது தப்பு...’’ என்று பாரபட்சமின்றி நடுநிலையோடு ஆராய்ந்து தீர்ப்பை வழங்குவீர்கள்.
பிரச்னையைத் தீர்க்க தானாகவே முன் வந்த உங்கள் மனநிலைக்கு பாராட்டுகள். அமைதியைக் காக்கும் தூதராக நீங்கள் இருப்பது நல்ல விஷயமே. ஆனால்..?
பிரச்னை துவங்கும் இடமும் அதுதான். உங்கள் தீர்ப்பும், வாதங்களும் உச்ச நீதிமன்றம், உலக நீதிமன்றங்களின் தரத்தில் சரியாகவே இருக்கின்றன. சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் இது அடுத்தவர்களின் பிரச்னைதானே! சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்னையில் தலையிட்டு முடிவுக்கு வருவது எளிது. இதே நடுநிலையோடும், நேர்மையோடும் நாம் நமது சொந்தப் பிரச்னைகளில் நடந்துகொள்கிறோமா என்ன..? கொஞ்சம் நியாயமாய் யோசியுங்கள். பிரச்னை இதுதான்... நம்மால் ஒரு நாட்டின் பிரதமருக்கு எப்படி ஆள வேண்டும் என்று ஆலோசனை வழங்க முடியும். ஆனால், நம் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட மாபெரும் அல்ப பிரச்னைக்கு தீர்வு காண இயலாது. இதுதான் யதார்த்தம்.



அடுத்தவருக்கு உபதேசம், அறிவுரை வழங்கும்போதெல்லாம் பலருக்கு பூமியில் இருந்து பாதங்கள் ஒரு இஞ்ச்சுக்கு உயர்ந்து விடுகின்றன. அந்த அறிவுரைகள் மெல்ல மெல்ல உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதாகவும், அடுத்தவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நிரூபிப்பதாகவுமே அமையும்.
இந்தச் சூழ்நிலையில் உங்கள் தீர்ப்பு எப்படி மதிக்கப்படும்? ஏதோ நீங்கள் கொஞ்சம் அவர்களை விட சீனியர் என்றால், உங்களை சற்று நேரம் மதிப்பார்கள்; பின் மதிக்கிற மாதிரி நடிப்பார்கள். உங்கள் முதுகுக்குப் பின்னால், ‘‘பெரிசா அட்வைஸ் பண்ண வந்துட்டான்...’’ என்றுதான் பெரும்பாலும் விமர்சிப்பார்கள்.

இந்த உலகில் யாருக்கு என்ன தெரியாமல் இருக்கிறது? எல்லோருக்கும் எல்லாம் தெரியும். நமது ஆலோசனைகளைக் கேட்டு வாழ வேண்டிய நிலையில் யாரும் இல்லை. எனவே, உங்கள் விலை மதிப்பற்ற அறிவுரைகள் உங்களிடமே இருக்கட்டும். சொல்லுங்கள்... யாராவது உங்களைக் கேட்டால் ஆலோசனை மழை பொழியுங்கள். கேட்டால் மட்டுமே..!
சரி, முதலில் ஏற்பட்ட சண்டைக்கு வருவோம். பணி இடச்சூழல் கெடும்போது உங்களால் வேலை பார்க்க இயலாதுதான். அதே நேரம் அடுத்தவர் விஷயத்தில் தலையிடக் கூடாதென நாம் ஒதுங்கிப் போனாலும் அது பொறுப்பின்மையாகக் கருதப்படும். எனவே, அமைதி ஏற்படாத சூழலில் உங்கள் உடனடி மேல்நிலை அலுவலருக்குத் தகவல் கொடுத்து விடுங்கள்.

நீங்கள் தலையிடவே கூடாதா என்றால், தலையிடலாம்... உங்கள் மேலதிகாரி உங்களுக்கு, ‘‘இந்தப் பிரச்னையை சால்வ் பண்ணுப்பா...’’ என்று அனுமதி அளித்தால் தலையிடலாம். அதுவே நம் நீண்ட கால பணிப் பாதுகாப்புக்கு நல்லது. உங்களுக்கு உரிமை, அதிகாரம் வழங்கப்படாத விஷயங்களில் நீங்கள் தலையிட்டு தீர்வு காண முயல்வது ஆபத்தானது. நாளைக்கு சண்டையிட்ட இருவரும் சமாதானமாகப் போய்விட்டால், நீங்கள் சொன்ன வார்த்தைகளே உங்களுக்கு எதிராகத் திரும்பும். உங்களின் உரிமையற்ற தலையீட்டால் ஏதாவது தவறு நேர்ந்தால், உங்கள் மேலிடமே, ‘‘இதில் தலையிட நீ யார்? யார் உனக்கு அதிகாரம் கொடுத்தது? பிறகு நாங்கள் எல்லாம் எதுக்கு இருக்கோம்?’’ எனக் குற்றம் சாட்டும்.
கேட்காமல் திணிக்கப்படும் அறிவுரைகளுக்கும் உளறல்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.

போன வருட விலைவாசி இந்த வருடம் இல்லை. எல்லாமே உயர்ந்திருக்கின்றன. அவ்வப்போது டெங்கு, சிக்குன் குனியா, மெட்ராஸ் ஐ... என சீசன் நோய்கள் வருகின்றன. குழந்தைகளை எந்தப் பள்ளியில் சேர்ப்பது என்று தெரியவில்லை. கடன் தொந்தரவு வேறு. சிலருக்கு வீடு கட்டியதில் பிரச்னை. பலருக்கு வீடே பிரச்னை.
இந்தப் பிரச்னைகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது நம்மில் அனைவருக்கும் இருந்தே தீரும். உயிர் வாழும் அனைவரும் காற்றாலும், பிரச்னைகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களைத் தவிர எல்லோரும் பிரச்னை இல்லா வாழ்வில் இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்கள்! உங்கள் இன்னல்கள் யார் காதிலாவது விழுந்து விடாதா என்று சுமைதாங்கி தேடுகிறீர்கள். பணி இடத்தில் உங்களுக்கு நெருக்கமாக நீங்கள் கருதுபவர்களுடன் நீங்கள் உங்கள் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். தாராளமாய் சொல்லுங்கள்... அவர்களுக்கும் அது ஒரு நேரப்போக்காய் அமையும் அல்லவா?

பகிரப்படும் சோகங்கள் பாதியாகக் குறையும் என்பது சரி... அதற்காக உங்களது சொந்த வாழ்க்கையை, அந்தரங்கத்தை அடுத்தவர்களிடம் தெரிவிக்கின்றீர்கள். ஒருவேளை தவறான ஆளிடம் சொல்லிவிட்டால், அவர் கண்டிப்பாக இன்னொருவரிடம் சொல்வார். ‘‘இவளுக்கு இந்த மாதிரி பிரச்னை... முழிச்சிட்டிருந்தா... நான்தான் அட்வைஸ் பண்ணேன்...’’ என்று தன்னைப் பெரிய ஆளாக்கிக்கொள்வார். நீங்கள் அடுத்தவரின் பொழுதுபோக்கு மற்றும் வாதப் பொருளாவீர்கள். இது உங்கள் மன வேதனையை இன்னும் அதிகப்படுத்தும். நீங்கள் இன்னும் மதிப்பிழப்பீர்கள்.
உதாரணமாக, ‘எனது மகள் சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறாள்’ என சக ஊழியரிடம் நீங்கள் புலம்பினீர்கள் என்றால், அவர் அடுத்த நொடியே குழந்தை வளர்ப்புக்கலையில் நிபுணராக மாறிவிடுவார். பீறிட்டுக் கொண்டிருக்கும் அவரது அறிவைக் களத்தில் இறக்குவார். அதை விடக் கொடுமை, தற்செயலாக அவர் உங்கள் மகளைப் பார்த்தால், ‘‘என்னம்மா... இப்ப நல்லா படிக்கிறியா...’’ என்று நீங்கள் அவரது உதவி கோரியதை போட்டு உடைப்பார்.

இதற்கு, உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம்! நீங்கள் முதிர்ச்சியடையவில்லை என்று பொருள். பிரச்னை இல்லாத வாழ்வு சாத்தியம் என்று நம்புகிற பேராசைக்காரர் அல்லது முட்டாள் நீங்கள் என்றும் பொருள். உங்கள் பசிக்கு நீங்கள்தானே சாப்பிட்டாக வேண்டும்? உங்கள் சுமைகளை நீங்கள்தானே சுமந்தாக வேண்டும்?
ஒரு விஷயத்தை வெளியே சொல்லும் முன் ஒரு தடவை யோசியுங்கள். நீங்கள் சொன்ன வார்த்தைகள் அப்புறம் உங்களுக்கு சொந்தமில்லை. நீங்கள் உங்களை இழப்பதும் ஒன்றுதான், உங்களது சொற்களை இழப்பதும் ஒன்றுதான். உங்கள் பலவீனங்கள் வெளிப்படுவது உங்களுக்கு நன்மை தராது. சுய பரிதாபங்களால் நாளடைவில் நீங்களே உங்கள் மீது மதிப்பிழந்து விடுவீர்கள்.
யாரையும் நம்பக் கூடாதா, நண்பர்கள் பிறகு எதற்காக? என நீங்கள் வாதிட்டால் உண்மையான, தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆனால், அவர்களும் உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.
அவர்களிடமும் புலம்பாதீர்கள். கலந்துரையாடுங்கள். புலம்புவதற்கும், தகவல் தெரிவிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதல்லவா!
(வேலை வரும்...)