
‘‘தந்தை, மகன் கேரக்டர்களில் சத்யராஜ், ரஜினி கலக்கிய ‘மிஸ்டர் பாரத்’ படப்பிடிப்பில் எடுத்த படம் இது’’ என அவர்களுடன் கைகோர்த்தபடி நடுவில் நிற்கும் எஸ்.பி.முத்துராமன், அவர்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார்...
‘‘நான் இயக்கிய ‘ஒரு கோயில் இரு தெய்வங்கள்’ படத்திற்காக நடிகர்கள் தேர்வு நடந்தபோது என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தார் சத்யராஜ். நடித்துக் காட்ட சொன்னபோது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வசனத்தை பேசிக் காட்டினார். ‘எல்லாரும் இதையேதானே செய்யுறாங்க. வேற ஏதாவது வித்தியாசமா டிரை பண்ணிட்டு வா’ன்னு அனுப்பி வச்சேன். அப்போ போனவர், ரொம்ப நாள் கழிச்சு என்னோட ‘பாயும் புலி’ படத்தில் சின்ன கேரக்டரில் நடிச்சார். ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் அப்பா கேரக்டருக்கு சத்யராஜை நடிக்க வைக்கலாம்னு முடிவு செய்தபோது, அது சரிவருமா என்று சிலருக்கு சந்தேகம் இருந்தது. ‘நாம் இருவர்’ படத்தில் அப்பா கேரக்டரில் நடித்தபோது வி.கே.ராமசாமிக்கு 20 வயசுதான். ஆனால் அவ்வளவு பிரமாதமா பண்ணி மெய்யப்ப செட்டியாரின் பாராட்டைப் பெற்றார். எல்லா கேரக்டர்களையும் பண்றவங்கதான் முழுமையான நடிகர் ஆவார்கள். அந்த வகையில் சத்யராஜ் இந்தப் படத்தில் ரஜினிக்கு சமமான கேரக்டரில் நடித்து பெயர் வாங்கினார்.
என் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் ‘எங்கேயோ கேட்ட குரல்’. வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினியை ஹீரோவாக்கி அந்தப் படத்தை எடுத்தோம். ரஜினியும் நானும் எப்போதுமே ஒளிவுமறைவின்றி பேசுவோம். ஒரு கேரக்டரில் ஏதாவது நெருடல் என்றால், ‘இந்த இடத்தில் சரியில்ல’ என்று தெளிவாகச் சொல்லிவிடுவார். கேரக்டரை முழுமையாக உள்வாங்கி மனசுக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார். ஸ்டைல், கமர்ஷியல் ஃபார்முலா படங்களிலேயே நடித்துக்கொண்டிருந்த ரஜினியை மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைத்து ‘ஆறிலிருந்து அறுபது வரை’ கதையைச் சொன்னோம்.
‘இவ்வளவு சென்டிமென்ட்டாக இருக்குதே... சரியா வருமா’ என்று சந்தேகமாகக் கேட்டார். ‘கொஞ்சம் எடுத்துக் காட்டுறோம். நல்லாயிருந்தா நடிங்க. இல்லைன்னா விட்டுடலாம்’னு சொல்லி 5000 அடி வரை எடுத்து ரஜினியிடம் போட்டுக் காட்டினோம். ‘பிரமாதமா வந்திருக்கு. கண்டிப்பா பண்ணலாம்’னு சொல்லி நடிச்சார். ரஜினிக்குள் இப்படியொரு அபாரமான நடிகர் இருக்கார் என்று ரசிகர்களை உணர வைத்த படம் அது. அந்தப் படம் அவருக்கு மாறுபட்ட அடையாளத்தைக் கொடுத்ததோடு, சிறந்த நடிப்புக்காக விருதும், எனக்கு சிறந்த இயக்கத்திற்கான விருதும் கிடைத்தது.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்