கர்ணனின் கவசம்





‘‘ரொம்ப நடிக்காத. எழுந்திரு...’’ அலட்சியமாக சிரித்த ராஜி, விமானத்தைக் கிளப்பினாள். ஆதித்யா தன் முன் நீட்டிய காமதேனுவின் பாலை தன் கையால் கூட அவள் தொடவில்லை.
‘‘எனக்கு இது தேவைப்பட்டிருந்தா, அடையாளத்துக்கு நீ காட்டினப்பவே எடுத்திருக்க மாட்டேனா..? ‘அம்மா... தாயே... தெய்வமே’ன்னு எல்லாம் உருகி வழியாம சீட்ல உட்காரு...’’
பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்தான். இதையெல்லாம் பிரமை பிடித்தபடி கவனித்த தாராவின் பிடி நழுவியது. தரையில் விழப்போன விஜயாலய சோழனின் வாளை சட்டென்று ஆதித்யா பிடித்தான்.
‘‘முப்பாட்டன் சொத்து கை நழுவிடக் கூடாதுனு பார்க்கறியா?’’ விமானத்தை டேக் ஆஃப் செய்யாமல் தரையில் ஓடவிட்டபடியே ராஜி கேட்டாள்.
‘‘சிதறிடக் கூடாதுன்னு பார்க்கறேன்...’’ ஆதித்யாவின் பதிலில் அமைதி தெரிந்தது.
‘‘உள்ளூர பயப்படறியா?’’
‘‘ஆமா...’’
‘‘காரணம்?’’
‘‘ரவிதாசன்...’’ மரியாதையுடனேயே பதிலளித்தான். கேட்ட ராஜியின் முகத்தில் பெருமை சுடர்விட்டது.
‘‘ஆதி... என்ன நடக்குது இங்க? நீங்க ரெண்டு பேரும் எதைப் பத்தி பேசறீங்க?’’ குழப்பத்துடன் கேட்ட தாராவைப் பார்த்து ராஜி நகைத்தாள்.
‘‘இவனும் நானும் பழங்
கதையை பேசறோம்...’’
‘‘அது கறிக்கு உதவுமா?’’
‘‘இப்போதைக்கு உயிரை காப்பாத்திக்க நிச்சயம் உதவும்...’’
தன்னைப் பார்க்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடி பதிலளித்த ராஜியை பார்க்கப் பார்க்க தாராவுக்கு கோபம்
வந்தது.
‘‘ஆதி... வாட் இஸ் திஸ்? இவ என்ன சொல்றா?’’
‘‘ஷ்... இவங்களை மரியாதை குறைவா பேசாத...’’

‘‘ஏன்? அவ்வளவு பெரிய
அப்பாடக்கரா?’’
‘‘ஆமா. சூத்திரதாரி...’’
‘‘இப்ப நடந்துக்கிட்டு இருக்கிற விஷயங்களுக்கா?’’
‘‘காலம் காலமா தொடர்கிற வேட்டைக்கு...’’
‘‘அதனாலதான் நமக்கு நட்பா இருக்காங்களா?’’
‘‘இல்ல... நம்ம முயற்சியை தடுத்துட்டு இருக்காங்க...’’
‘‘நீ என்ன சொல்ற?’’
‘‘உண்மையைச் சொல்றேன்...’’
‘‘அப்ப நாம தேடி வந்த நண்பர் இவங்க இல்லையா?’’
‘‘தேடாம இருந்தாலும் இவங்களை நாம நட்பாதான் பார்க்கறோம்...’’
‘‘அப்படீன்னா இவங்க நம்மை எதிரியா பார்க்கறாங்களா?’’
‘‘ஆமா... இல்லை...ன்னு ரெண்டு மாதிரியும் இதுக்கு பதில் சொல்லலாம்...’’
‘‘இப்ப நாம எங்க போய்க்கிட்டு இருக்கோம்...’’
‘‘ஜெயிலுக்கு...’’
‘‘வாட்?’’
‘‘யெஸ் தாரா... இவங்க நம்மை கைது செய்திருக்காங்க...’’
‘‘யார் இவங்க?’’
‘‘நூறு பேர் கொண்ட கவுரவர்கள்ல ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு பிறந்த பெண் குழந்தை இவங்கதான்..!’’
‘‘எ ன் மனைவி மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, ஆதித்யாவை நம்ப நான் தயாரா இல்ல...’’ அமைதியைக் கிழித்த ரவிதாசனின் குரல், அங்கிருந்தவர்களின் நரம்பை சுண்டி இழுத்தது.
‘‘சரி, இப்ப என்ன பண்ணலாம்?’’
கேட்ட சூ யென்னை உற்றுப் பார்த்தான் ரவிதாசன். ‘‘நீதான் சொல்லணும்...’’
‘‘நானா?’’
‘‘ஆமா. ருத்ரனோட இதயம் பாதுகாப்பா இருக்கா?’’
‘‘இருக்கு...’’
‘‘சரி, விதுரரை எங்க சந்திச்சீங்க? எப்படி திரிசங்கு சொர்க்கத்துக்கு வந்தீங்க?’’
‘‘இப்ப அதை அவசியம் தெரிஞ்சுக்கணுமா?’’
‘‘அது தெரியாம தாராவையும், ஆதித்யாவையும் மட்டுமில்ல... சுரங்கத்துல இருக்கிற ஒன்பது பேரையும் நாம அழிக்கவும் முடியாது. கர்ணனோட கவசத்தை கைப்பற்றவும் முடியாது...’’
‘‘சுரங்கமா? அப்ப நாம வச்ச நெருப்புல அந்த ஒன்பது பேரும் எரியலையா?’’ சட்டென்று ஃபாஸ்ட் கேட்டான்.
‘‘இல்ல. தப்பிக்கணும்னு நினைச்சு செஞ்ச காரியம் அவங்க கழுத்துக்கே சுருக்கா அமைஞ்சுடுச்சு...’’
‘‘அப்ப அது இறுகிடும்தானே?’’ ஆனந்தின் குரலில் மகிழ்ச்சி தென்பட்டது.
‘‘அதுக்குள்ள ஆதித்யா அவங்களை காப்பாத்திடுவான்...’’
இயல்பாகச் சொன்ன ரவிதாசனை திகைப்புடன் ஃபாஸ்ட்டும், சூ யென்னும் பார்த்தார்கள்.
‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க?’’ படபடப்புடன் கேள்வியை இறைத்த ஆனந்தை இகழ்ச்சியாகப் பார்த்தான் ரவிதாசன்.
‘‘உங்க எல்லாரையும் விட எனக்கு ஆதித்யாவை நல்லா தெரியும். அவன் சூரியன். அவ்வளவு சுலபத்துல அவனை கட்டிப் போட முடியாது. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. விதுரரை எங்க சந்திச்சீங்க?’’

‘‘அது...’’ இழுத்த சூ யென்னின் சட்டையை கொத்தாகப் பிடித்த ரவிதாசன், ‘‘நிலமையை புரிஞ்சுக்க. எரிஞ்சுக்கிட்டு இருக்கிற மாளிகைக்குக் கீழ அந்த ஒன்பது பேரும் இருக்காங்க. ராணுவத் தளவாட உற்பத்தில அவங்களை அடிச்சுக்க ஆளில்ல. உண்மைல அவங்க நவக்கிரகத்தோட பிம்பங்கள். இப்போதைக்கு அவங்க மாய மாளிகையோட ரகசிய சூத்திரங்களை விடுவிக்க முடியாம திணறிகிட்டு இருக்காங்க. அந்த ஃபார்முலாவை பிரேக் பண்ண ஆதித்யாவால முடியும். அதை நாம தடுக்கணும்னா விதுரரை நாம கட்டிப் போடணும். அதுக்கு துரோணர் உதவுவார். இதெல்லாம் சரிவர நடக்கணும்னா, விதுரரை எங்க, எப்ப, எப்படி சந்திச்சீங்கனு நீங்க சொல்லியாகணும்...’’
‘‘சொல்றேன்...’’ என ஃபாஸ்ட் ஆரம்பித்தான்.
அதைக் கேட்பதற்காக தன் வலது கையை கன்னத்தில் வைத்தபடி சாய்ந்து அமர்ந்தாள் பாலா. அவளது ஆள்காட்டி விரலின் நக இடுக்கில் இருந்த சாட்டிலைட் போன் ‘ஆன்’ ஆனதற்கு அறிகுறியாக பச்சை நிற ஒளியை புள்ளியாக உமிழ்ந்தது.
கண்ணோரம் இதைக் கவனித்த சங்கர் புன்னகைத்தான்.
திரிசங்கு சொர்க்கத்தில் ஐந்து சாவிகளாக பிரிந்திருந்த குந்தி, ஒன்று சேர ஆரம்பித்தாள்.
ஸ்பேஸ் ஸ்டேஷனில் அமர்ந்தபடி சட்டீஸ்கர் பகுதியை கவனித்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் புருவம் சுருங்கியது. விடைத்த தன் வலது பக்க காதை கவனித்தார். நிதானமாக எழுந்தார். புவியீர்ப்பு விசை இல்லாததால் அந்தரத்தில் பறந்த
படியே சாக்கடை மூடி போல் தென்பட்ட பகுதியை திருகினார். கதவு திறந்தது.
இரும்புக் கம்பியை பிடித்த
படியே வெளியே வந்தவர், பழையபடி மூடியை மூடினார். பிடிப்பை தளர்த்துவதற்கு முன்பு அங்கிருந்த நீளமான பெல்ட்டின் நுனியை தன் இடுப்பில் இருந்த சங்கிலியில் இணைத்தார். பின்னர் அரைவட்டமாகவும், முழு வட்டமாகவும் பிரபஞ்ச வெளியில் சுற்ற ஆரம்பித்தார்.
ஆனால், ஸ்பேஸ் ஸ்டேஷனை விட்டு எங்கும் அவர் செல்லவில்லை. இடுப்பில் இருந்த பெல்ட் அதை அனுமதிக்கவும் இல்லை. சுற்றியபடியே ஸ்பேஸ் ஸ்டேஷனின் மறுமுனைக்கு வந்தார். கைகளை நீட்டி அங்கிருந்த இரும்பு வளையத்தை பிடித்தார்.

வெளியை கிழித்த கால்கள் மெல்ல ஊசலாடின. அங்கிருந்தபடியே வடக்குத் திசையை உற்றுப் பார்க்க ஆரம்பித்தார்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த எண்ணற்ற நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரேயொரு ஒளி மட்டும் இவரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. ஒளியின் வேகத்தை கணக்கிட்டவர், அது தன்னை நெருங்கும் நொடிக்காக அசையும் உடலுடன் காத்திருந்தார்.
புள்ளியின் விட்டம் மெல்ல மெல்ல அதிகரித்தது. சிறு புள்ளி, சின்ன பந்தாகி, டேபிள் டென்னிஸ் பால் ஆக உருமாறி, டென்னிஸ் பந்தாக விரிந்து, கால்பந்தைப் போல் பெரியதாகி அவர் இருந்த ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு சில நூறு மைல் தள்ளி நின்றபோது -
அரைவட்ட வடிவ கோபுர கலசமாக மாறியிருந்தது.
அதுவும் ஒரு ஸ்பேஸ் ஸ்டேஷன்தான். இவரைப் போலவே அதற்குள்ளிருந்தும் ஒரு மனிதர் மூடியைத் திறந்து வெளியே வந்தார். இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டார். அரை வட்டமாகவும், முழு வட்டமாகவும் சுற்றியபடியே இவர் இருந்த இடத்தை நோக்கி வந்தார். இவருக்கு அருகிலிருந்த கொக்கியைப் பிடித்தபடி அந்தரத்தில் ஆடினார்.
‘‘என்ன திடீர்னு இந்தப் பக்கம்?’’ வந்தவரை நோக்கி கேட்டார்.
‘‘காரணமாத்தான். உன் பையன் ஏவின பிரும்மாஸ்திரம் இப்ப கிருஷ்ணர்கிட்ட இல்ல...’’
‘‘என்னது?’’
‘‘ஆமா. பீஷ்மர் மூலமா அது நவக்கிரகங்கள் கைக்கு போயிடுச்சு...’’
‘‘ஈஸ்வரா...’’
‘‘ஐந்து உயிர்களைப் பறிக்காம அது அடங்காது...’’
‘‘என் மகன் எங்க?’’
‘‘அடுத்த பிரம்மா பதவி அவனுக்குத்தான? தவம் செஞ்சுட்டு இருக்கான்... அதை கலைக்க முடியாது...’’
‘‘இப்ப நான் என்ன செய்யணும்?’’
‘‘உங்கப்பா பரத்வாஜ மகரிஷி உனக்கு சொல்லித் தந்த சிற்ப ரகசியத்தை வெளியிடணும்... மதுரை வெள்ளியம்பல நடராஜரை காப்பாத்தணும்...’’
‘‘வேற வழியே இல்லையா?’’
‘‘இல்ல... ஏன்னா, ஏகலைவன் உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு... அன்னிக்கி கட்டை விரலை வாங்கின. அந்தப் பழி இப்ப வரைக்கும் உன்னைத் துரத்திட்டு இருக்கு. இந்த நிலைல திரும்ப தப்பு பண்ணப் போறியா..?’’ அழுத்தத்துடன் கேட்டார் வந்தவர். அவரையே உற்றுப் பார்த்தார் அங்கிருந்தவர்.
வந்தவர் விதுரர். அங்கிருந்தவர் துரோணர்.

‘‘இது எந்த இடம்?’’
‘‘சிறை...’’
‘‘இங்கிருந்து தப்பிக்க முடியுமா?’’
‘‘அதைத்தான் யோசிச்சிட்டு இருக்கேன்...’’
‘‘நம்ம நண்பர்கள் யாருனு தெரியுமா?’’
‘‘தெரியாது...’’
‘‘அவங்க இப்ப எங்க இருக்காங்க?’’
‘‘நமக்குக் கீழ...’’
‘‘ஏய்... நிஜமாவா சொல்ற?’’
‘‘ம்...’’
ஆதித்யாவும், தாராவும் ஒருவர் முதுகில் மற்றவர் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தார்கள்.
‘‘எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?’’ தாராவின் குரலில் திகைப்பு.
‘‘மகாமேருவை பார்த்திருக்கியா?’’ என்றபடி அவள் பக்கமாகத் திரும்பினான் ஆதித்யா.
‘‘பார்த்திருக்கேன்...’’
‘‘சைட்லேந்து பார்த்தா அது பிரமிடு மாதிரி இருக்கும். ஆனா, டாப் ஆங்கிள்ல பார்த்தா,
சதுரம்...’’
‘‘ம்...’’
‘‘பெரிய சதுரத்துக்குள்ள ஏராளமான சதுரமும், முக்கோணமும் குட்டி குட்டியா இருக்கும்...’’
‘‘ம்...’’
‘‘ஒருவகைலே இதை புதிர் மாதிரின்னு சொல்லலாம். சின்ன வயசுல நாமும் விளையாடியிருப்போம். பத்திரிகைல அரைப்பக்கத்துக்கு ஒரு பாக்ஸை வெளியிட்டிருப்பாங்க. ‘டிங்கு அந்தப் பக்கம் போகணும். வழியை கண்டுபிடிங்க பார்க்கலாம்’னு கேட்டிருப்பாங்க. அந்த பாக்ஸ் உள்ள சின்னச் சின்னதா கட்டங்கள் இருக்கும். அதுல பல பாதைகள் விரியும். ஆனா, ஒரு வழியைத் தவிர மத்தது எல்லாமே முட்டுச்சந்து. சரியான ரோட்டை பென்சில்ல வரையணும். இதுதான் சவால்...’’
‘‘நினைவுல இருக்கு...’’
‘‘குட். இப்ப நிஜத்துல அந்த விளையாட்டைத்தான் நாம விளையாடப் போறோம். ஏன்னா, நம்மை மகாமேரு சிறைலேதான் அடைச்சிருக்காங்க. ஒரு முனைல நாம இருக்கோம். மறுமுனைல நம்ம நண்பர்கள் இருக்காங்க...’’
‘‘ஒருவேளை அவங்க மறுமுனைல இல்லைனா?’’
‘‘யந்திரம் சுத்தாது...’’
‘‘யந்திரம்?’’
‘‘ம்... மகாமேரு உண்மைல ஒரு யந்திரம். இது சுத்தணும்னா இருமுனைலயும் ஆட்கள் தேவை. அவங்களும் நம் தரப்பு ஆட்களா இருக்கணும்...’’
‘‘எல்லாம் சரி ஆதி... யந்திரம் எதுக்கு சுத்தணும்?’’
‘‘அப்பதானே கர்ணனின் கவசம் கிடைக்கும்...’’
‘‘வாட்?’’
‘‘யெஸ் தாரா... மகாமேரு ஒரு சாவி. அதைப் போட்டு திருகினா பூட்டு திறக்கும்...’’
‘‘மை காட்... அதனாலதான் இந்த சிறையை - ஐ மீன் சாவியை - மகாமேரு மாதிரியே வடிவமைச்சிருக்காங்களா?’’

‘‘எக்ஸாக்ட்லி...’’
‘‘ஸோ, கர்ணனோட கவசத்தைக் கைப்பற்ற நம்மையும் நம்ம நண்பர்களை யும் ப்ளான் பண்ணி இந்த சாவிக்குள்ள தள்ளியிருக்காங்க... இல்லையா?’’
‘‘ஆமா...’’
‘‘அப்ப கூடிய சீக்கிரமே பூட்டைத் திறக்க இந்த ஜெயிலை சுத்த வைப்பாங்கனு சொல்ற...’’
‘‘அதே... அதே...’’
‘‘ஓகே. வா தப்பிக்க வழி இருக்கான்னு பார்க்கலாம்...’’
‘‘அதுக்கு பதிலா இன்னொண்ணு செய்யலாம்...’’
‘‘என்னது?’’
‘‘யந்திரம் சுத்தாதபடி சாவியோட நுனியை மழுங்கடிக்கலாம்...’’
கண்கள் விரிய அவனைப் பார்த்தாள். ‘‘காதுல பூ சுத்தறியா?’’
‘‘இல்ல தாரா... ஜெயிலோட அமைப்பையே தலைகீழா மாத்திடலாம்...’’
‘‘எப்படி முடியும்?’’
‘‘சிற்ப ரகசியம். வெள்ளியம்பல நடராஜரின் மகிமை...’’ என்று ஆதித்யா சொல்லி முடிக்கவும், அவர்கள் இருந்த சிறை சுற்ற ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.
(தொடரும்)