கவிதைக்காரர்கள் வீதி





*  படுக்கையறையில் நான்
    வெளியே வானம்
    விழித்திருக்கிறது.
 
*  வெள்ளத்தில் மிதக்கும்
    காகிதக் கப்பல்
    நனைந்துவிடாதபடி
    குடை பிடித்துக் கொண்டிருந்தார்
    கடவுள்.
 
*  மழை நாட்களில்தான்
    எத்தனை குளியல்
    மரங்களுக்கு

*  நீண்ட மௌனத்திற்குப் பிறகு
    வெளிப்படும் வார்த்தைகளில்
    ஏதோ ஒரு
    உண்மை இருக்கிறது.


*  மொட்டைப் பனைமரத்தில்
    அமர்ந்திருக்கும் ஒற்றைக் காகம்
    தூக்கத்தில் கூட
    யோசிக்க வைக்கிறது

*  கடந்த காலக் குப்பையில்
    எது கிடைத்தாலும்
    புதையல்தான்.

*  எவராலும்
    கண்டுபிடிக்க முடியாத
    மறைவிடம் தேடினேன்
    எங்கேயும் பின்தொடர்ந்து
    வந்துவிடுகிறது
    நிழல்.

*  அலுவலகப் பணி நிமித்தம்
    முகமன் கூறி
    கைகுலுக்கும்போது
    புன்னகைப் பிரதி ஒன்றை
    வெளிப்படுத்த நேர்கிறது.
ப.மதியழகன்